தன்னலமும் தன்னிகரும் இல்லாத் தாயுள்ளம்

தன்னலமும் தன்னிகரும் இல்லாத் தாயுள்ளம்

8 mins read
a8846136-70bc-468f-aa0d-df0f3cb22fdc
-
multi-img1 of 3

காலமும் கோலமும் மாறலாம். ஆனால், என்றென்றும் மாறாது தாயின் பேரன்பு. அச்சிறப்புமிக்க தாய்மையை, அதன் மாண்பைக் கொண்டாடும் நாளே அன்னையர் தினம்! குடும்பத்திற்காக அயராது, துவளாது, உறுதியோடு உழைத்துவரும் அன்னையர் நால்வரின் வாழ்க்கைப் போராட்டங்களையும் அவர்களின் எதிர்நீச்சல் பயணங்களையும் அறிந்துவந்தது தமிழ் முரசு.

அர்ப்பணிப்பின் மறுவடிவாகத் திகழும் அன்னை

மோன­லிசா

மதுப் பழக்­கம், பல பெண்­க­ளு­டன் தகாத உறவு, பொறுப்­பற்ற நடத்தை, குடும்ப வன்­முறை - இப்­ப­டித் தமக்குப் பல கொடு­மை­களை இழைத்த கண­வர் செல்வம் மர­ணப்­ப­டுக்­கை­யில் இருந்­த­படி மன்­னிப்பு கேட்­டுக் கதறி அழு­த­போது சிறு புன்­ன­கை­யை­யும் ஊடு­ரு­வும் பார்­வை­யை­யும் பதி­லாக அளித்­தார் திரு­வாட்டி யசோதா லட்­சு­ம­ணப்­பிள்ளை, 55.

எவ்­வி­தத் துணை­யும் ஆத­ர­வும் இல்­லா­மல் நான்கு பிள்­ளை­களை வளர்த்து பட்­டப்­ப­டிப்பு வரை படிக்­க­வைத்து ஆளாக்கி இருக்­கி­றார் அர்ப்­ப­ணிப்­பின் மறு வடிவாகத் திக­ழும் இவ்வன்னை.

குடும்­பச் சூழ­லால் தொடக்­கப்­பள்­ளி­யோடு படிப்­பைக் கைவிட்ட இவர், வாழ்­வில் கற்­ற­தெல்­லாம் அனு­ப­வப் பாடங்­களே.

இள­வ­ய­தி­லேயே திரு­ம­ணம், இரண்டு மகள்­கள், இரண்டு மகன்­கள் என அடுத்­த­டுத்து நான்கு பிள்­ளை­கள். இருந்­தும் ஒற்றை ஆளா­கக் குடும்­பத்­தைச் சுமந்­தார் திரு­வாட்டி யசோதா.

குடும்­பத்­தைப் பற்­றிய எண்­ணமே இல்­லாத கண­வ­ரி­டம் இருந்து வரு­மா­னத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்­ப­தால் சுகா­தா­ரப் பணி­யா­ள­ராக வேலை செய்­தார் திரு­வாட்டி யசோதா. மொத்த குடும்­ப­மும் அவர் ஈட்­டிய $850 மாத வரு­மா­னத்தை நம்­பியே இருந்­தது. கூடு­தல் வரு­மா­னத்­திற்­காக வார இறு­தி­க­ளிலும் பம்­ப­ர­மாய்ச் சுழன்று வேலை பார்த்­தார் இப்­பெண்­மணி.

இருப்­ப­தற்­குச் சொந்த வீடா­வது உள்­ளதே என எத்­த­னையோ இர­வு­கள் தாம் நிம்­ம­தி­யாக உறங்­கி­ய­போ­தும் அதற்­கும் ஒரு­நாள் கண­வர் உரு­வத்­தில் பிரச்­சினை வந்­தது.

மது­போ­தை­யில் இருந்த கண­வர், அடுப்பை அணைக்­கா­மல் உறங்­கி­விட்­டார். சில மணி நேரத்­தில் வீடே தீக்­கி­ரை­யா­னது.

"தக­வல் கிடைத்து நாங்­கள் அனை­வ­ரும் சென்று வீட்­டைப் பார்த்­த­போது அந்­தப் புகை­மூட்­டத்­தில் அப்பா எப்­படி உயிர்­பிழைத்­தார் என்றே எங்­க­ளுக்­குத் தோன்­றி­யது," என்று கூறி­னார் யசோ­தா­வின் மூத்த மகள் லலிதா­ தேவி செல்­வம், 32.

தற்­போது சிங்­கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரிந்­து­வ­ரும் லலிதா, "அன்று நாங்­கள் அனை­வ­ரும் வீட்­டைப் பார்த்­துக் கதறி அழு­து­கொண்டு இருந்­த­போது எவ்­வித உணர்ச்­சி­யு­மின்றி ஆழ்ந்த சிந்­த­னை­யில் உறைந்து போயி­ருந்­தார் என் அம்மா. இத்­து­ணைத் துயர்­க­ளுக்கு இடை­யிலும் அவர் அழுது நாங்­கள் பார்த்த தரு­ணங்­கள் மிகச் சிலவே," என்று கூறி, தன் தாயைப் பெரு­மி­தத்­து­டன் கட்­டித்­த­ழு­விக்­கொண்­டார்.

"வீடு போய்­விட்­டது, அடுத்து பிள்­ளை­களை எங்­குத் தங்க வைக்­க­லாம் என்­பதே என் மனத்­தில் ஓடிக்­கொண்­டி­ருந்­தது. எனக்கோ என் வாழ்­விற்கோ எத்­த­கைய சிர­மங்­கள் வந்­தா­லும் கவலை இல்லை. என் எண்­ணம், என் லட்­சி­யம், என் வாழ்க்கை எல்­லாமே என் பிள்­ளை­க­ளின் தேவை­களை நிறை­வு­செய்ய வேண்­டும் என்­பது மட்­டுமே," என்று மலர்ந்த முகத்­து­டன் கூறி­னார் திரு­வாட்டி யசோதா.

வீடில்­லாச் சூழ­லில் உற­வி­னர்­கள் வீட்­டில் சில வாரங்­கள் அடைக்­க­லம் புகுந்­த­னர்; சமூக அமைப்­பு­க­ளின் உத­வி­யைப் பெற்­ற­னர். நாள­டை­வில் வாடகை வீட்­டில் குடி­யே­ற­வும் முடிந்­தது. இன்று மூத்த மக­ளு­டன் தங்­க­ளுக்­கென ஒரு வீடு வாங்கி அதில் குடி­யே­றி­விட்­ட­னர் இந்­தக் குடும்­பத்­தார்.

சட்­டப்­படி கண­வ­ரைப் பிரிந்து பிள்­ளை­க­ளு­டன் நிம்­ம­தி­யாக வாழ்ந்து வந்­த­போது உடல்­ந­லம் குன்­றிய நிலை­யில், அவர் தனி­மை­யில் வாடு­வது திரு­வாட்டி யசோ­தா­விற்­குத் தெரி­ய­வந்­தது. மதுப்­ப­ழக்­கத்­தால் நீரி­ழிவு முற்­றிய நிலை­யில் திரு செல்வத்தின் கால் துண்­டிக்­கப்­பட்­டு­விட்­டது. தம்­மைத் தாமே பார்த்­துக்­கொள்ள முடி­யாத நிலை­யில் தவ­று­களை உணர்ந்து மனம் திருந்­தி­னார் திரு செல்வம்

அவர் ஒரு நல்ல கண­வ­ரா­க, தந்­தை­யா­க, மனி­த­ரா­க வாழா­மல் போனா­லும் நல்ல குடும்ப உறுப்­பி­னர்­க­ளாக நாம் நம் கட­மை­யைச் செய்ய வேண்­டும் என்று பிள்­ளை­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டார் இந்­தத் தாய்.

மூத்த பிள்ளை சென்று அவ்­வப்­போது தந்­தை­யைக் கவ­னித்து வந்த சூழ­லில், தாமும் பல நாள்­கள் மன­மு­வந்து சமைத்­துக் கொடுத்­தார் திரு­வாட்டி யசோதா. இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் திரு செல்வம் உயி­ரி­ழக்க, எல்­லாச் சடங்­கு­க­ளை­யும் செய்து அவ­ருக்கு இறு­தி­விடை கொடுத்­தது இந்­தக் குடும்­பம்.

"வாழ்­வது ஒரு­முறை. அதில் நம் பொறுப்­பு­க­ளை­யும் கட­மை­க­ளை­யும் சரி­வ­ரச் செய்து குடும்­பத்­திற்­கும் சமூ­கத்­திற்­கும் பய­னுள்ள வகை­யில் வாழ்ந்­தாலே போதும். நிம்­ம­தி­யும் மகிழ்ச்­சி­யும் எச்­சூ­ழ­லி­லும் நம்­மை­விட்டு அக­லாது," என்று தம் வாழ்க்­கைப் பாடத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார் இந்த முன்­மா­திரி அன்னை.

வாழ்க்கை, நம்பிக்கை, உலகம், உறுதுணை என எல்லாமே பிள்ளைகள்தான்!

ஆ. விஷ்ணு வர்­தினி

ஒரு தாயா­கத் தாம் தோல்வி அடைந்­து­விட்­ட­தாக திரு­வாட்டி கோமதி (உண்­மைப் பெய­ரல்ல) பல­முறை நினைத்­த­துண்டு. இன்­றும் அவ்­வெண்­ணம் அவரை நாளும் வாட்டி வரு­கிறது.

மனத்­தெ­ளி­வின்­றிச் செய்த குற்­றத்­திற்­காக ஐந்­தாண்­டு­கள் சிறை சென்­றி­ருந்த அவர், தமது மூன்று இளம்பிள்­ளை­க­ளி­ட­ம் இருந்து பிரிந்­து, 2020ல்தான் அவர்களுடன் மீண்­டும் இணைந்­தார்.

தற்­போது இவர்­கள் ஒரு குடும்­ப­மா­கப் புது­வாழ்வு தொடங்க முயன்று வரு­கின்­ற­னர். பள்ளி, நண்­பர்­கள் பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வது, சேர்ந்து சிரிப்­பது, வெளி­யில் செல்­வது, எனப் பிள்­ளை­க­ளு­டன் இனிதே கழி­கின்­றன 49 வயது திரு­வாட்டி கோம­தி­யின் நாள்­கள்.

தமது இரு பதின்ம வயது மகன்­க­ளுக்­கும் தாம் சிறை­யில் கற்ற வாழ்க்­கைப் பாடங்­களை திரு­வாட்டி கோமதி எடுத்­து­ரைக்­கி­றார்; எப்­போ­தும் தொடக்­கப்­பள்ளி மாண­வி­யான மகள் கூடவே இருக்­கி­றார்.

ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்­னரோ, அவ­ரின் நிலை முற்­றி­லும் வேறாக இருந்­தது.

பல­முறை போதைப்­பொ­ருள் விற்­ப­னைக்­கா­க­வும் பழக்­கத்­துக்­கா­க­வும் கண­வர் சிறைக்­குச் சென்­று­வந்த கார­ணத்­தால் திரு­வாட்டி கோம­திக்­குக் கண­வ­ரின் ஆத­ரவு என்­பது சொற்­ப­மா­கவே கிடைத்­தது. முதல் மகன் பிறந்து ஒரு சில மாதங்­க­ளி­லேயே கண­வர் பிடி­பட்­டார். அதே சூழல் இரண்­டா­வது மகன் பிறந்­த­போ­தும் ஏற்­பட்­டது. இந்­தப் போக்கு, திரு­வாட்டி கோம­தி­யைப் பல இன்­னல்­க­ளுக்கு ஆளாக்­கி­யது.

பொட்­ட­லம் கட்­டும் வேலை செய்­த­படி, வாடகை வீட்­டில் இருந்­து­கொண்டு குடும்­பத்­தைக் கரை­யேற்ற அரும்­பா­டு­பட்­டார் திரு­வாட்டி கோமதி. அதே சம­யம், போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யாக இருந்த கண­வரை நல்­வ­ழிப்­ப­டுத்த முடி­யா­ம­லும் தவித்­தார்.

கண­வர் 2012ல் சிறை சென்ற­போது, அவரை விடு­விக்­கும் முனைப்­பில் வீட்­டில் எஞ்சியிருந்த போதைப்­பொ­ருளை விற்க நினைத்­தார் திரு­வாட்டி கோமதி. "அதில் கிடைக்­கும் பணத்­தைக் கொண்டு வழக்­க­றி­ஞர் ஒரு­வரை நாட­லாம் என்று நினைத்­தேன்," என்­றார் அவர்.

ஆனால், அதி­கா­ரி­க­ளி­டம் பிடி­பட்­டார் திரு­வாட்டி கோமதி. இத­னால் இளம் பிள்­ளை­கள் மூவ­ரை­யும் குடும்­பத்­தா­ரின் பரா­ம­ரிப்­பில் விட்­டுச்­செல்ல நேரிட்­டது. எக்­கா­ர­ணத்தை முன்­னிட்­டும் பிள்­ளை­கள் சிறை­யில் காலடி எடுத்து வைக்­கக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்த அவர், மூன்­றாண்­டு­க­ளாக அவர்­க­ளைப் பார்க்­கா­மல் இருந்­தார். இடைப்­பட்ட காலத்­தில் அம்­மா­வைத் தேடிய பிள்­ளை­களி­டம், அவர் நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­ப­தா­கக் குடும்­பத்­தார் கூறி­ இ­ருந்­த­னர்.

"அவர்­களை நினைக்­காத நாளில்லை. மீண்­டும் சந்­திக்­கும்­போது அவர்­க­ளி­டம் என்ன சொல்­வது? நாளும் கையி­லேயே வைத்து நான் பார்த்­துக்­கொண்ட என் குழந்­தை­கள் என்னை மீண்­டும் ஏற்­றுக்­கொள்­வார்­களா? இப்­ப­டி­யெல்­லாம் ஒரே பய­மாக இருந்­தது," என்­றார் திரு­வாட்டி கோமதி.

இருப்­பி­னும், புது­வாழ்வு தொடங்கி பிள்­ளை­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறும் உறுதி அவ­ருக்­குள் பிறந்­தது. மேற்­ப­டிப்பு பயி­லாத அவர், சிறை­யி­லேயே வழக்­க­நி­லைத் தேர்வு எழுதி, தேர்ச்­சி­யும் பெற்­றார்.

தற்­போது ரிபப்­ளிக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் ஊட்­டச்­சத்து, உணவு சார்ந்த பகு­தி­நேர பட்­ட­யக்­கல்­வி­யில் அவ­ரின் கன­வுப்­ப­ய­ணம் தொடர்­கிறது. அடுத்­தாண்டுப் பட்­ட­யம் பெற்­ற­பி­றகு, சொந்­தத் தொழில் தொடங்­கு­வது அவ­ரின் இலக்கு.

சிறைக்­காலத்­தி­லி­ருந்தே 'நியூ லைஃப் ஸ்டோ­ரீஸ்' எனும் லாப­ நோக்­கமற்ற அமைப்­பின் தொடர் உதவி கிடை­த்­ததாகக் குறிப்­பிட்ட அவர், "அவர்­க­ளின் பயி­ல­ரங்­கு­களும் பேச்­சு­க­ளுமே முறிந்த குடும்­பத் தொடர்­பு­களை மீண்­டும் வலுப்­ப­டுத்த முடி­யும் எனும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யது," என்­றார்.

நரம்பு சார்ந்த பிரச்­சி­னை­க­ளால் வேலைக்­குச் செல்ல முடி­யா­மல் இருக்­கும் திரு­வாட்டி கோமதி, பிள்­ளை­களே தமக்கு நம்­பிக்கை ஊட்டி இயக்­கு­வ­தா­க கூறிப் புன்னகைத்தார்.

எக்குறையுமின்றி வளர்க்க உறுதிபூண்டுள்ள தாய்

கி. ஜனார்த்­த­னன்

பிறக்­க­வுள்ள தம் செல்­லக் குழந்­தை­யைத் தூக்­கிக் கொஞ்சி மகிழ­லாம் என நினைத்த சமூக ஊழி­யர் திருவாட்டி ஜீவிதா லிங்­கேஸ்­பரன், 25 வாரங்­களிலேயே பிறந்­து­விட்ட ஆண் குழந்­தை­யைப் பார்­த்து அதிர்ச்­சி­ய­டைந்­தார்.

தாம் அணிந்­தி­ருந்த மோதி­ரம், குழந்­தை­யின் காலுக்­குக் கொலு­சா­கப் போடும் அள­விற்கு அதன் கால் அவ்­வ­ளவு சிறி­ய­தாக இருந்­ததை நினை­வு­கூர்ந்­த­போது 34 வயதான திரு­வாட்டி ஜீவிதாவின் நா தழு­த­ழுத்­தது.

இவரின் மகனான கிருஷ்ணா பிறந்ததும் குழந்­தை­க­ளுக்­கான தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டார். தாய் தன் குழந்­தை­யைத் தொடு­வ­தற்கே இரண்டு வாரங்­களாயின.

"கிருஷ்­ணாவை முதன்­மு­த­லில் பார்த்­த­போது அவன் உட­லி­லும் மூக்­கி­லும் குழாய்­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­தன. அதனைக் கண்டதும் இடிந்­து­போனேன். இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிற­கு­தான் அவ­னுக்­குப் பால் கொடுக்க முடிந்­தது. அது­வ­ரை­கு­ழாய் வழி­யா­கத்­தான் பால் குடித்­தான். முதல்­மு­றை­யா­கப் பால் குடித்­த­போது சரி­யா­கக் குடிக்­கத் தெரி­யா­மல் பால் நுரை­யீ­ர­லுக்­குள் சென்­ற­தால் மேலும் சிக்­க­லா­னது," என்­றார் திரு­வாட்டி ஜீவிதா.

நான்கு மாதங்­க­ளுக்­குப் பிறகே கிருஷ்­ணா­வால் வீட்­டுக்­குச் செல்ல முடிந்­தது. அது­வ­ரை­ஒவ்­வொரு நாளும் தாயார் ஜீவிதா மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று தம் ஆசை­க­ளை­யும் கனவு­க­ளை­யும் குழந்­தை­யின் காதில் ஓதி­வந்­தார்.

ஒரு தாயின் வலிமை அவ­ரது உண்­மை­அன்­பில்­தான் உள்­ளது என்­பதைத் தாயானபின் தாம் உணர்ந்­த­தாக இவர் கூறி­னார்.

"பிள்­ளைக்கு அழுத்­தம் தந்து அவ­னைக் கல்­வி­மா­னா­க­வும் வெற்­றி­யா­ள­னா­க­வும் வளர்க்க வேண்­டும் என முத­லில் எண்ணி­னேன். கிருஷ்ணா பிறந்த பிறகு அச்­சிந்­தனை முற்­றி­லும் மாறி­விட்­டது," என்­றார் இவர்.

கடு­மை­யா­கப் பேசி­விட்­டால் மக­னி­டம் மன்­னிப்பு கேட்க திரு­வாட்டி ஜீவிதா தயங்­கு­வது இல்லை. எல்லா நேரங்­க­ளி­லும் பொறு­மை­யைக் கடைப்­பி­டிப்­பது கடி­னம் என்­ப­தால் தந்­தை­யின் பங்கு முக்­கி­யம் என்­றும் இவர் சொன்­னார்.

"எனக்கு ஓய்வு தேவைப்­ப­டும்­போது என் பிள்­ளையை அவர் அன்­பு­டன் கவ­னித்­துக்­கொள்­வார்," என்று திரு­வாட்டி ஜீவிதா கூறி­னார்.

தற்­போது எட்டு வய­தாகி துடிப்­பு­டன் இருக்­கும் மக­னின் அணைப்­பும் அன்பு முத்­தங்­களுமே இந்­தத் தாய்க்கு அன்­னை­யர் தினப் பரிசு.

பிள்ளைகளின் மகிழ்ச்சியே பெற்றோர்க்கு இன்பம்

இளவ­ய­தி­லி­ருந்தே பெண் பிள்­ளை­கள்மேல் மிகுந்த பிரி­யம் கொண்ட திருவாட்டி நங்கை சுப்­பி­ர­ம­ணி­யன், மூன்று பெண் பிள்­ளை­களுக்­குப்­பின் எதிர்­பா­ரா­மல் மீண்­டும் கரு­வுற்­றார். நான்கு பிள்­ளை­களை வளர்ப்­பது கடி­னம் என நினைத்த பெற்­றோர் கரு­வைக் கலைக்க எண்­ணி­னர். ஆனால், கரு­வில் இருப்­பது இரட்­டைக் குழந்­தை­கள் எனத் தெரி­ய­வந்­தது.

இறை­வன் அரு­ளிய உயிர்­களை அழிக்­கும் உரிமை தமக்கு இல்லை என்ற முடி­வு­டன் அந்த இரட்­டைக் குழந்­தை­களை ஈன்­றெ­டுத்த இந்தத் தாய்க்கு அடுத்­த­டுத்து வாழ்­வின் ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் சோதனை காத்­தி­ருந்­தது.

குறைப்­பி­ர­ச­வத்­தில் பிறந்த இரட்­டை­ய­ருள் பெண் குழந்தை உடல்­ந­லத்­து­டன் இருந்­தது. ஆனால், ஆண் பிள்ளை பெரு­மூ­ளை­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது ஒன்­றரை வய­தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அது­வரை கண­வ­ரு­டன் சேர்ந்து நடத்­தி­வந்த உண­வகத்­தைக் கவ­னிக்க முடி­யா­மல், பள்­ளிப் பேருந்து ஓட்­டு­ந­ராக கண­வ­ரும் இல்லத்தரசியாக நங்­கை­யும் பொறுப்­பேற்­ற­னர்.

கடும் பொரு­ளி­யல் நெருக்­கடிக்கு இடையே 12 வயது, 5 வயது, 3 வயது, 2 வய­தில் இரு­வர் என ஐந்து பிள்­ளை­க­ளு­டன் குடும்­பத்தை நடத்­து­வது ஒவ்­வொரு நாளும் போர்க்­க­ள­ம் போல் இருந்­தது என்று நினைவு­கூர்ந்­தார் திரு­வாட்டி நங்கை, 51.

"அன்­றாட வாழ்க்கை பல வழி­க­ளி­லும் சவா­லா­கத்தான் இருந்­தது. பிள்­ளை­கள் தொடக்­கப்பள்­ளி­யில் பயின்றபோது சக்­க­ர­நாற்­கா­லி­யு­டன் பேருந்­தில் ஏறும் வசதி இல்லை. அத­னால், பல நாள்­கள் வீட்­டி­ல் இ­ருந்து நடந்தே எல்லாப் பிள்­ளை­க­ளை­யும் அழைத்­துச் செல்­வேன். எத்­த­னையோ நாள்­கள் கன­மழை­யி­லும் சக்­கர நாற்­கா­லி­யில் துர்­கேஸ்­வ­ர­னைத் தள்­ளிக்­கொண்டும் மற்­றப் பிள்­ளை­களுக்கு மழையங்கி அணி­வித்­தும் பள்­ளி சென்­றுள்­ளோம்," என்று கூறும்­போதே இந்­தத் தாயின் விழியோரங்களில் நீர்த்­துளி எட்­டிப் பார்த்­தது.

அவர்­கள் பள்­ளிக்கு வரும் காட்­சியை ஒரு­முறை நேரில் கண்ட பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் பள்­ளிப்­ பே­ருந்து ஒன்றை ஏற்­பாடு செய்­து­கொ­டுத்­தார். துர்­கேஸ் படித்து முடிக்­கும்­வரை அவ­ரு­டைய அனைத்து வகுப்­பு­களும் முதல் மாடி­யில் இருந்­தன. இது­போல் பள்ளி, சமூக அமைப்பு­கள், அர­சாங்­கம் எனப் பல­ரு­டைய முயற்­சி­யும் உத­வி­யும் உறு­து­ணை­யாய் இருந்­தது.

தன் மகன் அவனையே நம்பி வாழ்­வ­தற்­குத் தேவை­யான அத்­தனை வச­தி­க­ளை­யும் செய்­து­கொ­டுப்­பேன் என்று உறு­தி­யு­டன் கூறு­கி­றார் திரு­வாட்டி நங்கை.

கல்­வி­யில் சிறந்து விளங்­கும் துர்­கேஸ், தற்­போது 17 வய­தில் உயர்­நிலை நான்­கில் பயின்­று­வரு­கி­றார். எதிர்­கா­லத்­தில் வழக்­க­றி­ஞராக வேண்­டும் என்ற கன­வு­டன் இருக்­கும் துர்­கேஸ், தமிழ்த்­து­றை­யில் ஏதே­னும் சாதிக்க வேண்­டும் என்­பதே தாயின் கனவு.

துர்­கே­சின் சகோ­த­ரி­க­ளுக்­குப் பிற்­கா­லத்­தில் சொந்­த­மா­கக் குடும்­பங்­கள் ஏற்பட்டுவிடும். தம் மறை­விற்­குப் பின்­னர் துர்­கேஸ் தனி­மை­யில் இருப்­பாரோ என்ற கவலை தமக்கு இருந்­தா­லும் அவனது கல்வி அவனுக்குத் துணை நிற்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றார் இந்த உன்­ன­தத் தாய்.

செய்தி: மோனலிசா