மாணவர்களுக்குத் தமிழூட்டுவது எப்படி என்பது திரு மசூது குடும்பத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரு சிந்தனை, ஓர் உரையாடலும்கூட.
தத்தம் குடும்பங்களில் முதல் பட்டதாரிகளான திரு மசூது, அவரின் மனைவி திருவாட்டி மரியம் பீவி, இருவரும் தேர்ந்தெடுத்துக்கொண்டது தமிழாசிரியர் பணியே.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடக்கப்பள்ளிகளில் நீடித்துள்ள திரு மசூது-மரியம் தம்பதியின் தமிழ்க்கல்விப் பயணம் பல மாணவர்களின் மொழிவளத்தைச் செதுக்கியுள்ளது. தமிழாசிரியர் பணியைத் தாய்மைக்கு ஒப்பிடுகிறார் 69 வயது திருவாட்டி மரியம்.
உமறுப்புலவர் தமிழ்மொழி உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவருக்குள் தமிழார்வம் நீங்காமல் நிலைத்திருந்தது. அதற்கேற்ற வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்த அவருக்கு, நம்பிக்கை ஊட்டி தமிழாசிரியர் ஆக ஊக்குவித்தார் திரு மு.அ. மசூது.
மணமான பின்னர், குடும்பச் சுமைக்கிடையே தமிழாசிரியராகும் உறுதியுடன் தேசிய கல்விக் கழகத்தில் இணைந்து திருவாட்டி மரியம் படித்தார். கருவுற்றிருந்த சமயத்தில் தமது இறுதியாண்டுத் தேர்வை முடித்துத் தேர்ச்சியும் பெற்றார்.
பள்ளிப் பிள்ளைகளுடனான தொடர்பு தமிழ்மொழி வகுப்புடன் நின்றுவிடுவதில்லை என்பதில் திருவாட்டி மரியம் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டுள்ளவர்.
"தமிழை எவ்வாறு வாழ்வோடு தொடர்புபடுத்தலாம் என்பதில் வழிகாட்ட மாணவர்களின் பெற்றோருடன் அவர் அணுக்கமாக உழைத்தார். கதைகள், பாடல்கள் என சிரமம் எடுத்து தமிழ்மொழித் திறன்களுடன் தமிழுணர்வைப் புகட்ட முயற்சி எடுத்தார்," என்று திருவாட்டி மரியம் பற்றி குறிப்பிட்டார் திரு மசூது, 73.
தாம் இருபது ஆண்டுகள் பணியாற்றிய ரூலாங் தொடக்கப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் வகுப்பைத் தாண்டி பொதுவில் இடம்பெறும் வண்ணம் 'மலரும் மொட்டுக்கள்' எனும் நூலை திருவாட்டி மரியம் வெளியிட்டார்.
படைப்பாற்றலை ஊக்குவிப்பது தமிழ்மொழியின்பால் மாணவர்களை ஈர்க்கவல்லது என்பது இத்தம்பதி பலமுறை பரிமாறிக்கொள்ளும் சிந்தனையாகும்.
இந்தத் தம்பதியின் வழித்தடத்தைப் பின்பற்றி 23 ஆண்டுகளாக தமிழாசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளார் இவர்களின் மூத்த மகள் திருமதி நசீமா பானு. கணிதம், கணக்கியல் என மற்ற பாடங்களைக் கற்பிக்க ஆலோசித்த அவரின் மனம், பெற்றோரின் தமிழ்ப்பணியைத் தொடர்வதிலேயே இணக்கம் கண்டது.
அக்காலத்தில் தமிழ் எழுத்துகள் அறியாத மாணவர்களை திரு மசூதும் திருவாட்டி மரியமும் கையாளவேண்டிய நிலை அதிகம். தற்போது தமிழ்ப் பின்புலமும் தமிழில் பேசும் குடும்பப் பின்னணியும் இல்லாத சூழல்களிலிருந்து மாணவர்கள் வருவதைச் சுட்டினார் திருமதி நசீமா.
"சமூகத்தில் கூடுதல் ஆதரவும் வாய்ப்புகளும் இருந்தாலும், பெற்றோரின் பங்கே பிள்ளைகளின் தமிழ்மொழி ஈடுபாட்டுக்கு மிகவும் அவசியம்.
"எனது அம்மாவைப்போல, பெற்றோருடன் நெருக்கமாக இருந்து தமிழர் வீடுகளையும் எட்ட முயற்சி செய்து வருகிறேன்," என்றார் திருமதி நசீமா, 44.

