தேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 1) நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏறத்தாழ 30,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குடமுழுக்கை கண்குளிரக் கண்ட மூத்தோர்கள்
1930களில் 'சிங்கப்பூரார் வீடு' என்று அன்புடன் அழைக்கப்பட்ட பழம்பெரும் பாரம்பரியம் உடைய குடும்பத்தைச் சார்ந்த 83 வயதாகும் லீலாவதி சுப்பையா, இதுவரை இதே கோயிலில் நான்கிற்கும் மேற்பட்ட குடமுழுக்குகளைக் கண்டுள்ளதாகக் கூறினார்.
ராஜகோபுரம் கொண்டுள்ள தற்போதுள்ள கோயிலைக் கட்ட முயற்சி மேற்கொண்ட தமிழ்க்குடும்பங்களில் தனது குடும்பமும் ஒன்று என்று கூறிய இவர், இக்கோயிலின் பூர்வீகக் குடும்பங்களில் ஒன்றாக விளங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இளம்வயது முதலே இக்கோயிலின் வரலாற்றையும் சக்தியையும் வளர்ச்சியையும் தான் கண்டுவருவதாகக் கூறி மனம்நெகிழ்ந்தார் 70 வயதாகும் கிருஷ்ணவேணி சீனிவாசன்.
ஏழு பிள்ளைகளின் தாயான இவர், தான் ஆரோக்கியமாக இக்குடமுழுக்கை காண நேர்ந்ததே முருகனின் அருளால்தான் என்று கூறினார்.
கோயிலின் புதுப்பிப்புப் பணிகள் செவ்வனே நடந்தேறியதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழா வழக்கமான முறையில் நடைபெறவிருப்பதைக் குடும்பத்துடன் தான் எதிர்நோக்குவதாகவும் இவர் தெரிவித்தார்.
இத்தனை காலம் நல்லதொரு நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வளித்த முருகனுக்கு நன்றிகூற வந்ததாகக் கூறினார் சரோஜா வரதராஜ், 84.
"இயற்கையின் ஆசியோடு நன்முறையில் நடந்தேறிய குடமுழுக்கு விழாவில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. குறிப்பாக, சுவையான அன்னதான உணவு மிகுந்த மனநிறைவை அளித்தது," என்றார் சரோஜா வரதராஜ்.
இயலாதவர்களுக்கும் இனிமையான தரிசனம்
பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயது தன்யஸ்ரீ வர்தினி சிவக்குமார், தனது தாயார் மற்றும் மூத்த சகோதரியுடன் குடமுழுக்கு நிகழ்வினைக் காண வந்திருந்தார்.
முருகன் தனக்கு மிகவும் விருப்பமான தெய்வம் என்று கூறிய இவர், குழந்தைத்தனம் மாறாமல் மழையை ரசித்து குதூகலித்தார்.
இளம்வயதிலிருந்தே இந்தக் கோயில் மீது தன் மகளுக்கு அலாதிப்பிரியம் என்றார் தன்ய ஸ்ரீயின் தாயார் பாலசுந்தரி சிவக்குமார், 50.
சிறப்புத் தேவையுடையவர்களைத் தொண்டூழியர்கள் நன்முறையில் கவனித்து, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்ததாகவும் அவர் பாராட்டினார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் தீவிர பக்தராக உள்ள 64 வயது வள்ளியம்மை சக்தியப்பன், கொட்டும் மழையிலும் தன்னுடைய சக்கர நாற்காலியில் மழையங்கி அணிந்தவண்ணம் குடமுழுக்கு நிகழ்வினைக் கண்டுகளித்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இடுப்பில் ஏற்பட்ட உடற்கோளாறால் சக்கர நாற்காலியுடன் வலம்வரத் தொடங்கிய இவர், அதிகாலை 6 மணிக்கே முருகனைத் தரிசிக்க கோயிலுக்கு வந்தார்.
இவர் ஒவ்வோர் ஆண்டும் இக்கோயிலுக்கு முடிக் காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கோயிலின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் முழு குடமுழுக்கு நிகழ்வினையும் மிக அருகில் இருந்து பார்த்த இவர், கோபுரத்தின் மேலேறி நேரில் கண்டதைப் போன்று உணர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் கண்ணீர்மல்கக் கூறினார்.
குடமுழுக்கில் குதூகலித்த குடும்பத்தினர்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வாழும் 44 வயது கற்பகவிநாயகர் ராமையா, தற்போது 11 வயதாகும் தன் மூத்த மகன் ஒரு வயதாக இருக்கும்போது முதன்முதலில் நடக்க ஆரம்பித்ததே இந்தக் கோயிலில்தான் என்று நினைவு கூர்ந்தார். மனைவி, இரு மகன்கள் என குடும்பமாக அதிகாலையிலேயே வந்திருந்த இவர் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் முருகன் துணைநின்றதை நன்றியுடன் நினைத்துப்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அவ்வப்போது பாதயாத்திரை, தைப்பூசத்திருவிழாவின்போது பால்குடம் என முருகனுக்கும் தங்கள் குடும்பத்திற்குமான பந்தத்தை உறுதிப்படுத்தி வருவதாகவும் இவர் தெரிவித்தார்.
இதேபோல, கணவர், ஏழு வயது மகள், இரண்டு வயது மகன் என குடும்பத்துடன் அதிகாலை 5 மணிக்கே வந்திருந்தார் இல்லத்தரசியான கோமதி ராமக்கிருஷ்ணன், 36. பிள்ளைகளுக்கு மழையங்கி அணிவித்து அதற்குமேல் குடையும் பிடித்து குடமுழுக்கினை இக்குடும்பத்தினர் கண்டுகளித்தனர்.
இந்த வயதிலேயே பிள்ளைகளுக்குப் பக்தியுணர்வைப் புகட்டுவது அவர்களுக்குள் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று கூறிய கோமதி, முருகனின் ஆசீர்வாதமே இந்த மழை என்றும் மகிழ்வுடன் கூறினார்.
தோள்கொடுத்த தொண்டூழியர்கள்
தொண்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் மீனா அண்ணாமலை, 46, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அனை வருக்கும் நாற்காலி, உணவு, தண்ணீர், மழையங்கி, அடிப்படை மருத்துவ வசதி உள்ளிட்ட வசதி கள் நன்முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்.
இக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் தொண்டூழியர் குழுவில் கடந்த 24 ஆண்டுகளாக தொண்டூழியம் செய்துவரும் நா. மீனாட்சி சுந்தரம், 54, "இக்குடமுழுக்கு நிகழ்வின் ஆயத்தப் பணிகளை இரு மாதங்களுக்கு முன்னதாகவே 600க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஒன்றிணைந்து தொடங்கினோம். பல பக்தர்கள் கைகூப்பி நன்றி தெரிவித்தது மனநிறை வளிக்கிறது" என்று கூறினார்.

