பச்சைகுத்துவதில் தடம்பதிக்கும் நங்கையர்

இருப்பினும் தங்களின் கலை ஆர்வத்திற்கும் வானமே எல்லை எனக் கருதும் இந்திய பெண் பச்சைகுத்தும் கலைஞர்கள் நால்வர் தங்களின் பயணங்களை தமிழ் முரசிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

மூன்றாம் தலைமுறையாக தொடரும் கலைப்பணி 

சிங்கப்பூரில் 1950களிலிருந்து இயங்கிவரும் குடும்பத்தொழிலைப் பல்லாயிரம் மைல் தாண்டி பரோயே தீவுகளுக்கும் பரப்பியுள்ளார் மூன்றாம் தலைமுறை பச்சைகுத்தும் கலைஞரான திருமதி சுமித்ரா டெபி.

இவர், ‘ஜானி டூ தம்பஸ்’ என சிங்கப்பூரில் முன்பு புகழ்பெற்றிருந்த மறைந்த திரு இந்திரா பகதூரின் பேத்தி ஆவார். 

சுமித்ரா டெபி, 41.  படம்: திமத்தி டேவிட்

ஷிலோங்கின் மேகாலயாவில் பிறந்து வளர்ந்து பச்சைகுத்தும் கலையைக் கற்றுக்கொண்ட திரு பகதூர், ஜப்பானிய ஆட்சிக்காலத்துக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் குடும்பத்தோடு கப்பலில் வந்தார்.

இங்கு குடியேறியபோது தம் தொழிலைக் கைவிடாமல் இங்கும் தொடர்ந்தார்.

பிரிட்டிஷ் சிப்பாய்கள், கப்பல் ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் ஆகியோர் மத்தியில் திரு பகதூரின் வலது கையில் இருந்த இரண்டு பெருவிரல்கள் அவரின் அடையாளமாகின.  

“பணமும் வசதியும் அறவே இல்லாமல் தொடங்கிய தொழிலைக் கடல், மலைகளைத் தாண்டி நிறுவியுள்ள தாத்தாவை நினைத்து நான் பிரம்மித்துப் போனேன்,” என்று நெகிழ்ந்தார் சுமித்ரா, 41. 

ஏழு வயதில் தாத்தாவை இழந்த சுமித்ரா, இக்கலையை மாமா திரு ஹர்க்கா பகதூரிடம் கற்றுத்தேர்ந்தார். பணம் சம்பாதிக்க வேண்டி, ஆரம்பத்தில் கடையைப் பார்த்துக்கொள்ளவே அவர் முன்வந்தபோதும் காலப்போக்கில் மாமாவின் கலைவண்ணத்தைக் கண்டு ஊசியை ஏந்த முற்பட்டார். 

பதினைந்து வயதில் பன்றித் தோல்களின்மீது தொடங்கிய சுமித்ராவின் பச்சைகுத்தும் கலைப்பயணம், இதுவரை தம்மைக் கொண்டு வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இக்கலை வழி தமது கணவரையும் அவர் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைத்துப்பார்க்கவில்லை. 

தாத்தா வழிநடத்தியது போலவே, நேர்மையான முறையில் இத்தொழிலை முன்னெடுத்துச் செல்ல விழைகிறார் சுமித்ரா.

“என்னுடைய தாத்தா திறம்வாய்ந்த ஒரு கலைஞர். சிறு வயதிலிருந்தே அவரின் ஓவியங்களையும் பச்சைகுத்தும் முறையையும் கண்டு வியந்திருக்கிறேன். இப்போதுகூட, அவரது தரத்தை அடைவது கடினம். அதுவே எனக்கு உந்துசக்தியாக உள்ளது,” என்றார் சுமித்ரா. 

காகிதக் கப்பல்கள் மடிப்பதே தாத்தா தமக்குக் கற்றுத்தந்த முதல் கலைப்பாடம் என நினைவுகூர்ந்தார் சுமித்ரா. தாத்தா என்றைக்கும் ஆண், பெண் என்ற பாகுபாட்டுக்கு இடம் கொடுக்கவில்லை என்றும் தம் கலையார்வத்தை வளர்க்கவே செய்தார் என்றும் அவர் தெரிவித்தார். 

அந்த அன்பான தாத்தாவை நினைவில் வைத்துச் செயல்படும் சுமித்ரா, ‘பேராமெடிக்கல் டாட்டூயிங்’ எனப்படும் பச்சைகுத்தும் பணியின் வாயிலாக தனக்கென ஒரு தனிப்பாதையைச் செதுக்கிக்கொண்டார். காயங்கள், சருமப் பிரச்சினைகள் முதலியவற்றை அழகிய உடல் ஓவியமாக மாற்றும் வல்லமை கொண்டுள்ளார் அவர். தீக்காயங்கள், சிகிச்சைக் காயங்கள், சருமச் சீரின்மை முதலியவற்றால் நம்பிக்கை குலைந்திருப்போருக்குத் தொடர்ந்து கலைக்கரம் நீட்டி வருகிறார் சுமித்ரா. 

திரு பகதூரின் இரு மகன்களும், மகள்வழி பேத்தியான திருமதி சுமித்ராவும் தொடர்ந்து பச்சைகுத்துவதை முழுநேரமாகக் கொண்டுள்ளனர். அவரின் அம்மாவும் தம்பியும், ஃபார் ஈஸ்ட் பேரங்காடி வளாகத்தில் இயங்கிவரும், ‘கூர்க்கா டாட்டூ ஃபேமிலி’ என்று மறுபெயரிடப்பட்ட குடும்பத் தொழிலைக் கவனித்து வருகின்றனர். 

தாத்தாவின் காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பல அம்சங்கள் மாறியிருந்தாலும் பச்சைகுத்தும் தொழில் குறித்த தவறான புரிதல் இன்னும் மாறவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் திருமதி சுமித்ரா. இருப்பினும், பச்சைகுத்தும் கலைஞர்கள் புகழடைந்து வருவதிலும் இளையர்கள் அதில் ஆர்வம் காட்டி வருவதிலும் அவர் மகிழ்ச்சி கொள்கிறார். 

கனவுகளை வளர்த்த கலை

தமது இருபதுகளில் திருமணமாகி முதன்முதலில் சிங்கப்பூர் வந்தபோது தாம் இல்லத்தரசியாக வாழ்ந்துவிடுவார் என்று எண்ணி இருந்தார் 46 வயது திருவாட்டி ரிங்கூ ஷெர்பா. மேற்கு வங்காளத்தில் மிக கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததாக கூறிய அவர், வாழ்க்கை லட்சியங்களைக் குறித்து அதுவரை யோசிக்கவில்லை. இப்போதோ, அவர் ஒரு பச்சைகுத்தும் கலைஞர்; ‘மந்த்ரா கலெக்டிவ்’ எனும் துளையிடுதல், பச்சைகுத்துதல் கடைக்கு முதலாளி. 

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் பச்சைகுத்துவதில் ஈடுபட்டு வந்துள்ளார் ரிங்கூ. இந்திரா பகதூரின் குடும்பத்துக்குள் திருமணமாகி வந்த அவர், பச்சைகுத்துதல் வழிவழியாக வந்த ஒரு வர்த்தகம் என்பதைத் தெரிந்துகொண்டார். 

பொழுதுபோக்காக திரு ஹர்க்காவிடமிருந்து பச்சைகுத்துதல் கலையைக் கற்றுக்கொண்ட சமயத்தில் தம்முள் கலையார்வம் இயல்பாக இருப்பதை ரிங்கூ கண்டறிந்தார். எனவே, கலைப்புத்தகங்கள், கலை வகுப்புகள் ஆகியவற்றை நாடி இக்கலையில் முழுத் தேர்ச்சி அடைய உழைத்தார். 

இல்லத்தரசிகளாக இருக்கும் தம் பாட்டி, அம்மா போல கணவரின் நிழலிலேயே இருந்துவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டார் ரிங்கூ. 

“பள்ளி, வீடு, இவ்விரண்டு இடங்களைத் தவிர்த்து எனக்கு வேறு இடம் தெரியாது. பெண்கள் கல்லூரிக்கு நான் சென்றேன். நடனம் முதலிய கலைகளைக் கற்றுக்கொள்ள எனக்கு அனுமதி இல்லை,” என்றார் ரிங்கூ. 

கணவரின் ஆதரவு இருந்தாலும் தாம் பச்சைகுத்துவதை இந்தியாவில் இருந்த குடும்பத்தார் வன்மையாக எதிர்த்ததாகக் கூறினார் ரிங்கூ. ஆண்களின் உடலில் பச்சைகுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

“ஒரு மருத்துவர் எவ்வாறு உடலைக் கருதுகிறாரோ அதுபோல பச்சைகுத்தும் கலைஞர்களும் ஓர் உடலை நோக்குகின்றனர். அந்தக் கண்ணோட்டத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இக்கலையைக் கைவிடுவதாக இல்லை என்று முடிவெடுத்தேன்,” என்றார் அவர். 

அக்காலத்தில் ஆண்களே பெரும்பாலும் பச்சைகுத்திக்கொண்டதால், தன்னை நம்பி வருவார்களா என்ற சந்தேகம் ரிங்கூவிற்கு ஒரு தடையாய் இல்லை. பாதுகாப்பு கருதி தன்னை நாடிப் பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் வரத் தொடங்கினர். அவ்வாய்ப்புகளைத் தொடர்ந்து, தமது திறன்மீது ஆண் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது என அவர் கூறினார். 

தற்போது துளையிடுதலில் முழுவீச்சாக இறங்கியுள்ள அவர், பச்சைகுத்துவதுமீது கொண்ட காதலால் அவ்வப்போது அதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இளம் பச்சைகுத்தும் கலைஞர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். 

கலைக்காக சொந்த உடல் அர்ப்பணம்  

இளம் பச்சைகுத்தும் கலைஞர் சந்தியா மனித சருமப் பயிற்சியை மேற்கொண்டபோது முதலில் தன்மீதே செய்துபார்த்தார். சொந்தக் கணுக்காலில் அவர் பச்சைகுத்திக்கொண்ட ரோஜா மலர், அவரின் ஈராண்டு கலைப்பயணத்தின் தொடக்கமாகும். வாடிக்கையாளர்களின்மீது நேரடியாகப் பச்சைகுத்தாமல் வாடிக்கையாளர் ஓவியங்களை தன்மீதே பச்சைகுத்தி பயிற்சி மேற்கொள்வது அவரின் வழக்கமாகிவிட்டது. 

ஜெயக்குமார் சந்தியா பிள்ளை, 25. படம்: திமத்தி டேவிட்

முதல் வாடிக்கையாளரின்மீது பச்சைகுத்துவதற்கு முன் இருந்த பயத்தைப் போக்க இம்முயற்சி சந்தியாவுக்கு உதவியது. ஒருபுறம், அழிக்கமுடியாத தவறுகள் நடந்துவிடுமோ என்ற அச்சம். மறுபுறம், குடும்பத்தினரின் ஆதங்கம். 

நெறிமுறைகளுக்கு எதிரான தொழிலாக பச்சைகுத்துவதைக் கருதிய குடும்பத்தார் சந்தியாவின் முடிவை முதலில் சந்தேகித்தனர். காலப்போக்கில், அவர் கைப்பட வரைந்த உடல் ஓவியங்களையும் அவரின் விடாபிடியான ஆர்வத்தையும் கண்டு அவர்களின் மனம் மாறியது.  

தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் வடிவமைப்புத் துறையில் பயின்ற 26 வயது சந்தியா, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மாணவர் தேவை என்ற அறிவிப்பைக் கண்டு விண்ணபத்திருந்தார். அப்போது மாணவராக இணைந்து தற்போது ‘ரிக்கீஸ் டாட்டூ கம்பெனி’ கடையில் பச்சைகுத்தும் கலைஞராக வளர்ந்துள்ளார். 

பச்சைகுத்தும் உலகில் இருக்கும் அனுபவமுள்ள, பலதரப்பட்ட பாணிகள் கொண்ட கலைஞர்களைக் கண்டு வியந்தார் சந்தியா. உலகமயமாதல் காரணமாக இத்துறையில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்சமயம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது அவரை ஈர்த்தது. வாழ்க்கைதொழிலாக இதனை அமைத்துக்கொள்ள உழைத்து வருகிறார் அவர். 

உடல் வகையும் சருமமும் எவ்வாறு இருந்தாலும் பாரபட்சமின்றி பச்சைகுத்துவது சந்தியாவின் கொள்கை. உடலை அலங்கரிப்பது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கே என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.  

“பிறர் என் உடலை எவ்வாறு பார்க்கின்றனர் என்ற பயம் எனக்கு நீண்டநாளாய் இருந்துள்ளது. நான் கையில் பச்சைகுத்திக் கொண்ட முதல் தருணத்தில் என்னைப் பார்த்த ஒரு நபர் என் உடலை நோட்டமிடாமல் என் கையிலிருந்த ஓவியத்தை நோக்கினார். அப்போது நான் அடைந்த மனநிறைவை வருணிக்க வார்த்தையில்லை,” என்றார் ஜெயக்குமார் சந்தியா பிள்ளை. இதுபோன்ற ஏதேனும் ஒரு வகையில் தமது வாடிக்கையாளர்களிடத்தில் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்துவது தன்னை மேன்மேலும் ஊக்குவிப்பதாக அவர் கூறினார். 

தொழில் தொடங்க ஆர்வம் 

முதன்முதலில் மனித சருமத்தில் பயிற்சி செய்யவிருந்த சரிஷாவுக்குத் தமது கையைக் கொடுத்தார் அவரின் தாயார். அதுவரை போலி சருமத்தில் பச்சைகுத்தி பழகிய சரிஷா, கைகள் நடுநடுங்க அம்மாவின் கையில் வரைந்து முடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றார். பத்து நிமிடங்களில் முடிக்க வேண்டிய ஓவியத்தை ஒரு மணி நேரமாக வரைந்தபோதும், அம்மா பொறுமையாக இருந்ததை நினைவுகூர்ந்தார் அவர்.  

சரிஷா தினேஷ், 24. படம்: சரிஷா தினேஷ்

‘ப்ரின்செஸ் இங்க்’ என்ற தற்காலிக ‘ஏர்ப்ரஷ்’ வகை பச்சைகுத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் தம் தாயாரைப் போலவே, ஓவியக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் சரிஷா. 

பல காரணிகளால் இத்துறையில் இந்திய பெண்கள் குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டார் சரிஷா. “என் குடும்பத்தினரோ எனது ஆர்வத்துக்கு வித்தும் உரமும் இட்டனர். கலை எல்லோருக்கும் பொதுவானது என்பதை வலியுறுத்தினர். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் 24 வயது சரிஷா தினேஷ். 

நன்யாங் நுண்கலைப் பள்ளியில் படிப்பை முடித்த பின்னர், பச்சைகுத்துவதில் ஆர்வம் ஏற்படவே, பயிற்சி மேற்கொண்டார் சரிஷா. முதலில் தயக்கம் இருந்தபோதும் சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் தடம்பதிக்கும் பெண் பச்சைகுத்தும் கலைஞர்களைப் பற்றி கேள்விப்பட்டது அவருக்கு நம்பிக்கை அளித்தது.

சில சமயம் பச்சைகுத்துவதற்குப் பல மணி நேரம் தேவைப்படுகிறது. தமது முதல் முழுநீள ஓவியத்தைப் பச்சைகுத்த ஆறு மணி நேரம் ஆனதாகவும் அதில் பல சவால்கள் இருந்ததாகவும் சரிஷா பகிர்ந்துகொண்டார். உடலை வருத்திக்கொண்டு அமர்ந்திருக்கவேண்டும்; அதே சமயம் கவனம் சிதறாமல் இருக்கவேண்டும். இது ஆண்களால் மட்டுமே சாத்தியம் என்ற கருத்து மாறிவருவது தனக்கு ஊட்டமளிப்பதாக அவர் கூறினார். 

தற்போது நியூ டெஸ்டமண்ட் கடையில் பச்சைகுத்தும் கலைஞராக இருக்கிறார் சாரிஷா. எதிர்காலத்தில், தனது சொந்த பச்சைகுத்தும் கடையைத் திறக்கும் கனவு கொண்டுள்ளார் அவர். 

கலைஞர்களைச் சமமாகப் பார்க்க வைக்கும் கலை

ரிங்கூ, சுமித்ரா, சரிஷா மூவரும் முதன்முதலில் பச்சைகுத்தக் கற்றுக்கொண்டது, இந்திரா பகதூரின் மகன் திரு ஹர்க்காவிடம்தான். மூவரும் பல்வேறு காலகட்டங்களில் இவரிடம் மாணவர்களாக இருந்துள்ளனர். 

கலையில் ஆண், பெண் பாகுபாடு இல்லை என்பதை 64 வயது திரு ஹர்க்கா ஆழமாக நம்புகிறார். தற்சமயம் மாறிவரும் பச்சைகுத்துதல் துறை இதற்குச் சான்றாகும் என்றார் அவர்.  

திரு ஹர்க்காவிற்குக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு அனுபவம் உண்டு. 1990களிலிருந்தே பலருக்கும் பச்சைகுத்துதல் பயிற்சி அளித்துவரும் இவர், கிட்டத்தட்ட 200 பேரைத் தயார்படுத்தியுள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதை அவர் குறிப்பிட்டார். 

அக்காலாத்தில் பச்சைகுத்தும் கலைஞர்களாக பெண்கள் இருப்பது குறைவு என்றாலும் இத்துறைக்கு அவர்கள் புது கலைக்கோணங்களையும் புது வடிவமைப்பு வகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளதாக திரு ஹர்க்கா கூறினார். 

முன்னர் பெரும்பாலும் ராணுவ வீரர்கள், கடற்படையினர், குண்டர் கும்பல் உறுப்பினர்கள் ஆகியோர் பச்சைகுத்திக்கொண்டனர். அவர்களை பலசாலியாக காட்டும் வடிவமைப்புகளே பிரபலமாக இருந்தன. சிங்கம், யானை, கடல்நாகம் முதலிய விலங்குகளுடன் மண்டை ஓடுகள், நெருப்பு முதலிய படங்கள் இவற்றில் அடக்கம்.  

“மலர்கள், இயற்கை, முதலியவற்றை அதிகமாக வடிவமைப்புகளில் இணைக்கத் தொடங்கினர் பெண் கலைஞர்கள். பச்சைகுத்தும் துறை குறித்த பார்வை மாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்,” என்றார் அவர். 

இருப்பினும், பெண்கள் சவால்களை எதிர்நோக்கவே செய்கின்றனர். தாம் தற்போது நடத்தி வரும் ‘பாடி டெக்கர்’ கடையில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் முழுக்க முழுக்கப் பெண் கலைஞர்களே இருந்தனர். ஆனால் அந்நிலை நீடிக்கவில்லை. 

போட்டித்தன்மை அதிகம் நிலவியது. அத்துடன் பெண்கள் மட்டும் நடத்தும் கடையாக உருமாறிய ‘பாடி டெக்கர்’ அடையாளம் சிலரிடத்தில் தரம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றும் வருத்தம் தெரிவித்தார் திரு ஹர்க்கா. 

“முன்பு போல் இல்லாமல் இப்போது சமூக ஊடகம் உள்பட பல தளங்கள் இருப்பதால் பெண்கள் தங்களின் திறமையையும் வல்லமையையும் பொதுவெளியில் காட்டலாம். இதுவும் இத்துறைக்கு மேன்மை அளித்துள்ளது,” என்றார் திரு ஹர்க்கா. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!