வாழ்நாள் நினைவுகளை வாரிவழங்கும் அணிவகுப்பு

தேசிய தின அணிவகுப்புக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.

பாடாங் பெருந்திடலில் இம்மாதம் 9ஆம் தேதியன்று நடைபெறும் தேசிய தின அணிவகுப்பு மேடையில் 2,400 கலைஞர்களும் 43 படைப்பாக்க நிபுணர்களும் இடம்பெறுவர். மேலும், 19 சிங்கப்பூரர்களின் பங்களிப்பைக் காட்டும் குறும்படங்களும் காண்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துபவர்கள், ஒப்பனையாளர்கள் மற்றும் படைப்புகளை உருவாக்குபவர்களாக 400 மாணவர்கள் இடம்பெறுவர்.

இவர்களுடன் ‘என்டிபி2023’ (#NDP2023) மற்றும் ‘ஆன்வர்ட்ஸ்எஸ்ஒன்எஸ்ஜி’ (#OnwardsAsOneSG) ஹேஷ்டேக்குகளில் சமூக ஊடகப் பயனாளர்கள் தேசிய தினம் தொடர்பான படங்களைப் பதிவேற்றம் செய்துவருகின்றனர்.

வண்ணங்களின் துடிப்புமிக்க சுழற்சியாக இருக்கப்போகும் இந்த அணிவகுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் நாங்கள் சந்தித்த பங்கேற்பாளர்கள். 

பாட்டுக்குத் துடிப்பூட்டும் ‘ராப்’ கலைஞர்

ஆங்கிலத்திலும் தமிழிலும் ராப் செய்யக்கூடிய உள்ளூர் இசைக்கலைஞர் லினெத் ராஜேந்திரன். படம்: லினெத் ராஜேந்திரன்

தாளங்களுக்கு ஏற்ப வளைந்து வார்த்தைகளோடு விளையாடும் கலையே ‘ராப்’ என்கிறார் உள்ளூர் இசைக்கலைஞர் லினெத் ராஜேந்திரன், 29. இவ்வாண்டின் தேசிய தின பாடலான ‘ஷைன் யுவர் லைட்’ பாடலில் இவரது ராப் இடம்பெறுகிறது.

இப்பாடல் நாட்டுப்பற்றுக்கான பாடலாக மட்டும் இல்லாமல் தனிநபர்களை  ஊக்குவிக்கும் பாடலாகவும் இருப்பதாக திரு லினெத் கருதுகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் உறுதிசெய்யப்பட்ட பாடலுக்குச் சில வாரங்களில் ராப் வரிகளை எழுதி இரண்டு நாள்களில் பதிவு செய்ததாகக் கூறினார்.

“தனிநபர்களின் திறன்கள் பிறருக்குப் பயனாவது உலகின்மீது ஒளிவீசுவதற்கு ஒப்பானது. பாடலைக் கேட்கும்போது இந்தக் கருத்து எனக்குத் தோன்றுகிறது. அன்பாலும் பண்பாலும் செய்யப்படும் எதுவும் அகன்று விரியும்,” என்றார்.

இவரால் தமிழிலும் ஆங்கிலத்திலும் ராப் செய்ய முடியும். தமிழ் உச்சரிப்பைக் கையாளும் ஆற்றலைப் புரிந்த பிறகு தமிழில்  ‘ராப்‘ செய்வது அவ்வளவு கடினமல்ல என்கிறார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ‘லயன் சிட்டி கியா’ என்ற நான்கு மொழிப் பாடலில் இடம்பெற்றுள்ள ராப் வரிகளையே இவர் பயன்படுத்தினார். 

உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் தற்செயலாகத் தொடங்கிய இவரது இசைப் பயணம், இவரை நாடளாவிய ஒரு மேடையில் நிறுத்தியுள்ளது.

“நான் தயாரித்த பாடல் ஒன்றைச் சக மாணவர்கள் வரவேற்றனர். பாடல்களை இயற்ற அவர்கள் அளித்த பாராட்டு எனக்கு ஊக்கமளித்தது. இதைவிட நல்ல பாடல் ஒன்றைத் தயாரிக்க முயற்சி எடுத்துக்கொள்ளலாமே என்று முடிவெடுத்தேன்,” என்றார்.

தொடக்கத்தில் சுரங்களைக் கொண்ட பாடல் வரிகளைப் புனைந்தபிறகு திரு லினத் தாளங்களை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ராப் பாடல்களை இசைக்க ஆரம்பித்தார். ‘கிரிசஸ் கிரைன்ட்’ ராப் குழுவில் தற்போது இணைந்துள்ள இவர், ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ராப் கொண்ட பாடல்களைத் தயாரித்து வருகிறார்.

ஜேஸி, எமினெம், தமிழில் யோகி-பி போன்ற கலைஞர்களின் படைப்புகளைக் கேட்டு வளர்ந்த திரு லினெத், தம் சொந்த பாணியில் ‘ராப்’ எழுத முயன்று வருகிறார். 

“கலைத்துறையில் எனக்கு முன்மாதிரிகள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் செய்வதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எனக்கென்ற ஒரு தனி பாணியை உருவாக்குவேன். பிறர் சாயல் இல்லாத படைப்புகளில்தான் தனித்தன்மை இருக்கும்,” என்று திரு லினெத் கூறினார்.

நாட்டுக்காகப் பாடுவது பெருமை என்றாலும் அதைத் தமிழில் பாடுவது இரட்டிப்புப் பெருமை என்கிறார் இவர்.

பிற இனத்தவர் தமிழ் பாடுவதால் பெருமை

அணிவகுப்பில் முதல்முறையாகப் பாடவிருக்கும் கெவின் பிரேண்டன். படம்: தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக்குழு

சிறு வயதில் பியானோ கற்றுக்கொண்ட திரு கெவின் பிரேன்டன், பாடல்களை இயற்றும் திறமைகொண்டவர். சிங்கப்பூர் ஆயுதப் படையின் இசை, நாடக கம்பெனியின் அங்கமாக இவ்வாண்டு அணிவகுப்பில் இடம்பெறுகிறார்.

2015, 2019 ஆண்டுகளின் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்ட திரு கெவின், முதன்முறையாக இம்முறை பாடவுள்ளார்.  

சிங்கப்பூரில் பல்வேறு கலாசாரங்கள் சங்கமிப்பதைத் தம் பாடல் பிரதிபலிப்பதாகக் கூறினார் இவர். இதற்காக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஒத்திகை செய்து வருகிறார்.  

தேசத்திற்காக அனைவரும் ஒன்றுகூடுவதைக் காணும்போது மெய்மறந்து போவதைத் தாம் உணர்வதாக திரு கெவின் கூறினார். பிற இனத்தவரும் ‘முன்னேறு வாலிபா’ போன்ற தமிழ்ப்பாடல்களைப் பாடும்போது அணிவகுப்பின் கலைநிகழ்ச்சி மிக அர்த்தமுள்ளதாக மாறுகின்றது என்றார் அவர்.

“அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்,” என்றார்.

மக்களை உற்சாகப்படுத்தும் டனிதா

அணிவகுப்பில் இனிய தருணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் டனிதா நாகராஜன். படம்: கி.ஜனார்த்தனன்

அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் பணியை வரும் தேசிய தினத்தன்று ஆற்றவிருக்கிறார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவி டனிதா நாகராஜன், 18.

கூட்டத்தினர் முன்னிலையில் சிரித்துப் பல்வேறு உடல் அசைவுகளைக் காண்பித்துப் பிறரையும் சிரிக்க வைப்பதை எண்ணி மகிழ்வதாக இதனை முதன்முறையாக செய்யும் டனிதா கூறினார்.

ஒவ்வொரு கூட்டமும் வெவ்வேறு என்பதால் அதற்கு ஏற்றவகையில் தாம் செயல்படுவதாகக் கூறினார்.

“மக்களின் உற்சாகத்தை நான் முடுக்கிவிடும்போது என் உற்சாகமும் கூடுகிறது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இத்தகைய தருணங்களை நினைவில் திரட்டி வைத்துக்கொள்ள தாம் அணிவகுப்புக் கொண்டாட்டத்தில் சேர்ந்ததுடன் பிறரையும் சேர ஊக்குவிக்கிறார். ஆண்டுக்கு ஆண்டு அணிவகுப்பின் ஈர்ப்புத்தன்மை அதிகரித்துவருவதாகக் குறிப்பிட்ட டனிதா, தேசிய தினத்தன்று நடைபெறவிருக்கும் உற்சாகக் கொண்டாட்டத்துக்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

குடும்பமாகப் பங்களிப்பு

(இடமிருந்து) எம் ரேஷ்மி, திரு ஸ்டிஃபன்செல்வா, திருவாட்டி எஸ்தர் ராஜ். படம்: கி.ஜனார்த்தனன்

சிங்கே ஊர்வலத்தில் ஆடித் திளைத்த களிப்பை நீட்டிக்க விரும்பிய ஒரு குடும்பம், வரும் தேசிய தின அணிவகுப்பிலும் பங்குபெறுகிறது.

திருவாட்டி எஸ்தர் ராஜ், 50, மூன்று முறை ராணுவ அணிவகுப்பிலும் இரண்டு முறை இந்து அறக்கட்டளை வாரியத்தின் சார்பிலும் முன்னதாகக் கலந்துகொண்டுள்ளபோதும் தம் கணவருடனும் பிள்ளைகளுடனும் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. 

ஆடுவதற்கு முதலில் தயங்கிய தம் கணவரை, நாட்டுக்காக ஒரு குடும்பமாக ஆடும்படி திருவாட்டி எஸ்தர் ஊக்குவித்தார். வேறு எந்த நிகழ்ச்சியிலும் இதுவரை தாம் ஆடியதில்லை என்று கூறிய திருவாட்டி எஸ்தரின் கணவர் திரு ஸ்டிஃபன்செல்வா, 32, தங்கள் திருமண நாள் அன்று நடந்த அணிவகுப்பு தெரிவுச்சுற்றில் பங்கேற்றது இந்த முயற்சிக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்திருப்பதாகக் கூறினார். 

“மக்கள் கழகத்திற்கு நான் என் நன்றியைக் கூறுகிறேன். கழகம் எனக்குப் பயிற்சி அளித்து பல இன மக்களுடன் பழகும் வாய்ப்பையும் தந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திரு செல்வா, 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் குடியுரிமையைப் பெற்றார். சிங்கப்பூரில் தமக்கு ஒரு நல்ல குடும்பமும் வாழ்க்கையும் கிடைத்திருப்பதாக நெகிழ்ந்து கூறிய அவர், குறுகிய காலத்தில் அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். 

முதன்முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டதாகக் கூறிய மகள் எம் ரேஷ்மி, தம் குடும்பத்தை மேலும் பிணைக்கும் வாய்ப்பாக இந்த அணிவகுப்பின் கலைநிகழ்ச்சிகளும் அதற்கான ஒத்திகையும் அமைந்திருப்பதைச் கூறினார். சக நடனமணிகளுடன் நட்பு உண்டானதாகவும் தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ரேஷ்மி கூறினார். 

கூட்டங்களுக்கான வழிகாட்டி

சிங்கப்பூர் ஆயுதப் படையின் தொண்டூழியப் பிரிவைச் சேர்ந்த செளரிநாயகம் இருதயராஜ் விஸ்சி டேனியல், 44. படம்: தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக்குழு

கூட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் செளரிநாயகம் இருதயராஜ் விஸ்சி டேனியல், 44, மாணவர்கள் உள்பட பலரைத் தம் அணிவகுப்புப் பொறுப்பில் சந்திப்பதாகக் கூறினார். ஈராண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் வந்த இவர், தமது பணி குறித்து உற்சாகமாக இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூர் ஆயுதப்படையின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகளிடம் எடுத்துக்கூற அதன் தொண்டூழியப் படையில் சேர்ந்ததாக திரு டேனியல் தெரிவித்தார். திரு டேனியலுக்கு 14 வயது மகனும் 12 வயது மகளும் உள்ளனர்.

சாலை மூடலால் எரிச்சல் அடையும் சிலர், தம்மிடம் கோபத்தை வெளிப்படுத்துவதாக திரு டேனியல் கூறினார். இருந்தபோதும் அவர்களைப் பொறுமையுடன் சமாளித்துச் சமாதானம் கூறுவார். 

ராணுவ அணிவகுப்பைக் காண விரும்புவோர் சாலை மூடல்கள் உள்ள இடங்களைப் பற்றி முன்னதாகவே தெரிந்துகொண்டு நேரத்துடன் வருமாறு திரு டேனியல் அறிவுறுத்தியும் வருகிறார்.

அணிவகுத்து நடைபோடும் வாய்ப்பு

அணிவகுப்பு நடையைப் பழகும் அண்ணாதுரை அன்பு அகானா. படம்: தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக்குழு

சிறு வயதில் தேசிய தின அணிவகுப்பைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது ராணுவத்தில் இருப்பவர்களும் உயர்பதவியில் இருப்பவர்களும்தான் அணிவகுத்துச் செல்ல முடியும் என நினைத்திருந்ததாக அண்ணாதுரை அன்பு அகானா, 24, தெரிவித்தார். எனவே, அணிவகுப்பில் படைகளுடன் அணிவகுத்துச் செல்லும் வாய்ப்பு தமக்குக் கிடைத்தபோது தம்மால் அதை நம்ப முடியவில்லை என குமாரி அகானா கூறினார்.

‘ஹார்ட்வேர் நெட்வர்க்’ அரசுசாரா அமைப்பைச் சேர்நத குமாரி அகானா, முன்னைய தேசிய தின அணிவகுப்புகளில் வழிகாட்டியாகக் கலந்துகொண்டிருந்தபோதும் இவ்வாண்டு முதன்முறையாக அணிவகுத்துச் செல்கிறார்.

மாணவர் சீருடைப் படைகளில் பங்கேற்ற அனுபவமே இல்லாத நிலையில் அணிவகுப்பு நடையைப் பழகும்போது பலமுறை பிழைகள் செய்திருந்ததாக குமாரி அகானா கூறினார். இதற்காக சிலேத்தார் முகாமில் மே மாதம் முதல் பயின்று வரும் தமக்கு, பயிற்றுவிப்பாளர்கள் பொறுமையாக வழிகாட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒத்திகைக்கு இடையே சக பங்கேற்பாளர்களுடன் பேசி நட்புறவை வளர்க்க முடிந்ததாக குமாரி அகானி கூறினார்.

அணிவகுப்பு நடை மூலம் தன்னம்பிக்கையும் புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் துணிச்சலும் அதிகரித்ததாகக் கூறும் இந்த இளையர், இந்த அனுபவங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கக்கூடியவை என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!