மோனலிசா
மனித சிந்தனைக்குள் இடம்பெறும் பலவித உணர்வுகளை மையப்படுத்திய நாடகம் ஒன்று தமிழ்மொழி விழாவையொட்டி அண்மையில் அரங்கேறியது.
மனிதனின் மூளைக்குள் நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்ட இந்நாடகத்தில் வாழ்வில் வெற்றியடைய எந்த உணர்ச்சி முன்னிலை வகிக்க வேண்டும் என்ற பார்வையும் முன்வைக்கப்பட்டது.
'அதிபதி' என்ற இந்த மேடை நாடகம் அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 6, 7 தேதிகளில் அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள அடித்தள மன்ற அரங்கில் நடைபெற்றது.
இளையர்களிடம் இந்நாடகத்தின் கருப்பொருள் சென்றுசேர வேண்டும் என்பது தங்கள் நோக்கம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
அதன்பொருட்டு மாணவர் களுக்கென தனியே முதல் நாளிலும் பொதுமக்களுக்கு இரண்டாம் நாளிலும் மொத்தம் மூன்று காட்சிகள் அரங்கேறின.
முதல் நாள் மாணவர்களுக்கென அரங்கேறிய இரண்டு காட்சிகளிலும் தொடக்கநிலை, உயர்நிலை, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்கள் என மொத்தம் 520க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
"மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் இந்நாடகத்தைக் கண்டுகளித்ததே எங்கள் வெற்றி.
"நாடகத்தின் இறுதிக்கட்டம் மனதில் நின்றதாக பல மாணவர்கள் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது" என்று கூறினார் இந்நாடகத்தின் கலை இயக்குநர் ஆர். புகழேந்தி.
அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் நிறுவனருமான இவர், வாழ்க்கை விழுமியங்களையும் நன்னெறிகளையும் பிரதிபலிப்பதில் நாடகக் கலை முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
அதை இளையர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இத்தொண்டு நிறுவனத்தை 2013ஆம் ஆண்டு முதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நாடகத்தில் நடித்த நடிகரும் இந்நிறுவனத்தின் உறுப்பினருமான சிவானந்த் ராமகிருஷ்ணன், 30, "நாடகத்தின் நகைச்சுவைக் கூறுகளையும் ஒவ்வோர் அசைவையும் மாணவர்கள் கூர்ந்து கவனித்து சிரித்தும் கைதட்டியும் மகிழ்ந்தது இக்கால மாணவர்களின் அறிவுக்கூர்மையைக் காட்டியது." என்று கூறினார்.
"இந்நாடகத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்கும் ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதினேன்," என்றுநாடகத்தில் நடித்தவரும் உயர்நிலை மூன்று மாணவருமான தர்ஷன் மூர்த்தி, 15, சொன்னார்.
இந்நிகழ்வில் பங்குகொண்ட பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான கெளதம் கார்த்திக், 16, "நாடகம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. வசனங்களும், பாடல்களும் நாடகத்திற்குள் பார்வையாளர்களை இழுக்கும் வண்ணம் அமைந்தன. திரைப்படங்கள் போலவே நாடகங்களும் மிகவும் சுவாரசியமாக இருப்பதை இங்கு உணர்ந்தேன்" என்று கூறினார்.

