சிங்கப்பூரை முன்னேற்றும் சேவையாளர்கள்

சவால்மிக்க எதிர்காலத்தை சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்துசெல்வதன் தொடக்கமாக அரசாங்கம் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் வெளியிட்ட ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் அறிக்கை, சிங்கப்பூரின் கொள்கை வகுப்பு அடுத்த பத்தாண்டுகளுக்கு எப்படி போகக்கூடும் என்பதைக் காட்டும் முக்கிய ஆவணமாக உள்ளது.

கல்வி, வேலை, மூப்படைதல், வருமான ஏற்றத்தாழ்வு, பருவநிலை மாற்றம், ஒற்றுமை, குடும்பங்களை ஆதரித்தல் என மொத்தம் ஏழு இடங்களில் புதிய கொள்கைக் வகுப்புகளை மக்கள் எதிர்பார்க்கலாம்.

ஏறத்தாழ 16 மாதங்களாக 200,000க்கும் அதிகமான சிங்கப்பூரர்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் வனையப்பட்டுள்ளது. இந்நாட்டின் கொள்கை வகுப்பில் மட்டுமின்றி அதன் செயலாக்கத்திற்கும் மக்களின் பங்களிப்பு தேவை என்று சமூகத்தை ஒருங்கிணைக்கப் பாடுபடுபவர்கள் ஐவரிடம் தமிழ் முரசு கருத்தறிந்து வந்தது.

உடற்குறை உள்ளோரை அரவணைத்தல்

 72 வயது பழனிசாமி ஆவடை.  படம் : பழனிசாமி ஆவடை 

ஒரு சிறுவனாகப் பொது இடங்களில் தட்டுத் தடுமாறித் தான் நடந்து வந்தபோது, அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கும் நோய் தொற்றிவிடுமோ என அஞ்சி விலகியதை நினைவுகூர்ந்தார் 72 வயது பழனிசாமி ஆவடை.

வயதான தமிழர்கள் சிலர் ‘நொண்டி’ என்று ஏளனப்படுத்தியது அவரது மனதில் வடுவாகப் பதிந்துள்ளது.

இப்படிப் பண்பற்ற முறையில் பேசுவோரை இளம் வயதில் பதிலுக்குத் திட்டியதாகக் கூறும் திரு பழனிசாமி, அப்போது இருந்த சமூகம் விழிப்புணர்வு இல்லாதது என்றார்.

1950களில் சிங்கப்பூருக்கு ‘போலியோ’ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய்க்கான தடுப்பூசி இல்லை. திரு பழனிசாமி ஏழு வயதாக இருந்தபோது இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டு சாதாரணமாக நடக்கும் ஆற்றலை இழந்தார். தந்தையை மிகச் சிறு வயதில் இழந்த திரு பழனிசாமி, தாயாரின் பராமரிப்பில் அண்ணன், தம்பி இருவருடன் வளர்ந்தார்.

சக்கர நாற்காலிக்கான போதிய வசதி இன்றி அப்போது அவர் ஊன்றுக்கவைகளை (leg calipers) அணிந்து நடமாடுவார். நடப்பதற்குக் கால்களால் இயலாதபோது அடிக்கடி இடறி விழுந்ததும் உண்டு.

இருப்பினும், இவர் மனம் துவண்டுபோக மறுத்தது. தன்னம்பிக்கை உணர்ச்சி ஊற்றெடுக்க, வெளியே இயன்றவரை உலாவவேண்டும் என்றும் தம்மை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் உறுதியுடன் இருந்தார்.

இப்போது உடல் மற்றும் அறிவுக்குறைபாடு உள்ள பலருக்கு வழிகாட்டும் திரு பழனிசாமி, 34 ஆண்டுகளாக கிட்டத்தட்ட மூன்று சமூகநலன் அமைப்புகளில் பணியாற்றியுள்ளார். மன இறுக்கம் கொண்டவர்களுக்கு எளிய வேலைகளைக் கற்றுக்கொடுத்து அவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைப்பதில் கைகொடுக்கிறார்.

தஞ்சோங் காத்தோங் தொழிற்கல்விப் பள்ளியில் பயின்று ‘ஓ’ நிலை முடிவுகளைப் பெற்றபின், மின்சாரத் தொழில்நுட்பராக வேலை செய்துகொண்டே நீச்சல், கூடைப்பந்து, மேசை டென்னில் போன்ற விளையாட்டுகளைப் பழகத் தொடங்கினார். அனைத்துலக உடற்கட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளைக் குவித்தார்.

திருமணமாகி இரண்டு மகள்களுக்குத் தந்தையானார். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு பெற்றதன்மூலம் சமூகத்துடன் சுமுகமாக ஒருங்கிணைய முடிவதாக அவர் கூறினார்.

1980களில் மேற்கத்திய நாடுகளிலுள்ள பொதுப்பேருந்துகளில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோருக்குச் சரிவுப்பாதைகள் இருந்ததைக் கண்டு இந்நாட்டுப் பேருந்துகளிலும் இவற்றை அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் கடிதம் எழுதிக் கோரினார்.

அரசாங்கத் தலைவர்கள் தங்களைப் போன்றோரின் அனுபவங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திரு பழனிசாமி. தாம் வசிக்கும் தாமான் ஜூரோங் பகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அதிபருமான தர்மன் சண்முகரத்தினம், வீட்டுக்குள்ளே வந்து தாம் பகிர்ந்த அனுபவங்களைச் செவிமடுத்தி செயல்பட்டதாகக் கூறினார்.

“என் வீட்டு வாசலில் சரிவுப் பாதையையும் கழிவறையில் கைப்பிடிகளையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை திரு தர்மன் விரைவில் செய்து தந்தார்,” என்று திரு பழனிசாமி கூறினார்.

பக்கபலமாக இருந்து தன்னை ஊக்குவித்து தைரியமூட்டிய வாழ்க்கைத் துணைவியை என்றுமே மிக உயர்வாக மதிப்பதாகக் கூறினார் திரு பழனிசாமி. முழுமையான வாழ்க்கை வாழ்ந்து பிறரையும் அத்தகைய வாழ்க்கையை வாழவைப்பதற்கு உடற்குறை தடையல்ல என்று அவர் கூறினார்.

“சமூகத்தில் விழிப்புணர்வும் வசதியும் மேம்பட, என்னைப் போன்றோர் நிச்சயமாக சிறக்கலாம்,” என்றார்.

குடும்பங்களை வலுப்படுத்துதல்

தம் குடும்பத்தாருடன் அரசாங்க ஊழியர் கணேசன் மணியம், 54. படம்: கி.ஜனார்த்தனன்

அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது எளிதான பணி இல்லை என்றாலும் அது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக முன்னாள் சிறைக் கைதிகளுக்குத் தொண்டாற்றும் அரசாங் ஊழியர் கணேசன் மணியம், 54, தெரிவித்தார்.

“மன உளச்சல் குறைவதை உணர்கிறேன். மன அழுத்தத்தையும் எதிர்கொள்ள சமூகச் சேவை உதவுகிறது. சிந்தையைத் தூண்டி வாழ்க்கைக்கு இச்சேவை பொருள் தருகிறது,” என்று திரு கணேசன் உருக்கத்துடன் கூறினார்.

கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொண்டூழியத்தில் இறங்கியுள்ள இவர், தொடக்கத்தில் தம் பிள்ளைகள் பயின்ற தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் ஆதரவுக் குழுவின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்று சேவையாற்றினார்.

பின்னர், ‘செண்டர் ஃபார் ஃபார்தரிங் - டேட்ஸ் ஃபார் லைஃப்’ (Centre For Fathering-Dads For Life) நிலையத் தொண்டூழியராகப் பணியாற்றினார்.

“அந்த அமைப்பில் இருந்தபோதுதான் சிறைவாசம் புரியும் தந்தைகளுக்குப் பயிலரங்கு நடத்தும் வாய்ப்பு கிட்டியது,” என்றார்.

இதனைத் தொடர்ந்து திரு கணேசன் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ என்ற போதைப் புழங்கிகளுக்கான புனர்வாழ்வு நிலைத்திலும் சேவையாற்றினார். அத்துடன் ‘எஸ்ஜிஃபேமிலிஸ்’ (SG Families) அமைப்பின் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி, தலைமுறைகளை முழுமையான முறையில் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டூழியம் மூலம் புதிய நண்பர்களையும் திறன்களையும் பெற்று புத்துணர்வுடன் திகழ முடிவதாக திரு கணேசன் கூறினார். தொண்டூழியம் செய்வது பிறருக்கு நன்மையை ஏற்படுத்தினாலும் தாம் அதன் மூலம் பயனடைந்தது அதிகம் என்று திரு கணேசன் கூறினார்.

“சமூக அமைப்புகளையும் அவற்றைச் சார்ந்திருப்போரையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறேன். நடவடிக்கைகளும் வளங்களும் எங்கு உள்ளன என்பதை நான் தெரிந்துகொள்ள நேரும்போது என் பிள்ளைகள் பயன் அடைகின்றனர்,” என்றார் திரு கணேசன்.

அனைவருக்கும் எதிர்காலம் பொதுவானது என்பதால் மற்றவர்களை மேம்படுத்துவதன் மூலம் சமுதாயம் மேம்படுகிறது. சமுதாயம் மேம்படும்போது தனிமனிதனும் மேம்படுகிறான் என்பதே ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் சாரமாக திரு கணேசன் கருதுகிறார்.

சுற்றுப்புறத்தைக் கட்டிக்காத்தல்

அரசாங்க ஊழியர் வி.நெஷ்வின்திரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குப்பைகளை அப்புறப்படுத்தும்போது உடைந்த கண்ணாடி போத்தல் துண்டு ஒன்று அரசாங்க ஊழியர் வி. நெஷ்வின்திரன், 39, விரல்களைக் கீறியது. பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் சிலர் விட்டுச்செல்லும் குப்பைப் பொருள்கள் இவ்வாறு பிறருக்கு ஆபத்து விளைவிப்பதை திரு நெஷ்வின் சுட்டினார்.

போத்தல்களுடன் ‘ஸ்டைரஃபோம்’ பெட்டிகள் ஆகியவற்றுடன் துருபிடித்த சைக்கிள் ஒன்றையும் அவர் தம் நண்பர்களும் கண்டுபிடித்தார்.

2020ல் சுற்றுப்புறத் தூய்மையைக் காக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டார். நடமாட்டக் கட்டுப்பாடுகளால் மனிதர்களின் வருகை குறைந்து இயற்கை இடங்களின் மாசுத்தன்மை குறைந்திருந்ததைச் சுட்டினார் திரு நெஷ்வின்.

“இந்தத் தூய்மை ஓரளவுக்காவது தொடரவேண்டும் என விரும்பினேன்,” என்றார்.

இந்த நடவடிக்கையை அவர் தம் காதலி, தெரிந்தவர்கள் எனக் கிட்டத்தட்ட எழுவர் கொண்ட குழுவாக மேற்கொண்டதாகச் சொன்னார்.

கோனித்தீவுக் கடற்கரை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, செம்பவாங் கடற்கரை, புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் நேரம் கிடைக்கும்போது நண்பர்களுக்கிடையே குப்பைகளை அப்புறப்படுத்தும் சுற்றுலாக்களுக்குத் தாம் ஏற்பாடு செய்வதாக திரு நெஷ்வின் குறிப்பிட்டார்.

“தொடக்கத்தில் என் நண்பர்கள் தயங்கினர். நானும் தயங்கினேன். சிங்கப்பூர் வெப்பமான ஒரு நாடு. ஆனால் எப்படியாவது இதனைச் செய்து முடித்து அதன் பின் ஒன்றாக உணவு சாப்பிடச் செல்வோம்,” என்றார்.

முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின் மூலம் கொள்கை வகுப்பில் குடிமக்கள் பங்கேற்பு ஊக்குவிக்கப்படும் என்று திரு நெஷ்வின் நம்புகிறார்.

“அரசாங்கமே எல்லாக் கொள்கைகளையும் உறுதிசெய்யும் என்ற பலரின் முனைப்பற்ற மனப்போக்கிற்கு மாறாக இந்தத் திட்டம் உள்ளது,” என்றார்.

மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட கற்றல்

கணவர், மூன்று பிள்ளைகளுடன் திருவாட்டி துர்கா மைக்கல், 33. படம்: துர்கா மைக்கல்

பிறருக்குத் தொண்டாற்றுவதன் மூலமாக பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ளோருக்கு உதவும் பரிவும் பக்குவமும் தம் பிள்ளைகளுக்கு வளர்வதாக பாலர் பள்ளி ஆசிரியர் துர்கா மைக்கல், 33, கூறினார்.

கற்பித்தலை 16 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் திருவாட்டி துர்கா, அண்மையில் கல்வித்துறையில் முதுநிலைப் பட்டத்தை முடித்து இளம் பிள்ளைப்பருவக் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்.

“எனக்கு 8, 6, 4 வயதுகளில் பிள்ளைகள் இருக்கிறார்கள். என் முதல் பிள்ளை ஒரு வயதாக இருக்கும்போதே அவனை நான் என் தொண்டூழிய நடவடிக்கைகளுக்கு அழைத்துச் சென்றேன்,” என்றார்.

‘மியன்மார் புரோஜெக்ட் பென்சில்’, ‘இந்தியா இலங்கை மலேசியா’, ‘மியன்மார் உணவு உதவித் திட்டம்’ ஆகியவற்றில் தம்முடன் தம் பிள்ளைகளை ஈடுபடுத்துவதாக திருவாட்டி துர்கா கூறினார். கொவிட்-19 காலத்தில் மின்னிலக்க உதவியையும் தற்போது நேரடி உதவியையும் இவர் பிள்ளைகள் ஆற்றியுள்ளனர்.

‘குட்டி டைனோசார்ஸ் எக்ஸ்ப்ளோரர்ஸ்’ திட்டத்தின்கீழ் வசதிகுறைந்த பிள்ளைகளை சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச்செல்ல திருவாட்டி துர்கா சுற்றுலாக்களையும் ஏற்பாடு செய்கிறார்.

தம்முடைய பிள்ளைகள் நடவடிக்கைகள் தொடர்பில் யோசனை சொல்வதுடன் தாங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தில் ஒரு பங்கையும் சுற்றுலாவுக்கு நன்கொடையாக அளிக்கின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உலகம் பற்றிய அனுபவ அறிவு இளம் வயதிலேயே வளரத் தொடங்குவதாக திருமதி துர்கா கூறினார். பிறருடன், குறிப்பாக முதியோருடனும் வசதி குறைந்தோருடனும் பேசும் பக்குவத்தை அவர்கள் வளர்த்துக்கொள்வதாக அந்தத் தாயார் கூறினார்.

“ஏட்டுக்கல்வி முக்கியம் என்றாலும் அது மட்டும் வாழ்க்கையில் முழுமையான கற்றலைத் தந்துவிடாது. தொண்டூழியம் மூலம் என் பிள்ளைகள் தங்கள் அனுபவ அறிவை வளர்த்துக்கொள்வதை முக்கியமாக நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

‘சிங்கப்பூர் சைலண்ட் ஹீரோஸ்’ விருதை 2014ல் பெற்ற திருவாட்டி துர்கா, தற்போது இந்த விருதின் முன்னாள் வெற்றியாளர் செயற்குழுவின் இணைத் தலைவராகச் செயலாற்றுகிறார். இந்தக் குழுவின் நடவடிக்கைகளைப் பார்வையிடும் வாய்ப்பைப் பிள்ளைகளுக்குத் தருவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என அவர் கருதுகிறார்.

திறன்களை மேம்படுத்திப் பதவி உயர வாய்ப்பளித்தல்

மைண்ட்ஸ் அதிகாரிகளை நிர்வகிக்கும் இணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ஷாமினி மிஷெல், 39. படம்: மைண்ட்ஸ்

‘மைண்ட்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த அறிவுத்திறன் குறைபாடு உடையோரை, அந்த அமைப்பின் பணியாளர்கள் வெளியே உலா அழைத்துச் சென்றதை ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டார் ஷாமினி மிஷெல், 39.

அங் மோ கியோ வட்டாரத்தில் இந்தக் காட்சியைத் தாம் காணும்போது நிலையத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ளும் ஆவலால், தொண்டூழியராகச் சில மாதங்கள் சேர்ந்தார்.

தற்போது திருவாட்டி ஷாமினி, மைண்ட்ஸ் அதிகாரிகளை நிர்வகிக்கும் இணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 2004ல் உடற்குறையுள்ளோர் கல்விக்கான பட்டயத்தை முடித்தார்.

இதற்கிடையே தம் முன்னாள் கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளானது, அவரிடமிருந்து மணவிலக்கு பெற்றது என திருவாட்டி ஷாமினி மனமுடைந்து போனார். பெரும் மனக் கவலைக்கு ஆளாகி ஒரு கட்டத்தில் சரியாகப் பணியாற்ற இயலாமல் இருந்தார்.

“மிகுந்த துன்பத்தை அனுபவித்த எனக்கு என் வேலையிடம் கைகொடுத்தது. மறுபடியும் நான் என் பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கான வாய்ப்பை அது தந்தது,” என்றார்.

நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை மறப்பதற்கு இரண்டாவது பட்டயத்தைச் சமூகச் சேவை பயிற்சிக் கழகத்தில் கற்க திருவாட்டி ஷாமினி 2020ல் முற்பட்டார்.

தொடக்கப்பள்ளி பயிலும் மகனையும் மகளையும் கவனித்துக்கொண்டே தாமும் படிக்க வேண்டிய நிலையில் அவருக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டது.

“வகுப்புகளுக்குத் தேவைப்பட்ட மடிக்கணினியை வாங்கக்கூட என்னால் இயலவில்லை. என் வேலையிடமான மைண்ட்ஸ் அமைப்பே எனக்கு இரவல் தந்தது,” என்றார்.

பட்டயத்தைக் கடந்தாண்டு பெற்ற அவர், தற்போது இணை மேலாளராகச் செயல்பட்டு இளம் பராமரிப்பாளர்களை உருவாக்கி வருகிறார். தம் பிள்ளைகள் முன்னிலையில் சான்றிதழ் வாங்கிய இந்தத் தாயார், இதன் மூலம் தம் பிள்ளைகளும் படிக்கும் தூண்டுதலைப் பெறுவர் என விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!