தலைக்கு மேல் கூரையின்றித் தவிப்பு; அடிப்படை உரிமைகளை நிலைநாட்டத் துடிப்பு

முதலாம் உலகநாடாகக் கருதப்படும் அதிநவீன சிங்கப்பூரில், கிட்டத்தட்ட 1,000 பேர் நிரந்தர வீடில்லாமல் இருப்பது 2019ஆம் ஆண்டில் தெரியவந்தபோது பலரும் அதிர்ச்சியுற்றனர்.

மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் சொந்த வீடுகளில் தங்கி உள்ளனர். சிங்கப்பூரின் வீட்டுரிமை விகிதம் உலகளவில் ஒப்பிடுகையில் உயர்ந்து நிற்கிறது. தெருக்களுக்குத் தள்ளப்பட்டோருடன் பொதுமக்கள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வது அரிதே. இந்நிலையில், அவர்களின் நிலை தற்சமயம் கூடுதல் ஆதரவுடன் மேம்பட்டு வருகிறது. அவர்களின் அனுபவங்கள், அரசாங்கம் எவ்வகையில் அவர்களை மீட்டெடுத்து வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது என்பன குறித்து ஆராய்கிறது இவ்வாரச் சிறப்புக் கட்டுரை.

குடும்பச் சிக்கல், வீட்டு வாடகை அலைக்கழிப்பு  

லிட்டில் இந்தியா, சைனாடவுன், பிராஸ் பசா இடங்களில் மறைவான பகுதிகள், ஒதுங்கிடங்கள் ஆகியவற்றில் அடைக்கலம் தேடுகிறார் 58 வயது ஆதி (உண்மைப் பெயரல்ல). உடுத்த மூன்று சட்டைகள், உள்ளாடைகள், குளிப்பதற்குத் தேவையான பொருள்கள் ஆகியவை மட்டும் அடங்கியுள்ள தோள் பையை மாட்டிக்கொண்டு இடத்துக்கு இடம் மாறுவது கடந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கு வழக்கமாகிவிட்டது. 

அவர் தற்காலிகத் தஞ்சம் புகுந்துள்ள அந்த மின்சார அறை வளாகத்துக்கு அதுவரை காவலர்கள் வந்து அவரைக் கண்டிக்காததால் அங்கேயே சில வாரங்களாய் தங்கிவிட்டார். இரவு பத்து மணிக்கு மேல் வந்து, மின்சார அறைக்குக் கீழ் அமைந்துள்ள கடை திறப்பதற்கு முன்னர், அதிகாலை நான்கரை மணியளவில் கிளம்பிவிடுவார். 

“ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செந்தோசாவில் உள்ள பொதுக் குளியலறைகளில் குளிப்பேன். வாரம் ஒரு முறை துணிகளைச் சலவை செய்யக் கொடுப்பேன். நாளுக்கு அதிகபட்சம் இரண்டு வேளை உணவு. துப்புரவுப் பணிகள், உணவக ஊழியர் பணி ஆகியவற்றைச் செய்வதால் எனக்குத் தினக் கூலி கிடைக்கும்,” என்றார் ஆதி.   

2018ல் குடும்ப சச்சரவால் பெற்றோரின் வீட்டை விட்டுச்சென்றவர் முன்னாள் குற்றவாளியான ஆதி. 20 ஆண்டுகளாய்க் குற்றச்செயல்களுக்காகச் சிறைக்கு மூன்று முறை சென்றுவந்துள்ளார் அவர். அவரின் மத்திய சேம நிதிக் கணக்கில் 20,000 வெள்ளி மட்டுமே இருந்தது. சொந்த வீடு வாங்க இயலாத அவர், சில ஆண்டுகள் பெற்றோர் உட்பட மொத்தம் நான்கு பேர் தங்கியிருந்த மூவறை வீட்டில் வாழ்ந்து வந்தார்.  

தந்தையின் பெயரின்கீழ் இருந்த அவ்வீட்டிற்கு அவரால் திரும்ப முடியவில்லை. வீடு வாங்கும் அளவு நிதியும் கைவசமில்லை. வீட்டு வாடகைக்காக விண்ணப்பிக்கச் சென்றிருந்த சமயத்தில், தந்தையின் வீட்டில் உள்ள குடியிருப்பாளர்கள் யாரும் பதிவு செய்யப்படாதது சிக்கல்களை எழுப்பியது.  

“என் தந்தையுடன் கலந்தாலோசிக்குமாறு வீவக என்னிடம் கூறியது. வீட்டுரிமை கொண்டுள்ள அவரை, குடியிருப்பாளர்கள் பெயரைப் பதிவு செய்யச் சொல்லி அறிவுறுத்தியது கழகம். அவரிடம் இதுகுறித்து பேசும்போது, ஒரே சொல்லில் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டார்,” என்று புலம்பினார் ஆதி.  

தற்காலிகத் தங்குமிடங்களையும் சிலர் நாடுவதுண்டு. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

வாடகை வீடு கிடைக்காமல் பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர், நாள் விடுதிகளில் ஆதி தங்கத் தொடங்கினார். கொவிட்-19 காலத்தில் மிக இவ்விடுதி அறைகள் மலிவான வாடகையில் கிடைத்தன. ஆனால், சுற்றுப்பயணத்துறை சூடுபிடிக்கத் தொடங்கியவுடனேயே வாடகை ஒன்றரை மடங்கானது.  

மணவிலக்கு பெற்ற ஆதியை அவரின் மகன் தன்னோடு தங்க அழைப்பதுண்டு. ஆனால், மனைவி, ஐந்து பிள்ளைகளுடன் ஓரறை வாடகை வீட்டில் தங்கும் மகனுடன் இருப்பது சாத்தியமில்லை என்று அவர் மறுத்துவிட்டார். வேறு வழியின்றி பொது இடங்களில் தங்கத் தொடங்கினார்.   

தற்காலிகத் தங்குமிடங்கள் குறித்து ஆதி அறியாமல் இல்லை. அவருக்கு உதவிய குடும்பச் சேவை மைய அதிகாரிகள், இவற்றுக்கு விண்ணப்பிக்கப் பரிந்துரைத்தனர். ஆனால், முன்னாள் குற்றவாளிகள், முன்னாள் நண்பர்கள் ஆகியோரின் நட்பு வட்டத்துக்குள் மீண்டும் இணைந்துவிடுவோமோ என்ற கவலை அவருக்கு.   

ஆண்டிறுதியில் நடப்புக்கு வரும் ‘ஆப்பரேட்டர்-ரன்’ திட்டம் (Operator-Run), நம்பிக்கை ஊட்டினாலும் அதிலும் ஆதிக்குத் தயக்கம் உண்டு.  

“இரு முறை சிறைக்குச் சென்ற பிறகு, மூலக் காரணமாக இருந்த நட்பு வட்டத்திலிருந்து முழுதாக விலகிவிட்டேன். தற்காலிகத் தங்குமிடங்கள் இத்தகைய வட்டத்துக்கு என்னை மீண்டும் அறிமுகப்படுத்துமோ என அஞ்சுகிறேன்,” என்று அழுத்தமாகக் கூறிய இவருக்கு, வாடகை வீடே கடைசித் தீர்வு.   

மற்றுமொரு முன்னாள் குற்றவாளியும் போதைப்பொருள் புழங்கியுமான 56 வயது திரு மைக்கல் (உண்மைப் பெயரல்ல), ஒரு தேவாலயத்தில் தற்காலிகமாகத் தங்கி இருந்தார். கடந்தாண்டு நவம்பரில் விடுதலையான சமயத்திலிருந்து இந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த இவருக்கு, ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டது. 

முன்னர் அம்மாவுடன் வாடகை வீட்டுக்கு விண்ணப்பித்து ஓரறை வாடகை வீடு ஒன்றுக்குத் தகுதிபெற்றார் மைக்கல். ஈராண்டுகளுக்குப் பிறகு அம்மா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதனால், அவ்வீட்டை மைக்கல் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  

பல ஆண்டுகாலமாய்த் தனக்கு ஏற்ற சக வீட்டு இணையாளரைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட்ட இவர், தன்னோடு தேவாலயத்தில் தங்கி இருக்கும் 75 வயது நண்பர் ஒருவருடன் விண்ணப்பித்துப் பெற்ற வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.  

இவ்வாண்டு அதிகமாக நடந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அவர் சுட்டினார்.  

“நம்பிக்கையான சக வீட்டாளர்கள் கிட்டுவது சிரமம். சென்ற ஆண்டுகூட தனது சக வீட்டாளரைக் குத்திக் கொன்ற கொடூரம் ஒன்று நடந்தது,” என்று குறிப்பிட்டார் மைக்கல். இதுவும் தனது வாடகை வீட்டுத் தேடலைச் சற்று தாமதமாக்கியதாக அவர் தெரிவித்தார்.  

“நிரந்தர வீடில்லாதோர் அதிகம் உள்ளனர். இதுதான் உண்மை. ஆனால், சமூகத்தார் வீடில்லாதோரைத் தாழ்வாகவே கருதுகின்றனர். எங்களின் நிலைக்குச் சோம்பேறித்தனமும் ஊதாரித்தனமுமே காரணம் என்று சிலர் நினைப்பது எங்கள் மனதைத் தளர்த்துகிறது,” என்றார் மைக்கல். 

அதிகரித்துவரும் சமூக ஆதரவு  

குடும்பப் பிரச்சினையால் ஜூலியும் அவரது மகன் ஜார்ஜும் (உண்மைப் பெயர்களல்ல) 2020ஆம் ஆண்டில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நண்பரின் வீட்டில் தற்காலிகமாக ஜார்ஜ் தங்கியபோதும் ஜூலியின் நிலை அவ்வாறு இல்லை.  

கனமழை பெய்த அந்த இரவுவேளையில் எங்கு செல்வது, எங்கு உறங்குவது எனத் தெரியாமல் ஜூலி தவித்தார். 65 வயது ஜூலி, வீவக வீட்டு நடைபாதைகளிலும் கட்டடக் கீழ்த்தளங்களிலும் சில நாட்களுக்குத் தங்கினார். அவரது உடைமைகளில் சில துணிமணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு செய்வதறியாது, சாப்பிடாமல் தவித்தார்.  

ஒற்றைப் பெற்றோரான ஜூலிக்கு மூன்று பிள்ளைகள். அவரின் மூத்த மகளும் மகளின் கணவரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். 

“வீட்டு உரிமையாளர்களில் ஒருவராக இருந்த நான், குடியிருப்பாளர் தகுதிக்கு மாற்றப்பட்டேன். எனக்கு இதுகுறித்து யாரும் தெரியப்படுத்தவில்லை. அவள் கையில் வீட்டுரிமை இருந்தது,” என்றார் ஜூலி.  

உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் ஒரு சில மாதங்கள் மட்டுமே அவரால் தங்க முடிந்தது. கொவிட்-19 நோய்த்தொற்று சூழலால் வீவக வாடகை வீடு கிடைக்கவும் அதிக காலம் பிடித்தது.  

ஓராண்டுக்கும் மேல் நீடித்த நிச்சயமற்ற நிலைக்குப் பின்னரே இருவருக்கும் வாடகை வீடு கிட்டியது. குடும்பச் சேவை மையத்தின் உதவியை நாடிய இருவரும், தற்காலிகத் தங்குமிடங்களில் ஏறக்குறைய இரு மாதங்களைக் கழித்தனர். வீடில்லாதோருக்கு இடம் கொடுக்கும் ஒரு தேவாலயமும், பின்னர் ஆசிய பெண்கள் நல சங்கமும் (அவ்வா) அவருக்கு அடைக்கலம் தந்தன. அவ்வாவின் உதவியுடன் ஜூலிக்கும் ஜார்ஜுக்கும் ஓரறை வாடகை வீடொன்றும் கிடைத்தது.  

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ‘Partners Engaging and Empowering Rough Sleepers’ (PEERS) திட்டம் 2019ல் அறிமுகம் கண்டது. ‘சேஃப் அண்ட் சவுண்ட் ஸ்லீப்பிங் பிளேசஸ்’ (எஸ்3பி) என 22 தற்காலிகத் தங்குமிடங்களை வழங்கி வருகின்றன, இத்திட்டத்தில் இணைந்துள்ள அமைப்புகள். இவற்றில் லாபநோக்கமற்ற அமைப்புகளும் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும். இத்துடன் அமைச்சின் ஆறு இடைநிலைத் தங்குமிடங்களும் (transitional shelters) வீடில்லாதோருக்கு இடமளித்து வருகின்றன. 

2021ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தத் தங்குமிடங்களில் 93% நிரம்பி இருந்தன. இவற்றில் தஞ்சம் புகுந்தோர் ஏறத்தாழ 5 மாதங்கள் தங்கினர்.  

வீடில்லாதோர் நிரந்தர வீடுகள் பெறுவதற்கான பயணத்தில் தங்குமிடங்கள் முக்கியப் படியாகும் என்று கூறினார், அவ்வாவின் தலைமை நிர்வாகி திரு ஜே. ஆர். கார்த்திகேயன். சிங்கப்பூரர்களுக்கும், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் அடைக்கலம் அளிக்கும் வகையில் அவ்வாவின் இரு தற்காலிகத் தங்குமிடங்கள் விளங்குகின்றன.  

ஆனால், இடவசதி அளிப்பதுடன் இப்பிரச்சினை முடிவடைவதில்லை என்றார் திரு கார்த்திக். 

“வீடின்மையைப் பல்வேறு கோணங்களிலிருந்து அணுகுவது அவசியம். தங்குமிடம் மட்டுமின்றி, வீடில்லாதோர் சுய முடிவுகளை எடுப்பதற்கான நம்பிக்கையையும் உளவியல் சார்ந்த ஆதரவையும் நாம் அளிக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.  

எனவே, உளவியலாளர்கள், மனநல நிபுணர்கள், சமூக அமைப்பு அதிகாரிகள் முதலியோரை அவ்வா நாடுகிறது. திறன் மேம்பாட்டுக்கு உதவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பையும் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயமுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

ஒற்றையர் கூட்டுத் திட்டத்தின் நீட்டிப்பாக ‘ஆப்பரேட்டர்-ரன்’ திட்டம் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றுமொரு சக வீட்டாளர் இன்றி தனியாக விண்ணப்பிக்க இத்திட்டம் அனுமதிக்கிறது. நியூ ஹோப் சமூக சேவைகள், குட் நியூஸ் சமூக சேவைகள் ஆகியவை சக குடியிருப்பாளர்களை வயது, பாலினம், இனம், பழக்கவழக்கங்கள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுப்பர்.  

தற்சமயம் புக்கிட் பாத்தோக், புவாங்கோக், பிடோக் என மூன்று பகுதிகளில் மொத்தம் 400 வாடகை குடியிருப்பாளர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். 

கூடுதலாக 600 குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கும் மேலும் மூன்று பகுதிகள் இத்திட்டத்தின்கீழ் இணைய உள்ளன. பிடாடாரி, புக்கிட் பாஞ்சாங், செங்காங் இடங்களில் அமைந்துள்ள இவ்வாடகை வீடுகளுக்கான விண்ணப்பக் காலம் 2023ன் இறுதியில் ஆரம்பமாகும்.

ஆய்வு: தற்காலிகத் தங்குமிடங்கள் கடைசித் தீர்வல்ல

கொவிட்-19 சூழலில் வீடில்லாதோரின் நிலைமை அதிக மாற்றங்களைக் கண்டது. பல பொது இடங்களில் மக்கள் அனுமதி இன்றி நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.  

தற்காலிகத் தங்குமிடங்கள் கடைசித் தீர்வு அல்ல என்பதை லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் கொள்கை அமைப்புக் கழகத்தின் முன்னாள் ஆய்வாளர் சிம்ரன் வலியுறுத்தினார். தெருக்களில் உறங்குவோரின் எண்ணிக்கையைப் பதிவு செய்த நாடளாவிய அறிக்கையை வெளியிட்ட முதல் ஆய்வுக் குழுவில் சிம்ரன் ஈடுபட்டிருந்தார். 

படுக்கை அறைகள் இல்லாத சிறிய வீட்டினை இருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனும் தற்போதைய திட்டத்தில் மாற்றங்கள் தேவை என அவர் கூறினார். வீடில்லாதோருக்கும் எளிதில் பாதிப்படையக்கூடியோருக்கும் வாடகை வீட்டுரிமைத் திட்டம் முன்னுரிமை தர வகைசெய்யவேண்டும் என்பதையும் அவர் முன்வைத்தார்.  

வீடின்மைப் பிரச்சினையைக் களைவதற்குப் படிப்படியான சம்பள உயர்வு முறை கைகொடுப்பதாகவும் கூறிய அவர், பல வகையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கையூட்டுவதாய் தெரிவித்தார்.  

மேற்கத்திய நாடுகளில் சில பின்பற்றும் ‘ஹவுசிங் ஃபர்ஸ்ட்’ (Housing First) கொள்கை, வீடின்மை நிலையைக் களைவதற்குப் பயன்பட்டு வருகிறது. இக்கொள்கையின் அடிப்படையில், வீடில்லாதோருக்கு வேறு வகைகளில் ஆதரவு வழங்குவதற்கு முன்னர், அவர்களுக்கு வாழ்விடம் அளிப்பது அவசியம். அதன் பின்னரே மற்ற கூறுகளில் உதவ வகைசெய்யவேண்டும். இது சிங்கப்பூரில் ஓர் அடிப்படையாக வலுப்படவேண்டும் என்றும் சிம்ரன் கூறினார். 

வெளிப்படையான ஒரு பிரச்சினையாக இந்த வீடின்மை நிலை இல்லாதது ஒரு சிக்கலே. எனவே, வீடில்லாதோரும் மறைந்து வாழ முயற்சி செய்வர். பலரும் ஒரே இடத்தில் தங்கமாட்டார்கள். இது சமூக ஆதரவு அமைப்புகள் எதிர்நோக்கும் ஒரு முக்கியச் சிக்கல் என அவர் குறிப்பிட்டார்.  

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஆக அண்மைய வீடில்லாதோர் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையின்படி:  

தெருக்களில் தூங்குவோரின் எண்ணிக்கை 530.

ஆய்வில் பங்கேற்றோரில் 44 விழுக்காட்டினர் ஓராண்டுக்கும் மேலாக தெருக்களில் தங்கினர்.

வீவக பேட்டைகளின் அருகே 45 விழுக்காட்டினர் கண்டறியப்பட்டனர்.

குடும்பத்தார், நண்பர்கள், அல்லது சக வீட்டாளர்களுடனான சச்சரவினால் வெளியில் தள்ளப்பட்டோர் 49 விழுக்காட்டினர்.

நிதி நெருக்கடி, மணமுறிவு ஆகியவற்றை வீடு இல்லாமைக்கான காரணிகளாக அறிக்கை சுட்டியது.

வீடற்றோருக்குச் சிரமம் தரும் ‘வசதிகள்’

பொது இடங்களில் அமைக்கப்படும் நாற்காலிகளிலும் இருக்கைகளிலும் நாம் படுத்து உறங்கவோ நீண்ட நேரம் அமர்ந்திருக்கவோ இயலாது. கம்பிகள் குறுக்கே இருக்கலாம். நாற்காலியின் நீளமும் குறைவாக இருக்கலாம். சாய்ந்து உட்கார முடியாமல் போகலாம்.  

இத்தகைய பொது வசதிகள் நமக்குச் சில நிமிட ஓய்வளிப்பவை. ஆனால், வீடில்லாதோர் இவற்றைப் பெரிதும் நம்பி உள்ளனர். இதனால், அவர்கள் தங்களுக்கு வசதியாக உள்ள இடங்களைத் தேட வேண்டியுள்ளது.  

சில நிமிடங்களுக்கு மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் பொது இடங்களில் ஒருசில இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

இதுபோன்ற பொது வசதிகளை, ‘பொருந்தாத கட்டடக் கலை’ (hostile architecture) எனப் பொறியியலில் குறிப்பிடுவதுண்டு. நவீனமயமான நகரங்களில் மக்களின் நடமாட்டத்தைச் சீராக்கும் வண்ணம் பொது வசதிகள் பல அமைக்கப்படுகின்றன.  

அமர்விடங்கள், ஓய்விடங்கள், சாலையோர ஒதுக்குப்புறங்கள், கீழ்த்தளக் காலியிடங்கள் முதலியவற்றில் வீடில்லாதோர் உறங்குவதைத் தவிர்க்க அயல்நாடுகளில் இத்தகைய கட்டிடக்கலை முறை பின்பற்றப்படுகிறது.  

இச்சிக்கல் குறித்து விளக்கினார் கட்டுமான ஊழியரான காந்தன் (உண்மைப் பெயரல்ல). இடைவேளை நேரங்களில் அவர் அருகில் உள்ள வீவக பேட்டை கீழ்த்தளங்களுக்குச் செல்வதுண்டு. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நீளமான இருக்கைகள் முற்றிலும் அகற்றப்பட்டதை அவர் கவனித்தார்.   

“முன்னர் கால் நீட்டிப் படுக்கக்கூடிய நீள்அரைவட்ட இருக்கையும் அதன் நடுவே சதுரங்கக் கட்டங்கள் கொண்ட வட்ட மேசையும் இருக்கும். அதில் நாங்கள் இருவர் வரை சில நேரம் படுத்துக்கொள்ளலாம். இப்போதோ, தனித்தனியே அமரக்கூடிய இருக்கைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் நிமிர்ந்து அமர மட்டுமே முடிகிறது,” என்றார் காந்தன்.  

அரை மணி நேரம் மட்டும் சற்று இளைப்பாறத் தரையில் படுக்கும் சமயங்களிலோ எறும்புகள், தவளைகள், எலிகள் முதலியவை குறுக்கிடுவதுண்டு. 

“வீடில்லாதோர் இவ்விடத்தில் உறங்குவது கண்டிப்பாக சிரமமே,” என்று அவர் கூறினார்.  

மற்றொரு கட்டுமான ஊழியரான குமார் (உண்மைப் பெயரல்ல), வேலை முடிந்து வீராசாமி சாலையில் அமைந்துள்ள அக்கம்பக்க கீழ்த்தளங்களில் நிறுவனத்தின் வாகனம் வரும்வரை அவ்வப்போது இரவில் உறங்குவதுண்டு. உறங்கக்கூடாது என்று அறிவுறுத்தும் சுவரொட்டிகள் அங்கு உண்டு; காவலர்களும் அங்கு நடமாடுவர். அதோடு, நீட்டம் குறைவான நாற்காலிகளே இருப்பதனால் அதில் உறங்குவதும் கடினம் என்றார் குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!