மறைந்துவந்த தமிழ்க் கலைகளுக்கென சிங்கப்பூரில் மேடை அமைத்துக் கொடுத்தவர்கள் காலஞ்சென்ற திரு ஆனந்த கண்ணன், அவரின் மனைவி திருவாட்டி நாகராணி கண்ணா.
ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையிசை, கரகம், தெருக்கூத்து என மண்ணிசைக் கலைகள் சிங்கப்பூரில் தழைத்தோங்க உழைத்தார் திரு ஆனந்த கண்ணன். அவரின் லட்சியப் பயணத்தை திருவாட்டி ராணியும் மகள் அவாவும் தொடர்கின்றனர். ஒவ்வொரு சிங்கப்பூர்த் தமிழரும் தமிழ்க் கலைகளுக்கு உரிமை கொண்டாடவேண்டும் என்பது இவர்களின் விருப்பம்.
இந்தியாவில் தமிழ்ப் பட்டப்படிப்பு பயின்று ஒரு தமிழாசிரியராக திருவாட்டி ராணியின் தமிழ்த்துறை பயணம் தொடங்கியது. அச்சமயத்தில் சிங்கப்பூரில் தமிழில் மேற்படிப்பு பயில வாய்ப்பில்லை. திரு ஆனந்த கண்ணனுக்கோ நாடகமும் ஊடகமும் ஆரம்பப்புள்ளியாக அமைந்தன. 2000களில் உலகத் தமிழ் மக்கள் இடையே புகழ்பெற்ற முகமானார் அவர்.
"தமிழகத் தொலைக்காட்சியில் படைப்பாளராக அவர் இருந்த சமயத்தில், அவரின் தனித்துவமான தமிழ்ப் பாணிக்காகவே அறியப்பட்டார். அதுவும் அவருக்குப் பெரிய உந்துதலாக இருந்தது," என்றார் ராணி, 50.
கலையினால் இணைந்த இருவரும் தமிழகத்தில் வறுமையில் உழலும் மண்ணிசைக் கலைஞர்களின் நிலையை நேரில் கண்டவர்கள்.
அங்கு தொடங்கி, மேன்மேலும் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு மரபுக் கலைகளின் சீரான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் முனைப்புக் குறையாது செயல்படுகின்றனர் ராணியும் அவாவும்.
இளையர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், மூத்தோர் என பலருக்கும் மரபுக்கலையில் இணைவதற்கான பாதையை அமைத்துக் கொடுக்கும் 'ஏகே தியேட்டர்' ராணி-கண்ணன் இருவரால் 12 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது.
மாணவர்களுக்குக் கதை சொல்லியும் ஆடல், பாடலைக் கற்றுத் தந்தும் மொழித்திறனை ஊக்குவிக்கிறது இக்குழு.
மரபுக்கலைகளுக்கு முறையான பயிற்சியும் அங்கீகாரமும் கிட்டும் நோக்கில் 'ஆனந்த கல்வி' எனும் திட்டம் 2019ல் இருவரின் எண்ணத்திலும் உருவானது. அரும்பு, மொட்டு, நறுமுகை என வயதுவாரியாகப் பிரிக்கப்பட்ட வகுப்புகளின்மூலம் சிறார் முதல் பெரியவர் வரை பலதரப்பினரையும் மரபுக்கலைகள் கற்றுக்கொள்ள இது வரவேற்கிறது.
"ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படுகிறது. பெற்றோர் மட்டுமின்றி, தமிழ்மொழிப் புழக்கத்துக்கான ஆதரவை நீட்டும் ஒரு சமூகத்தையும் உருவாக்குவது அவசியம். அத்தகைய நட்பு வட்டாரமாக ஏகே தியேட்டர் நிச்சயம் நிலைத்திருக்கும்," என்று கூறினார் திருவாட்டி ராணி.
கலை சூழ வளர்ந்த அவா கண்ணனுக்கு, அப்பா விட்டுச்சென்ற தீப்பொறி தம்மைப் போன்ற பிற இளையர்களுள் விதைக்கப்பட வேண்டும் என்பது முக்கிய இலக்கு.
"ஒன்றுகூடி ஆடிப்பாடும்போது, நாடகம் படைக்கும்போது, இயல்பாகவே தமிழில் பேசி மகிழ்கிறோம். அதை ரசிக்கவும் செய்கிறோம்," என்றார் அவா, 20. தற்போது லசால் கலைக் கல்லூரியில் கலை நிர்வாகம் பயிலும் அவா, கலைத்துறையில் நீடிக்க விருப்பம் தெரிவித்தார்.

