வரலாறுபோற்றும் பழமையான இடங்களையும் தொன்மையான கல்வெட்டுகளையும் பார்த்து வளர்ந்த 38 வயது திரு ரஞ்சித் தனராஜ், கடந்த 28 ஆண்டு களாக பழமையான நாணயங் களைச் சேகரித்து வருகிறார்.
தமிழ் வரலாற்றின் மீதான ஆர்வம் இவரது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. 10 வயதில் இவருக்கு இந்த ஆர்வம் தொற்றியது. பள்ளிப்பருவம் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங் களுக்குச் சென்று நேரத்தைச் செலவிடும் ரஞ்சித், இன்றுவரை அதேபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாணயங்களுடன் அஞ்சல் தலைகளையும் சேகரித்துவருகிறார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற ரஞ்சித், வரலாறுமீதான ஆர்வத்தால் அத்துறையில் முதுகலைப் பட்டமும் தொல்லியல், கல்வெட்டுத் துறையில் டிப்ளோமா பட்டயமும் பெற்றுள்ளார். தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் இவர், சிங்கப்பூரின் செங்காங் வட்டாரத்தில் 15 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இங்கும் அவர் பழமையான நாணயங் களைச் சேகரித்துவருகிறார்.
இந்தோனீசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகளில் நடைபெறும் அனைத்துலக நாணயக் கண்காட்சிகளில் பங்குபெற்று சில நாணயங்களை அங்கு வாங்கியும் உள்ளார். பழமையான பொருள்கள் சேகரிக்கும் மற்றவர்களுடன் பழக இத்தளங்கள் வாய்ப்பளிப்பதாகக் குறிப்பிட்ட ரஞ்சித், மற்றவர்களிடம் உள்ள பொருள்கள் பிடித்திருந்தால் பணம் அல்லது வேறு வரலாற்று ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வது வழக்கம் என்றார்.
ஒரு முறை எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓர் ஏலத்தில் 1,300 ஆண்டுப் பழமைவாய்ந்த ஒரு தமிழ் வரலாற்று நாணயம் கிட்டியதாக ரஞ்சித் குறிப்பிட்டார்.
தொன்மையான மதுரை நகரில் பிறந்த ரஞ்சித், காலனித்துவ ஆட்சியின் கீழ் இந்தியாவில் வெளியிடப்பட்ட நாணயங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். தற்போது மதுரை வரலாற்றைச் சார்ந்த நாணயங்களில் அதிக கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்திருக்கும் இவர், மதுரை வரலாறு, நாணயவியல் ஆகியவை குறித்த ஆங்கில நூலை எழுதிவருகிறார். அதை இவ்வாண்டு வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். தமிழிலும் அத்தகைய நூலை வெளியிடும் திட்டம் உண்டு என்று ரஞ்சித் சொன்னார்.
சேகரித்த நாணயங்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வது கடினம் என்பதால் வருங்காலத்தில் அவற்றை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க அல்லது பழமையான பொருள்களைச் சேகரிப் பவர்களிடம் விற்க அவர் திட்டமிட்டுள்ளார்.
சங்ககால நாணயம்
தம்மிடமுள்ள ஆகப் பழமை யான நாணயம் சங்ககால பாண்டியர் காலத்து வெள்ளி முத்திரைக் காசு என்றார் ரஞ்சித். அது கி.மு. 300 - கி.மு. 400 காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று இவர் நம்புகிறார்.
மேலும், கி.மு. 200 - 300வில் பயன்படுத்தப்பட்ட பாண்டியன் பெருவழுதி ஆட்சிகாலக் காசும் தம்மிடம் உள்ளதாக அவர் கூறினார்.
உத்தம சோழர், இராஜராஜ சோழர், இராஜேந்திர சோழர், விக்ரம சோழர் போன்ற மன்னர்களின் நாணயங்களும் தம்மிடம் உள்ளன என்றார் ரஞ்சித். மதுரை சுல்தான் ஜலாலுதீன் அஹசன் ஜித்தல் காலத்தின் இரண்டு அரிய நாணயங்களும் நாயக்க மன்னர்களின் நாணயங்களும் தம்மிடம் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனை விதமான நாணயங்கள் இருந்தன என்பதற்கான திட்டவட்டமான குறிப்புகள் இல்லை. அதனால் ஒவ்வொரு நாணயமும் நீண்டகால ஆராய்ச்சிக்கு வழிவகுக்கிறது. பல புதிய தகவல்களைக் கற்றுத் தருகிறது," என்றார் ரஞ்சித்.

