தேசிய தினப் பேரணி உரை - மக்கள் கருத்து

இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையாற்றிய பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர் மக்களின் தேவைகளை முன்னிறுத்தி அவர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு ஆதரவுத் திட்டங்களையும் செயல்திட்டங்களையும் அறிவித்தார்.

இம்மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற இவ்வுரையைப் பற்றிய பொதுமக்களின் கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் அறிந்து வந்தது இவ்வார தமிழ் முரசு.

வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கும் மூத்தோருக்கான திட்டம் 

புக்கிட் பஞ்சாங் வீவக குடியிருப்பில் மூவறை வீடு ஒன்றில் வசித்து வருகிறார் திருவாட்டி லெட்சுமி சந்திரசேகரன், 76. இவர் 27 ஆண்டுகளுக்கு முன் தம் கணவரை இழந்தார். இவருக்கு இரு மகள்கள். ஒற்றைப் பெற்றோராகத் தம் இளைய மகளுடனும் பள்ளிக்கூடம் செல்லும் பேத்தியுடனும் வசித்துவரும் இவர், பகுதிநேரமாகத் தனியார் கூட்டுரிமை அடுக்குமாடி ஒன்றில் மாதம் 700 வெள்ளி ஊதியத்திற்குப் பணியாற்றி வருகிறார். 

அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய ‘மாஜுலா’ தொகுப்புத் திட்டத்தின் கீழ் முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த இவருக்கு மத்திய சேம நிதிக் கணக்கில் ஆண்டுக்கு $1,000 வரை கிடைக்கும். இதனுடன், ஒருமுறைத் தொகையாக மசேநிதி ஓய்வுக்காலக் கணக்கில் $1,500 வரை சேர்க்கப்படும். மெடிசேவ் எனப்படும் மருத்துவ சேமிப்புக் கணக்கில் ஒருமுறைத் தொகையாக $1,000 வரை போடப்படும். 

“புதிய மாஜுலா தொகுப்புத் திட்டத்தை வரவேற்கிறேன். மகளையும் பேத்தியையும் ஆதரித்துவரும் எனக்கு இந்த திட்டம் மிகுந்த மனநிம்மதியை அளித்துள்ளது. நலத்திட்டங்களின் கீழ் நான் தகுதிபெறும் சலுகைகள் எங்கள் குடும்பத்துடைய வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இருக்கும்,” என்று தம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியவாறு கூறினார் திருவாட்டி லெட்சுமி. 

ஊக்கமளிக்கும் ‘இளம் முதியவர்கள்’ மீதான கவனம் 

பாலர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் தாமரைச்செல்வி சதீஷ்குமார், 44, “இவ்வாண்டு தேசிய தின பேரணி உரையில் பிரதமர் குறிப்பிட்ட ‘இளம் முதியவர்கள்’ எனும் சொற்றொடரே அதிக ஊக்கம் அளிப்பதாக உள்ளது. வயது ஏற ஏற நமக்கான முக்கியத்துவத்தை நம் சூழலில் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள நம்மை அறியாமல் முயற்சி செய்யத் தொடங்குகிறோம். இந்நிலையில் முதிய பருவத்தை நோக்கி நகரும் சாராரைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கென அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புத் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை,” என்று கூறினார். 

நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முதியவர்களிடம் மேலோங்க வேண்டும் 

“மூப்படைந்து வரும் சிங்கப்பூரர்களின் நலனில் அக்கறை கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ‘மாஜுலா திட்டம்’  அதிக நம்பிக்கையளிக்கிறது. ஆண்டுதோறும் இதுபோன்ற பல நலத்திட்டங்கள் வந்தாலும் பல முதியவர்களுக்குத் தாங்கள் தகுதிபெறும் சலுகைகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எளிய முறையில் விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுதல் அவசியம்,” என்று கூறினார் சுகாதாரத் துறையில் நோயாளிகளைப் பராமரிக்கும் நிர்வாகியான மல்லிகா சரவணன், 49. 

மறுவிற்பனை வீடுகளின் விலையேறுமே என்ற அச்சம் 

“முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத பேட்டைகளின் பிரிவுகள் இப்போதைய சூழலுக்குப் பொருத்தமதமற்றதாக இருப்பதை உணர்ந்து அவற்றை ஆராய்ந்து முறைப்படுத்தப்பட்ட தீர்வுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய வீடமைப்புத் திட்டங்கள் நீடித்த நிலைத்தன்மை அம்சத்தைக் கொண்டிருக்கும். ஆயினும் மறுவிற்பனை வீடுகளின் விலை உயர்த்தப்படுமே என்ற அச்சம் எழுந்துள்ளது. உடனடியாக வீடு தேவைப்படும் குடும்பங்களுக்கு வீடு வாங்குவதில் உள்ள பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன,” என்று தெரிவித்தார் கடந்த ஆண்டு திருமணமாகி, மறுவிற்பனை வீடு வாங்கும் திட்டத்தில் இருக்கும் ‘மெண்டல் ஆக்ட்’ தொண்டூழிய நிறுவனத்தின் இயக்குநர் திரு தேவானந்தன் த/பெ தமிழ்ச்செல்வி, 31. 

நம்பிக்கையளிக்கும் ‘பிளஸ் வீடமைப்புத் திட்டம்’ 

தனியார் நிறுவனத்தில் தரவியல் வல்லுநராகப் பணிபுரியும் மாதுரி சத்யநாராயணன், 43, “புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிளஸ் வீடமைப்புத் திட்டம் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பொது இடங்களுக்கு அருகில் வரவிருக்கும் இந்த பிளஸ் வீடுகள் வாழ வசதியாக இருக்கும். எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பும் கூடும். அதிக எண்ணிக்கையிலான வீடுகள் தேவைப்படும் சூழலில் இருப்புகள் குறைவாக இருக்கின்றனவோ என்ற அச்சம் குறைந்துள்ளது,“ என்று தெரிவித்தார். 

மகிழ்ந்திருக்கும் ஒற்றையர்கள் 

“ஒற்றையர்களால் இனி அனைத்து வட்டாரங்களிலும் ஈரறை வீடு வாங்க முடியும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களின் குடியிருப்புத் தேவைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை வரவேற்கத்தக்க ஒன்று. விரைவில் வீடு வாங்கத் திட்டமிட்டிருந்த சூழலில் பிளஸ் ரக வீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன்,” என்று கூறினார் தன்னுரிமை செய்தியாளராகப் (Freelance Journalist) பணிபுரியும் எஸ். ஸ்ரீராம், 36. 

இக்கட்டான சூழலில் நம்பிக்கை 

உடல்நிலை காரணமாக விலங்குகளைத் தாம் பல ஆண்டுகளாகப் பராமரித்த வேலையை இவ்வாண்டு தொடக்கத்தில் விட்டுவிட்டார் 54 வயதாகும் ரவிச்சந்திரன் ராமலிங்கம். இவர் ஈசூன் பகுதியிலுள்ள ஒரு மூவறை மறுவிற்பனை வீட்டில் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் முன்னர் பார்த்து வந்த வேலையின் மாத வருமானம் $1,400. தாதியாகப் பணியாற்றிவரும்எ இவருடைய மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் $3,350 ஊதியம். ர

வேலையை விட்டபின் சில மாதங்கள் ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்தார் ரவிச்சந்திரன். ஆனால் அன்றாட குடும்பத் தேவைகள், பிள்ளைகளின் கல்வி, மருத்துவச் செலவு போன்ற பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே வேலையை விட்ட சில வாரங்களிலேயே உணவகம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராகத் தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்துள்ளார் ரவிச்சந்திரன். 

தச்சு வேலையில் ஈடுபாடுமிக்க இவர், அரசாங்கத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் தம்மை மேம்படுத்திக்கொண்டு புதிய வேலையைத் தேடிக்கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். 

“என்னைப் போல் எதிர்பாராத விதமாக வேலையை இழக்கும் பலருக்கும் உடனடியாக ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பது மிகவும் சவாலான ஒன்று. அச்சூழலில் நிதி ஆதரவு கிடைத்தால் பேருதவியாக இருக்கும். மாற்று வேலைக்குத் தயார்படுத்திக்கொள்ளவும் போதிய அவகாசம் கிடைக்கும். இதற்கான திட்டத்தைப் பற்றி பிரதமர் அறிவித்தது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்,“ என்று கூறினார் ரவிச்சந்திரன். 

கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள வரியேற்றம்  

தனியார் ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்திவரும் ஆல்பர்ட் கென்னடி, 45, “ஏற்கெனவே வாழ்க்கை செலவினம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி உயர்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் வழங்கும் பற்றுச்சீட்டுகளும் இதர சலுகைகளும் உதவி புரிந்தாலும்கூட வரி அதிகரிப்பின் தாக்கம் ஒரு சாமானியருக்கு அதிகமாகவே இருக்கும். இதற்கான ஆதரவுகளின் தேவைகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தது ஆறுதல் அளிக்கிறது,” என்று கூறினார்.

உலகப் பொருளியலில் சிங்கப்பூரின் நிலை குறித்த விளக்கம் போதவில்லை 

“அமரர் லீ குவான் இயூ பிரதமராக உரை ஆற்றும்போது உலகப் பொருளியல் சூழலில் சிங்கப்பூரின் நிலையையும் அதனை முன்னேற்றக் கையாளவிருக்கும் உத்திகளையும் பற்றி விளக்கமாக எடுத்துரைப்பார். இப்போதுள்ள உரைகள் சிங்கப்பூரின் உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமே மையப்படுத்துபவையாக இருக்கின்றன. உலகளவில் ஒரு நாட்டின் நிலையை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருத்தல் மிகவும் அவசியம். கடந்த ஓராண்டாக தனிப்பட்ட ரீதியில் சிங்கப்பூர் எத்தகு அனைத்துலக சவால்களைச் சந்தித்துச் சமாளித்தது, இவ்வாண்டு நாம் எதிர்கொள்ளவிருக்கும் சூழல்கள் போன்றவை குறித்த கருத்துகள் உரையில் பெருமளவு இடம்பெறாதது சற்றே ஏமாற்றமளித்தது,” என்று கூறினார் தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணிபுரியும் சுந்தர் மூர்த்தி, 58. 

நேர்மைக்குப் பெயர்போன தேசம் 

“சிங்கப்பூர் நேர்மைக்கும் பாகுபாட்டின்மைக்கும் பெயர்போன ஒரு தேசம். அண்மைய காலங்களில் அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் சற்றே அதிர்ச்சி அளித்தாலும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை. நேர்மையான தன்மையைக் கடைபிடிப்பதாகப் பிரதமர் அளித்துள்ள உத்திரவாதத்தை வரவேற்கிறேன். இதுவே சிறந்த தலைமைத்துவத்துக்குச் சான்று,” என்று கூறினார் சுயத்தொழில் செய்யும் நசீர் அகமது, 48.  

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள் 

  • 50 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் ஓய்வுக் காலத் தேவைகளுக்கு உதவ $7 பில்லியன் மதிப்பில் புதிய ‘மாஜுலா தொகுப்புத் திட்டம்’ 
  • மக்கள் விரும்பும் அமைவிடத்தில் புதிதாக உருவாக்கப்படும் ‘பிளஸ் வீடுகள்’
  • வேலையிழந்தோர் திறன் மேம்பாட்டிற்கான நிதி ஆதரவு
  • ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு தாக்கத்தை ஈடுகட்ட ஆதரவு தேவைப்படுமா என்பது குறித்து மேற்கொள்ளப்படும் பரிசீலனை 
  • மூத்தோருக்குத் தோதான வசிப்பிடங்களை உருவாக்குதல்
  • துடிப்புடன் மூப்படைய உதவும் நிலையங்களின் விரிவாக்கம்
  • மக்கள் செயல் கட்சியின் தலைமைத்துவப் புதுப்பிப்புக் கால அட்டவணையில் மாற்றமில்லை
  • ஊழலற்ற அரசாங்கக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க வாக்குறுதி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!