தொழிலில் ஆண், பெண் பாகுபாட்டை முறியடிப்பவர்கள்

ஆண் பிள்ளை ‘பிங்க்’ சட்டை அணியக்கூடாது, பெண்பிள்ளை ராணுவ வீரன் பொம்மையுடன் விளையாடக்கூடாது என்றெல்லாம் கூறிய காலம் மலையேறிவிட்டது.

ஆர்வம் அடிப்படையில் மனிதனின் வளர்ச்சி நிலை அளவிடப்படும் இக்காலத்தில், ஒருவர் வேலை தேடும்போதுகூட தனது ஆர்வம் அடிப்படையில் துறையைத் தேர்வுசெய்கிறார். ஆண் ஆதிக்கம் உள்ள துறையை ஒரு பெண்ணோ, பெண் ஆதிக்கம் உள்ள துறையை ஓர் ஆணோ தேர்ந்தெடுப்பதும் வழக்கமாகிவிட்டது. அத்துடன் அத்துறையில் சாதிக்கவும் செய்கின்றனர். இவ்வாறு தங்களின் தொழிலை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு ஆண், பெண் பாகுபாட்டை முறியடித்துள்ள நால்வரைச் சந்தித்தது தமிழ் முரசு.

ஆண்களுக்கு முடி திருத்தும் கனிமொழி

ஆண்களுக்கு முடி திருத்துபவராக இருப்பார் என்று 38 வயது கனிமொழி, கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. இல்லப் பணிப்பெண்ணாக இருந்த இவர், அதில் திருப்தி காணாமல் தனது பரம்பரைத் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தார். லிட்டில் இந்தியாவில் இருக்கும் ‘ஜேஎன்ஜே யுனிசெக்ஸ் பியூட்டி சலூன்’ கடையில் அனுதினமும் ஆண்களின் முடியைத் திருத்துபவராக இருக்கிறார்.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து வந்த கனிமொழி, ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பூர்வீக ஊரில் தனது தந்தை ஆண்களுக்கு வழங்கும் முடி திருத்தும் சேவையைப் பார்த்து வளர்ந்த கனிமொழிக்கு, இந்தத் தொழில் சிறுவயதிலேயே புலப்பட்டது.

இந்தத் தொழிலானது, உலகமெங்கும் பொதுவாக ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையாக காலம் காலமாக இருந்து வருகிறது.

கனிமொழியின் கணவர் இறப்பதற்கு முன்னர் இந்தத் தொழிலைத்தான் பார்த்து வந்தார். கணவரும் தந்தையும் ஒரே தொழிலில் இருந்த காரணத்தால் கனிமொழி அவ்வப்போது அவர்களுடன் கூடவே சென்று அவர்கள் பணியில் ஈடுபடுவதைப் பார்த்து வந்தார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல எண்ணிய கனிமொழிக்கு, மற்றவர்களின் ஏளனப் பேச்சுதான் மிஞ்சியது.

“ஒரு பெண்ணாக நீ எப்படி இந்தத் தொழிலைச் செய்ய முடியும்?” என்று பலரும் கூறியதுடன் கனிமொழி எடுத்த முடிவு சரியானதல்ல என்று கூற, வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்க வேண்டுமென்ற உறுதியான முடிவை கனிமொழி எடுத்தார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் வந்தபோது அவர் இல்லப் பணிப்பெண்ணாகத்தான் இருக்க முடிந்தது. உறவினர் ஒருவரின் உதவியோடு முடி திருத்தும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். தனக்குப் பிடித்த வேலை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஒரு பெண்ணாக ஆண்களின் முடி திருத்த அவருக்குச் சவால்கள் ஏற்படவே செய்தன.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையற்ற பார்வையைப் பொருட்படுத்தாது ஆண் போல ஆடை அணிந்து தோற்றமளிக்கும் கனிமொழி, எதுவும் பேசாமல் தனது ஆற்றலை அவர் வாடிக்கையாளருக்கு முடி திருத்தும் செயல்பாட்டில் காட்டுகிறார்.

இக்காலத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கனிமொழி திறனை மேம்படுத்திகொள்ள வேண்டும் என்பதால் அவர் பெரும்பாலும் யூடியூப் காணொளிகள், இணையம் ஆகியவற்றைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்.

உறவினர் கடையில் பணிபுரியும் கனிமொழி, சிங்கப்பூரிலுள்ள அந்த உறவினரின் ஆறு கடைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

தற்போது இவருக்குக் கீழ் 12 ஆண்கள் கடையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

தனது மகனுக்கும் மகளுக்கும் அரணாக விளங்கும் கனிமொழி, முடி திருத்துவதுடன் ஆண்களுக்கான முகப் பராமரிப்பு தொடர்பான மற்ற சேவைகளையும் வழங்குகிறார்.

தொழில் தரும் மனநிறைவும் வாடிக்கையாளர்களைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்வும் கனிமொழியை இந்தத் துறையில் தொடர்ந்து சாதிக்க ஊன்றுகோலாக இருக்கிறது. வருங்காலத்தில் தமக்கென ஒரு சொந்த கடையைத் திறக்க வேண்டும் என்பது இவரது லட்சியம்.

கனிமொழியுடன் பணிபுரியும் ஊழியர் பாண்டியன் ஆறுமுகம், 25, ஒன்றரை ஆண்டாக முடி திருத்துபவராக இருக்கிறார்.

“அக்கா ஒரு பெண்ணாக ஆண்களுக்கு நிகராக இந்தத் தொழிலில் ஈடுபடுவது எங்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கிறது,” என்றார் அவர்.

எண்ணெய் எரிவாயுத் துறையில் ஜெயந்தி

விமானச் சிப்பந்தியாகத் தனது கனவை நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது ஜெயந்தி மணியன் திருமணமாகி கருவுற்ற காரணத்தினால் வானில் உலா வரும் வாய்ப்புகளைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகள் இத்துறையில் இருந்து சொத்துத் துறைக்கு மாறிய இவருக்கு, பின்னர் எண்ணெய் எரிவாயு நிறுவனத்தில் பொறுப்பேற்க அழைப்பு வந்தது.

ஜெயந்தியின் வீட்டில் முன்பு வாடகைக்குத் தங்கியிருந்தவர் தொடங்கிய தொழிலுக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த வணிக பங்காளி ஒருவர் தேவைப்பட்டார். இந்நிலையில், ‘சேஸ் ரிசோஸ் மேனேஜ்மென்ட்’ எனும் அந்தத் தனியார் நிறுவனம் பெட்ரோலிய ரசாயனம், கடலோர, கடல்துறை, கடல் பட்டறை போன்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு உபகரணங்களை விநியோகித்து வருகிறது.

பொறியியலிலும் கடல் துறையிலும் எவ்விதப் பின்னணியும் இல்லாத ஜெயந்திக்கு, அந்த வாய்ப்பு கிட்டியபோது ‘வேண்டாம்’ என்று தட்டிக்கழிக்கவில்லை. இதையும் செய்து பார்த்துவிடலாம் என்று களத்தில் இறங்கினார்.

தனது தாயாரும் வணிகத்தில் ஈடுபட்டவர் என்ற ஜெயந்தி, சிறு வயதிலேயே பள்ளி முடிந்து சிறிய பொருள்களை விற்று வந்த அனுபவம் தனகுகி இருந்ததால் பிற்காலத்தில் எப்படியும் வணிகத்தில் தான் இறங்கும் நாள் வரும் என்பதை எதிர்பார்த்திருந்தார்.

2006ல் அவர் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்தபோது பல எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஏற்கெனவே சாதனை படைத்த வண்ணம் இருந்தன. அது ஜெயந்தியை அச்சுறுத்திய போதிலும் அவர் எப்படியாவது தொழில் நுணுக்கங்களைக் கரைத்துக் குடித்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

முதல் அனுபவமாக ஜெயந்தி வெடிப்புத் தன்மையற்ற செருகி (non explosive plug) ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது. அதில் அவருக்கு விருப்பம் இல்லாதபோதும் இவ்வளவு தூரம் வந்த பின் வேலையை முழுமையாகக் கற்றுக்கொள்வதே முறை என்று எண்ணினார். பெரிய விநியோகிப்பாளர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டார் ஜெயந்தி.

ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 250 நாட்களை அவர் வெளிநாடுகளிலேயே கழிக்க வேண்டியிருந்தது. 2000 ஆண்டுகளில் எண்ணெய் எரிவாயுத் துறையில் பெண்களைக் காண்பது மிக அரிது என்ற நிலையில், 300 ஆண் ஊழியர்களில் ஜெயந்தி மட்டும் தனித்துத் தெரிந்தார். இதனால் அவர் பல பாகுபாடுகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது.

கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்தபோது ஒரு முறை 30 கடல்துறை கண்காணிப்பாளர்கள் முன் நின்று தகவல்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தை பகிர்ந்தார். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் பேதலித்துப் போன ஜெயந்தி புன்னகை பூத்த முகத்துடன் “உங்கள் கேள்விகளுக்கு நான் மின்னஞ்சல் மூலம் பதில் அளிப்பேன்,” என்று கூறி விடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

தண்ணீர் என்றாலே பீதி அடையும் ஜெயந்தி, வேலை காரணமாக 10 மாடி உயரம் கொண்ட கப்பலின் மேல் கயிற்றின் உதவியோடு ஏறி ஊழியர்கள் குழாய்களைப் பொருத்துவதை மேற்பார்வையிட வேண்டும்.

எண்ணெய் எரிவாயு சார்ந்த தகவல்களைச் செய்முறைப் பயிற்சி மூலமும் வெளிநாடுகளில் இடம்பெற்ற பயிற்சி அமர்வுகள் மூலமும் ஜெயந்தி எளிதில் அறிந்துகொண்டார்.

ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகத்தில் தமக்கென்ன வேலை என்று நினைத்தபோதிலும், “17 ஆண்டுகள் இத்துறையில் இருந்துவிட்டேன். இனிமேல் வேண்டாம் என்று செல்வது கோழைத்தனம்,” என்றார் ஜெயந்தி.

நிறுவனம் சிங்கப்பூரைத் தவிர அமெரிக்கா, துபாய், மும்பை ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருவதால் ஜெயந்தி அவற்றின் பொறுப்புகளையும் கையாள்கிறார்.

இத்துறையில் தாக்குப்பிடிக்க விமர்சனங்களையும் அவமானங்களையும் பொருட்படுத்தாதவராக ஒருவர் இருக்க வேண்டும் எனும் 52 வயது ஜெயந்தி, ஓர் இளநங்கைக்குத் தாயாக இருக்கிறார். மகள் கூடிய விரைவில் வழக்கறிஞராகப் பணிபுரிய உள்ளார் என்ற ஜெயந்தி, இந்த நிறுவனத்தைத் தனது மகள் முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

மணப்பெண் ஒப்பனை செய்யும் புலித்தேவர்

ஒப்பனைக் கலைக்குக் கவர்ந்திழுக்கப்பட்ட 33 வயதான புலித்தேவர் அகம்படையர், கல்வித் துறையில் முழுநேரமாக ஈடுபட்டு வந்தாலும் நேரம் கிடைக்கும்போது மணப்பெண்களை அவர்களின் திருமண நாளன்று அழகுபடுத்துவதிலும் ஈடுபடக் காணலாம். ஒப்பனை இடுவதற்கான தூரிகையைக் கையில் ஏந்தும்போது அதில் தான் திருப்தி காண்பதாகக் கூறினார் இவர்.

இத்துறையில் 15 ஆண்டுகளாக உள்ள புலித்தேவர், தனது பள்ளிப் பருவத்தில் இந்திய நடனக் குழுவில் உறுப்பினராக இருந்தவர். நடன நிகழ்ச்சிக்கு முன்னர் சக நண்பர்களுக்கு ஒப்பனை செய்ய உதவி வந்தபோது அதில் தனக்கு ஆர்வம் உள்ளதை அவர் உணரத் தொடங்கினார்.

ஒப்பனைத் துறையில் காலூன்ற வேண்டும் என்பதற்காக அதில் நிபுணத்துவம் பெறும் முயற்சிகளில் மும்முரம் காட்டினார் அவர். அவ்வாறு சிங்கப்பூரில் முன்பு இயங்கி வந்த ‘கோஸ்மோபுருஃப் அகாடமி’ எனும் ஒப்பனைப் பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து தகுதிச் சான்றிதழ் பெற்றார்.

இந்தியாவில் தன்னுடைய அக்காவின் திருமணத்திற்காக முதன்முதலில் ஒப்பனை செய்த அனுபவம், மணப்பெண் ஒப்பனையில் அவர் கூடுதலாக ஈடுபட வைத்தது. ஒப்பனைத் துறையில் மாறிவரும் போக்குக்கு இடையே ஒவ்வொரு முறையும் பயிற்சி மேற்கொள்வது சாத்தியப்படாது என்பதால் இணையமும் யூடியூப் காணொளிகளும் புலித்தேவருக்குக் கைகொடுத்து வருகின்றன.

தற்போது பெண்கள் ஒப்பனையே செய்துகொள்ளாதது போல் இயற்கை எழிலை அதிகம் விரும்பும் போக்கு எழுந்துள்ளது என்றார் அவர்.

சிங்கப்பூரில் ஒப்பனைக் கலைஞர்கள் பலர் இருந்தாலும் ஒப்பனைத் துறையில் ஆண்கள் இருப்பது குறைவே. அவர்களில் ஒருவரான புலித்தேவர் இத்துறையில் நாட்டம் இருந்தாலும் அவர் ஓர் ஆண் என்பதால் வாடிக்கையாளர்கள் அவர் மேல் நம்பிக்கை வைப்பதில்லை என வருத்தத்துடன் கூறினார்.

பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கலைஞரின் திறன்களை மதிப்பிடக்கூடாது என்றார் இவர். இளம் பெண்கள் பலர் சேலை கட்ட தெரியாமல் தவிக்கும் இக்காலகட்டத்தில் புலித்தேவர் மணப்பெண் அனுமதி தந்தால் அவருக்குச் சேலை கட்டும் சேவையையும் வழங்குகிறார்.

ஒப்பனைத் துறையில் ஆர்வம் குறையாது உள்ள புலித்தேவர், வளர்ந்துவரும் ஒப்பனைக் கலைஞர்கள் முதலில் சிறிய அளவில் தொடங்கி, மற்ற ஒப்பனைக் கலைஞர்களோடு ஒத்துழைத்து ஈடுபட்டால் அத்துறையில் சாதிப்பது எளிது என்கிறார். ஒப்பனைக் கலைஞர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அவர்களின் ஆற்றலைப் புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தார்.

வாழ்க்கை ஆலோசனை கூறும் அர்வின்

ஒரு நாளில் கிட்டத்தட்ட 25 முதல் 50 வரையிலான வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் அர்வின், அவர்களுடன் ஐந்திலிருந்து 20 நிமிடம் வரை செலவழிக்கிறார். வாடிக்கையாளர்கள் அவர்களின் முழு பெயரையும் பிறந்த தேதியையும் கூறி, தங்கள் முன்னால் வைக்கப்படும் 44 ‘ஆரக்கிள்’ (Oracle Cards) அட்டைகளில் சில அட்டைகளைத் தேர்ந்தெடுத்த பிறகு அவற்றை மையமாக வைத்து அர்வின் அவர்களுக்கு வாழ்க்கை ஆலோசனை வழங்குகிறார்.

ஹஜி சாலையில் வரிசையாக இருக்கும் கடைகள் ஒன்றின் வெளிப்புறத்தில் 25 வயது அர்வின் வால்டர் விவேகானந்தா தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவையை வழங்கி வருவதைக் காணலாம்.

கடந்த இரண்டு மாதங்களாக இச்சேவையை வியாபார ரீதியாக வழங்கும் அர்வின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வினோதமான நடவடிக்கையில் தன் திறனை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

ஆரக்கிள் அட்டைகளைப் படிப்பதற்கும் ‘டாரோட்’ (Tarot) அட்டைகளைப் படிப்பதற்குமான வித்தியாசத்தை விளக்கிய அர்வின், ‘டாரோட்’ அட்டைகளைப் படிக்கும் அமர்வில் ஒருவர் தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஆழமாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.

ஆரக்கிள் அட்டைகளைக் கொண்ட அமர்வில் ஒருவர் பொதுவான பாணியில் மட்டுமே வாழ்க்கையில் நிலவுவதைத் தெரிந்துகொள்ள முடியும் என விளக்கினார். 18 வயதில் அர்வின் முதன்முதலில் ‘டாரோட்’ அட்டைகளைப் படிக்கக் கற்றுக்கொண்டார்.

ஆரக்கிள் அட்டைகளின் பக்கம் அவரது ஆர்வம் திரும்புவதற்கு, அர்வினின் சகோதரி காரணமாக இருந்தார். அவரது வழிகாட்டலில் அந்தத் திறனைக் கற்றுத்தேர்ந்தார். ஆரக்கிள் அட்டைகளைப் படிக்கும் அமர்வில் பங்கேற்கும் ஒருவர் தன் வாழ்க்கை தொடர்பில் மனத்தெளிவின்றி இருந்தால் அவர்களுக்குச் சிறிதளவிலாவது தன் அமர்வு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையாகக் கூறினார் அர்வின்.

வாரத்தில் ஐந்து நாள்கள் இந்தச் சேவையை வழங்கி வரும் அர்வின், சில நேரங்களில் களைத்தும் போவதுண்டு. ஒருவருடன் ஆழமான உரையாடலில் ஈடுபட்டு அவரின் துக்கக் கதையைக் கேட்கும் அர்வின், வீட்டிற்குச் சென்று தியானம் செய்து அதன் பிறகு அமைதி பெற இயற்கை இடங்களை நாடுவதுண்டு என்றார்.

தான் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை தொடர்பில் அர்வின் பல்வேறு பாகுபாடுகளுக்கு ஆளாகியுள்ளார். ஓர் ஆணாக இந்தச் சேவையை வழங்குவதும் இதை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுப்பதும் மிக அரிது என்பதால் சிலர் இவரின் மேல் நம்பிக்கையின்றி அமர்வில் பங்கேற்றுள்ளனர்.

ஒரு பெண்ணால் மட்டுமே உணர்வுபூர்வமாக ஒருவரிடம் உரையாடி அவர்களின் துன்பங்களை அறிந்திட முடியும் எனும் பொதுவான கருத்தை மறுத்த அர்வின், “இதுவரை நான் சந்தித்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் என்னிடம் வந்து 15 நிமிடங்களாவது இந்த அமர்வில் உட்கார்ந்து நான் கூறும் ஆலோசனையைக் கேட்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையும் உற்சாகத்தைப் பெறுவர்,” என்று குறிப்பிட்டார்.

தற்போது பகுதிநேரமாக ஆரக்கிள் வாசகராக இருக்கும் அர்வின், இதற்கு முன்னர் உயிரியல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அறிவியல் துறையில் சாதிக்கும் முனைப்பு அவரிடம் இருந்தாலும் ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று ஆரக்கிள் வாசகராக வலம் வரும் லட்சியத்தில் உள்ளார் அர்வின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!