கண்தேடுவது எல்லாம் பழமையை

கண்தேடுவது எல்லாம் பழமையை

2 mins read
4a8c9420-2694-49bf-b11f-6fc5a75b23df
-

கிஷன் சிங் ஏழு வய­தில் தாயாரு­டன் கிளார்க் கீ வட்­டா­ரத்­தில் வியா­பா­ரச் சந்தை ஒன்­றுக்­குச் சென்­ற­போது அங்கு விற்­கப்­பட்ட ஆர்க்­கிட் சித்திரம் பொறிக்கப்பட்ட பழைய $1 பணத்தாளைக் கண்டு வியந்­தார். இதைக் கவனித்த அவரது தாயார் அந்த நாண­யத் தாளை $5 கொடுத்து கிஷ­னுக்­காக வாங்­கி­னார். இன்­று­வரை அதைப் பத்திர­மாக வைத்­துள்ள கி‌ஷன், பழம்­பொ­ருள்­கள் மீதான நாட்­டம் அன்று தொடங்­கி­ய­தா­கக் குறிப்­பிட்­டார்.

எட்டாவது வய­தில் தம் தாத்தா வைத்­தி­ருந்த 1983ஆம் ஆண்டு கடல்­நா­க நாண­யத்தைப் பெற்றுக்­கொண்­டதை அடுத்து பழம்­ பொருள்­க­ளைச் சேக­ரிப்­ப­தில் கிஷனுக்கு ஆர்­வம் பெரு­கி­யது.

தமது தொடக்­கப்­பள்­ளி­யில் சிற்றுண்டிக் கடைக்­கா­ர­ரி­டம் கேட்­டுப் பழைய பணத்தாள்­களை மாற்­றும் பழக்­க­மும் இவ­ருக்கு இருந்­தது. செல்­லும் இடமெல்லாம் பழம்­பொ­ருள்­களே தம் கவ­னத்தை ஈர்த்­த­தாக, மனி­த­வளத் துறை­யில் பணி­பு­ரி­யும் கிஷன் சிங், 26, நினைவுகூர்ந்தார்.

தபால் முத்­தி­ரை­கள், பழைய சிக­ரெட் தக­ரப் பெட்­டி­கள், புகைப்­ப­டக் கரு­வி­கள், இசைத்­தட்­டு­கள், நாண­யங்­கள், பூட்­டு­கள், கடி­கா­ரங்­கள், சீனப் புத்­தாண்­டிற்­கென வெளி­யி­டப்­படும் சிறப்பு நாண­யங்­கள் என இவர் பல­வற்றைச் சேக­ரித்­துள்­ளார்.

சிங்­கப்­பூர் 1965ல் மலே­சி­யாவை விட்டுப் பிரிந்த­போது வெளி­யான 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தாள், பழைய சிங்­கப்­பூர் குடி­யு­ரிமைச் சான்­றி­தழ்­கள், 1965ஆம் ஆண்டில் அர­சி­யல் கட்­சி­க­ள் வெளியிட்ட அறிக்­கை­கள் போன்­ற­வற்­றின் பிர­தி­க­ளை­யும் இவர் சேக­ரித்­துள்­ளார்.

பழைய பொருள்­களைச் சேக­ரிப்­பதுடன் அவை காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் கண்டு ரசிக்கவும் தமக்­குப் பிடிக்­கும் என்­றார் கிஷன். உதா­ர­ணத்­திற்கு பழைய புகைப்­ப­டக் கரு­வி­க­ளைக் காட்­சிக்கு வைத்­தி­ருக்­கும் 'தி கேத்தே கேலரி' இவ­ருக்­குப் பிடித்­த­மான இடங்­களில் ஒன்­றா­கும். கிஷ­னின் ஆர்­வம் அறிந்து அவ­ரின் தாயார் அவ­ரது 16வது பிறந்­த­நாளில் 100 ஆண்டு பழமை வாய்ந்த புகை­ப்படக் கரு­வி­யைப் பரி­சாக வழங்­கி­னார்.

பழம்­பொ­ருள்க­ளைச் சேக­ரிப்­பது செலவு அதி­கம். அத்துடன் பள்ளி, தேசிய சேவை, கல்­லூரி என்று அடுத்­த­டுத்து வந்த கட­மை­க­ளால் நேர­மில்லாததாலும் தமது பொழு­து­போக்கில் ஈடு­பட இவ­ருக்கு வாய்ப்பு கிட்­ட­வில்லை.

ஆனால் வேலைக்குச் சென்று ஓர் ஆண்­டுக்கு மேல் ஆவதால், பழம்­பொ­ருள்­க­ளைச் சேக­ரிப்­ப­தில் மீண்­டும் மும்முரமாக ஈடு­ப­டப் போவ­தாக கிஷன் கூறினார்.

"இன்­றும் நான் வெளியே செல்­லும்­போது பழம்­பொ­ருள்­கள் கண்­ணில் பட்­டால் அதை ஆராய்ந்து பார்ப்­பேன். என்­னால் அதை வாங்க இய­லுமா என்­று சிந்­திப்­பேன்," என்­றார் கிஷன்.

தற்­போது குடும்­பத்­து­டன் வசித்துவரும் இவர், தமது வருங்­கா­ல வீட்­டில் சிறிய அருங்­காட்­சி­ய­கத்தை உரு­வாக்கப் போவ­தா­க­வும் பூரிப்­பு­டன் சொன்­னார்.

சுவரில் பதிக்­கப்­படும் பழைய 'பெரனாக்­கான்' கற்கள் இவ­ருக்கு மிக­வும் பிடித்தவை. பழைய கடை­வீ­டு­களில் இவற்­றைப் பார்த்­தால் நின்று ரசிப்­பது இவர் வழக்­கம். இச்சுவர்க்கற் களின் உற்­பத்தி நின்­று­விட்டது.

இன்று ஒரு கல்லின் மதிப்பு $400 வெள்ளி வரை இருக்­கக்­கூ­டும் என்ற கிஷன், வருங்­காலத் ­தில் தமது அறையை இவற்றைக் கொண்டு அலங்­க­ரிக்க விரும்­பு­கி­றார்.

செய்தி: பொன்மணி உதயகுமார்