தொழிலதிபரும் கொடையாளருமான எஸ்.எம். அப்துல் ஜலீலுக்கு திருவள்ளுவர் விருது
ரச்சனா வேலாயுதம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் திரைப்பாடல்களில் திருக்குறளைக் கையாண்ட விதத்தை ஆராய்ந்த நிகழ்ச்சி தமிழ்மொழி விழாவின் அங்கமாக கடந்த 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
"திரை இசையில் திருக்குறள்" எனும் தலைப்பில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பிஜிபி திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தமிழ்மொழி பண்பாட்டு கழகம் ஏற்பாடு செய்தது. மலேசிய வானொலி, தொலைக்காட்சிப் புகழ் சி. பாண்டித்துரை திரைப்பட இசையில் இடம்பெற்ற திருக்குறள்களை சுட்டி விளக்கினார்.
"திருக்குறள் கூறும் விழுமியங்களைத் தொடர்ந்து வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமா என்று நாம் யோசிக்க வேண்டும். இக்குறள்களை அழகாகவும் எளிமையாகவும் மக்களிடம் கொண்டு செல்லும் திரைப்படப் பாடல்கள் மூலம் திருக்குறளின் பொருளை அறிகிறோம்" என்றார் திரு பாண்டித்துரை. பாடல், நகைச்சுவை கலந்து இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த அங்கத்தைப் பார்வையாளர்கள் ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபரும் சமூகத் தலைவருமான எஸ்.எம்.அப்துல் ஜலீலுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவைக்காகவும் நிதி ஆதரவுக்காகவும் திரு ஜலீலுக்கு இவ்வாண்டு விருது அளிக்கப்பட்டது.
அத்துடன், திருக்குறளை ஒட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியின் முதல் இரண்டு மணி நேரத்தில் பரிசுகள் வழங்கப்பட்டன. பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையுள்ள கிட்டத்தட்ட 200 மாணவர்கள் பரிசுபெற்றனர்.
"அடுத்த தலைமுறையினரான மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் தமிழில் பேச ஊக்குவிக்க வேண்டும். திருக்குறளின் முக்கியத்துவத்தையும் அழகையும் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது நமது கடமை," என்று சிறப்பு விருந்தினரான முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் கூறினார்.
"இதுபோன்ற நிகழ்ச்சிகளை கழகம் தொடர்ந்து ஏற்பாடு செய்ய மக்களின் ஆதரவு முக்கியம். உலகமெங்கும் பரவியுள்ள திருக்குறளை மாணவர்களிடமும் பெற்றோரிடமும் எடுத்துச்செல்ல 37 ஆண்டுகளாக நடைபெறும் இந்நிகழ்ச்சி நல்வழியாக அமைந்துள்ளது," என்றார் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன்.
எனினும், தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளுக்கு முதன்முறையாகச் சென்ற 46 வயது வேணிக்கு நிகழ்ச்சியின் நீளம் தொய்வை ஏற்படுத்தியது.
"நிகழ்ச்சி நிரலில் பரிசு அங்கம் பற்றிய விவரமில்லை. ஆறு மணி தொடங்கி எட்டரை மணிக்கு முடியும் என்று எதிர்பார்த்த நிகழ்ச்சி, 10 மணிக்கு மேல்தான் முடிந்தது. பரிசளிப்பின் போது குழப்பமும் நிலவியது. முக்கிய அங்கம் சுவையாக இருந்தாலும் அதிக நேரம் நீடித்ததால் நிகழ்ச்சி சோர்வை உண்டாக்கியது. எங்களைப் போன்ற புதிய பார்வையாளர்களை ஈர்க்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிடலை மேம்படுத்த வேண்டும்," என்று திருவாட்டி வேணி கருத்துரைத்தார்.