நீதித்துறையில் அனைவருக்கும் தற்காப்பு

சட்டப் பிரதிநிதித்துவம் தேவைப்படும் வசதிகுறைந்த சிங்கப்பூர்க் குடிமக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம், சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட முடியாத குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்களுக்கு உதவி வருகிறது இந்த அலுவலகம். ஆகஸ்ட் 1ஆம் தேதி 2022ல் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர்கள் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இது செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த அலுவலகத்தில் செயல்பட்டுவரும் வழக்குரைஞர்களை தமிழ் முரசு நேர்காணல் கண்டது.

வழக்குகளும் உதவிக்குத் தகுதிபெறுவோரும்

குற்றவியல் வழக்கு சார்ந்த நிதியுதவிகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதோடு, நீதிமன்ற விசாரணைக்கான தகுதியையும் விண்ணப்பதாரரின் தகுதியையும் பிரதிவாதி வழக்குரைஞர் அலுவலகம் ஆராயும்.

தகுதிபெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். அத்துடன், அவர்களைப் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ஒருவருடன் அலுவலகம் இணைக்கும்.

இலவச சட்ட சேவை வழங்கும் ‘புரோபோனோ.எஸ்ஜி’ அமைப்பிற்கும் தகுதிபெறும் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதன்கீழ், பிரதிவாதியைத் தனியார் துறையைச் சேர்ந்த தொண்டூழிய வழக்குரைஞர் பிரதிநிதிக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர், தனக்காக வாதிடப்போவது அரசாங்கப் பிரதிவாதி வழக்குரைஞரா அல்லது தனியார் வழக்குரைஞரா என்பதை அவரே தெரிவு செய்ய முடியாது. ‘புரோபோனோ.எஸ்ஜி’ அமைப்புதான் அதை முடிவு செய்யவேண்டும்.

குற்றவியல் தற்காப்புக்கான நிதியுதவி பெற விரும்புவோர் 21 வயதுக்கு அதிகமானவராக இருக்கவேண்டும். 21 வயதுக்குக் குறைவானோரின் சார்பில் அவருடைய பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். ‘பிசிஎச்ஐ’ எனப்படும் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சராசரி மாத வருமானம் $1,500க்குக் குறைவாக இருக்கவேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த அலுவலகம் பிரதிநிதிக்காது. போக்குவரத்து அழைப்பாணைகள், தொற்றுநோய்ச் சட்டம், தனிநபர் பாதுகாப்புச் சட்டம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய சேவை சட்டம் சார்ந்த விதிமீறல் குற்றச்சாட்டுகளையும் இவ்வலுவலகம் பிரதிநிதிக்காது.

சூதாட்டம், குண்டர் கும்பல் நடவடிக்கைகள், பயங்கரவாதம் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவோரையும் அலுவலகம் பிரதிநிதிக்காது. வழக்கு தொடுக்கும் தனிநபர்களிடம் குற்றச்சாட்டு எதிர்நோக்குவோரும் அலுவலகத்தை அணுக முடியாது.

சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் மட்டுமே பிரதிநிதிக்கும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம், வெளிநாட்டினரின் விண்ணப்பங்களை ஏற்காது. வெளிநாட்டினர் ‘புரோபோனோ.எஸ்ஜி’யிடம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

குற்றவியல் சட்டத்துறையில் மைல்கல்

பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர்களை வழிநடத்தி, அவர்களது நிபுணத்துவத் திறன்களை மேம்படுத்த வழிகாட்டும் துணைத் தலைமை பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ஆனந்த் நலச்சந்திரன், 49. படம்: பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம்

பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம் பொதுச் சட்டத்துறையில் குறிப்பிடத்தக்க மேம்பாடு, அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்பதே அந்த அலுவலகத்தின் கடப்பாடு என்றார் அதன் துணைத் தலைமை பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ஆனந்த் நலச்சந்திரன், 49.

“வழக்குகள் அவசரமானதாக இருந்தாலும் இந்த அலுவலகத்தில் முழு நேரமாகப் பணியாற்றும் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர்கள் அவற்றைக் கையாள முன்வருவர். தவிற, மற்ற வகையான உதவிகளையும் ஆதரவையும் வழங்க அதிகாரிகள் தயாராக உள்ளனர்,” என்று திரு ஆனந்த் கூறினார்.

இவர், ராஃபிள்ஸ் கல்வி நிலையத்திலும் ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியிலும் பயின்று பின்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். 2000ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்த இவர், குற்றவியல் நிபுணத்துவத்தைப் பெற்றார். நிதித்துறை, தொழில்நுட்பக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் இவர் கையாண்டுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பணியிலிருந்த திரு ஆனந்த், பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தில் சேர்ந்து பின்னர் அதன் துணைத் தலைமைப் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞராகப் பொறுப்பேற்றார். நன்கொடை மற்றும் சமூக அமைப்புகளுக்கு நல்கிய ஆதரவுக்காக இவருக்கு 2021ல் பொதுச்சேவை நட்சத்திரப் பதக்கம் (பிபிஎம்) கொடுக்கப்பட்டது.

இந்தப் பணி தனிப்பட்ட முறையில் மிகுந்த மனநிறைவு அளிப்பதாகக் கூறும் திரு ஆனந்த், பிரதிவாதி வழக்குரைஞர்கள் பொதுச் சேவைமீது கடப்பாடு கொண்டவர்களாகவும் பலவீனமான அல்லது நிதி ஆதாரமற்ற கட்சிக்காரர்கள்மீது பரிவு உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்றார்.

பரிவுடன் கூடிய நீதி முறைமை

கட்சிக்காரர்களின் பலவீனங்களைப் புரிந்து அவர்களின் தண்டனையை குறைக்க முனைகிறார் பொதுப் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ச. வடிவழகன். படம்: பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம்

நீதிமன்ற செயல்முறைகளைப் பற்றி சுயமாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால் சாமானியர்கள் குறுகிய காலத்தில் சட்டத்துறையின் செயல்பாடுகளை அறியச் சிரமப்படலாம்.

வழக்கறிஞர்களை நியமிக்க வழியின்றி சுயமாகத் தங்களையே பிரதிநிதிக்கும் சூழ்நிலையில் இருப்பவர்களிடம் பிரதிவாதி வழக்குரைஞர் அலுவலகம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக பொதுப் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் ச.வடிவழகன் தெரிவித்தார்.

“நீதிமன்றங்கள் வழங்கக்கூடிய தண்டனைத் தெரிவுகள் ஏராளம். நன்னடத்தைச் சோதனை முதல் சமூக அடிப்படையிலான தண்டனை வரை, இத்தெரிவுகளைத் தாமாக ஆராய்வது சாமானியர்களுக்கு மிகக் கடினம் என்பதால் அவர்களுக்கு நீதிமன்றக் கட்டமைப்பு பற்றி வழிகாட்ட பிரதிவாதி வழக்குரைஞர்களால் இயலும்,” என்று திரு வடிவழகன் கூறினார்.

“தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் பணிபுரிந்த முன்னாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பலர் தற்போது இங்கு பணிபுரிகின்றனர். அத்தகையோரில் நானும் ஒருவன்,” என்றார் அவர்.

உள்ளூர்த் தொலைக்காட்சி மற்றும் நாடகத்துறைக் கலைஞராகத் திகழும் திரு வடிவழகன், கல்வியமைச்சில் பொருளியல் விரிவுரையாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பின்னர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் கான்டெக் சிங்கப்பூர்ப் பிரிவின் இந்திய அலுவலகத்தின் நிலைய இயக்குநராக இவர் செயல்பட்டார். 2009ல் பொதுச் சேவையிலிருந்து விலகிய இவர், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (எஸ்எம்யு) ‘ஜூரிஸ் டாக்டர்’ நிலையில் சட்டம் பயின்று தகுதிபெற்றார்.

2012ல் பட்டம் பெற்ற திரு வடிவழகன், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஒன்பது ஆண்டுகளாகப் பணியாற்றினார். 2021ல் ‘ஓ‘ நிலைத் தேர்வு மோசடி குறித்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் வாதிட்ட இவர், வேறு சில குறிப்பிடத்தக்க வழக்குகளிலும் முன்னிலையானார். பிறகு, ஏறக்குறைய ஈராண்டுகளாக காளிதாஸ் சட்ட நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பின் பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்தில் சேர்ந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டு சிறு பொருள்களைத் திருடி குற்றம் சாட்டப்பட்டிருந்த ‘திருவாட்டி கே’ என்ற 43 வயது மாது ஒருவருக்கு இந்த அலுவலகத்தின் மூலம் வாதிட்டதைத் திரு வடிவழகன் குறிப்பிட்டார். நைட்டெக் பட்டயத் தகுதியுடன் முன்னதாக அலுவலக நிர்வாக உதவியாளராகப் பணியாற்றிய ‘திருவாட்டி கே’, மிகுந்த மன அழுத்தத்தாலும் பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வாலும் (ஓசிடி) எந்த வேலையிலும் நீடித்திருக்க முடியவில்லை.

கைகளுக்கான ஒப்பனைப் பொருள், உடலுக்கான சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட குளியல் பொருள்கள் திருடுபோனது தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய திருவாட்டி கேவிற்காக திரு வடிவழகன் வாதிட்டார். இறுதியில், திருவாட்டி கேக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது.

“திருவாட்டி கே முதன்முறை குற்றவாளி அல்ல. எனவே, அவர் களவாடிய பொருள்கள் விலைமதிப்பில் குறைவாக இருந்தாலும் அவருக்குத் தண்டனை கூடுதலாக விதிக்கப்பட்டிருக்கலாம். திருவாட்டி கே களவாடிய பொருள்களுக்கும் அவரது ‘ஓசிடி’ மாதிப்பிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கருத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தேன்”, என்றார் திரு வடிவழகன்.

இளம் குற்றவாளி ஒருவருக்கு அலுவலகம் சார்பில் கைகொடுத்ததையும் திரு வடிவழகன் நினைவுகூர்ந்தார். கலவரத்தில் அந்த இளையர் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை சட்டவிரோத ஒன்றுகூடலில் பங்கேற்ற குற்றச்சாட்டாகக் குறைத்து, தண்டனையின் கடுமையை ஓரளவு தணிக்க முடிந்ததாக அவர் சொன்னார்.

“இவ்வாறு செய்வதன்மூலம், இளையருக்குக் கண்காணிப்புத் தண்டனை கிட்டியது. இந்த இளையரைத் தனிமைப்படுத்தாமல் சமுதாயத்திற்குள்ளே இருக்க அனுமதி தருகிறது,” என்றார்.

மறுவாய்ப்புப் பெற வழி செய்வதில் மகிழ்ச்சி

பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞராக இருப்பதன் மூலம் பல்வேறு வாழ்க்கைத் தரத்தில் உள்ளவர்களுடன் உறவாட முடிந்ததாகக் கூறுகிறார் முகமது சர்ஹான் முகமது இக்பார், 27.  படம்: பிரதிவாதி அரசாங்க வழக்குரைஞர் அலுவலகம்

இந்த அலுவலகத்தில் விண்ணப்பம் செய்வோர், குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நிதியுதவிக்குத் தகுதிபெறுவோருக்கு நிதிச்சுமை ஏதும் இல்லை. ஆனால், தனியார் வழக்கறிஞரை நியமிப்பதால் வழக்கறிஞர் கட்டணம், வழக்கின் சிக்கலைப் பொறுத்து வேறுபடும் என்று குறிப்பிட்டார் பிரதிவாதி வழக்குரைஞர் முகமது சர்ஹான் முகமது இக்பார், 27.

“இந்த அனுபவம் மூலம் பல்வேறு வாழ்க்கை நிலைகளைச் சேர்ந்தோரைக் காண்பதில் நான் கற்றுக்கொள்கிறேன். என்னால் பிறருக்கு உதவ முடிவது மனநிறைவு தருகிறது. குரலற்றவர்களுக்குப் பிரதிநிதிக்கும் வாய்ப்பைப் பெற்றதை நினைத்து மகிழ்கிறேன்,” என்று திரு சர்ஹான் கூறினார்.

2002ல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலிருந்து சட்டத்துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற திரு சர்ஹானுக்கு மாணவராக இருந்தபோதே இலவசமாக வழக்குகளில் முன்னிலையாக ஆர்வம் இருந்தது. பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்ட, நீதி சங்கத்தின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.

பிரதிவாதி வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியிலும் உதவி வழங்கி, கட்சிக்காரர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையான உதவி வளங்களுடன் இணைக்க முடியும் என்கிறார் திரு சர்ஹான்.

கதவு பூட்டப்படாத கார் ஒன்றிலிருந்து ரொக்க அட்டையைத் திருடிய குற்றத்திற்காகப் பிடிபட்ட திரு எம்மைப் பிரதிநிதித்ததை திரு சர்ஹான் நினைவுகூர்ந்தார்.

வயதான தாயாருடன் வாழும் 50 வயது மதிக்கத்தக்க திரு எம், மணவிலக்கு ஏற்பட்ட துயரத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். மதுபானம் வாங்கப் போதிய பணம் இல்லாததால் அவர் திருடத் தொடங்கினார். மன அழுத்தத்திற்குள்ளாகி, அறிவு பேதலித்துப் போன நிலையில் திரு எம், மனநலக் கழகத்தில் சேர்க்கப்பட்டார். அன்றாடம் குடித்துவிட்டு வீட்டில் கூச்சல் போட்டு திரு எம், தம் தாயாரைச் சிரமப்படுத்தி வந்தார்.

திருட்டுக் குற்றத்திற்காக நீதிமன்றம் திரு எம்மிற்கு நான்கு மாதம் ஒரு வாரச் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை விதிக்கப்பட்டபோது மனமுடைந்த திரு எம்மின் தாயார், தம் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணினார். பிரதிவாதி வழக்குரைஞர் அலுவலகம், அந்த மாதைப் பாதுகாப்பு நிபுணத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.

திருவாட்டி எஸ் என்ற 27 வயது பெண்ணைத் தாம் பிரதிநிதித்து, கடும் விளைவுகளிலிருந்து காப்பாற்றியதையும் திரு சர்ஹான் நினைவுகூர்ந்தார். வேலையிடத்திலிருந்து பணம் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த திருவாட்டி எஸ்-யை, தண்டனையின்றி வழக்கிலிருந்து விடுவித்ததாகத் திரு சர்ஹான் குறிப்பிட்டார்.

தொடக்கநிலை இறுதித் தேர்வுச் சான்றிதழை மட்டும் கொண்டுள்ள திருவாட்டி எஸ், திருமணமானவர். பிள்ளைகள் இல்லாத அவர், தம் தாயாருக்கும் பள்ளி செல்லும் தங்கைக்கும் நிதியாதரவு வழங்குகிறார்.

ஆனால், தம் முதலாளியுடன் ஒத்துப்போக முடியாத திருவாட்டி எஸ், சம்பளம் குறைக்கப்பட்டதை அடுத்து வேலையிலிருந்து விலகினார். அதன்பின், திருவாட்டி எஸ் வேலையிடத்திலிருந்து 6,750 வெள்ளி பணம் திருடியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அதற்கு முன்னதாக திருவாட்டி எஸ் மீது குற்றம் சாட்டப்படவில்லை. இறுதியில் பணத்தை முழுமையாகத் திருப்பித் தரும்படி நீதிமன்றம் ஆணையிட்டு, குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. பிரதிவாதி வழக்குரைஞர் அலுவலகத்தின் ஆதரவின்றி, தானே பிரதிநிதித்து குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததால் திருவாட்டி எஸ், 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையையும் எதிர்நோக்கி இருக்கலாம் என்றார் திரு சர்ஹான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!