தரமான உணவு கோரும் வெளிநாட்டு ஊழியர்கள்

நாளை அனைத்துலகக் குடியேறிகள் தினம். இவர்களில் நம் வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குவர். நாட்டு நிர்மாணத்திற்காக சிங்கப்பூரில் இரவுபகல் பாராமல் வியர்வை சிந்தி உழைக்கும் இவர்களுக்குச் சத்தான, சுவையான, தரமான உணவு கிடைப்பதில்லை என அண்மையில் செய்திகள் பல வந்துள்ளன. இதன் தொடர்பில் வெளிநாட்டு ஊழியர்களின் அனுபவங்கள், தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் ஆகியவற்றை அறிந்துவந்தது தமிழ் முரசு.

உணவுத் தரம் குறித்த எதிர்பார்ப்பு

உணவுப் பொட்டலத்தைத் திறந்து பார்த்தால் புழு.

தரத்தைப் பார்ப்பதா, அல்லது வயிற்றை நிரப்பி அடுத்த வேலையைக் கவனிப்பதா? இதுவே நம் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் சந்திக்கும் ஒரு நெருக்கடி.

சம்பளத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பிவிட்டு எஞ்சிய பணத்தில் தாங்களே சமைத்துச் சாப்பிட விரும்புகின்றனர் வெளிநாட்டு ஊழியர்கள்.

ஆனால், சமைக்கும் வசதி அனைத்து ஊழியர் தங்குவிடுதிகளிலும் கிடையாது.

இதனால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தித் தனியார் உணவு விநியோக நிறுவனங்களிடமிருந்து இவர்கள் மாதாமாதம் உணவைப் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், அத்தகைய உணவுவகைகள் தரம் குறைவாக இருப்பதாகவும் வேறு வழியின்றி அவற்றைச் சாப்பிடும் கட்டாயத்தில் உள்ளதாகவும் ஊழியர்கள் குமுறுகின்றனர்.

கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் தங்குவிடுதிகளில் முடங்கியிருந்தபோது அவர்களுக்கு அரசாங்கம் மூன்று வேளை தரமான உணவு அளித்து அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்தது.

ஆனால், கிருமித்தொற்றுக் காலம் தணிந்து வழக்கத்துக்கு வரும் நிலையில் தனியார் உணவு விநியோக நிறுவனங்களின் உணவு முன்பைப் போலவே தரமின்றி இருப்பதாக ஊழியர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் உணவு பொட்டலம். படம்: பேட்டியளித்த வெளிநாட்டு ஊழியர்

“ஒரு வெளிநாட்டு ஊழியரின் சராசரி மாதச் சம்பளம் $600. குடும்பத்துக்காக பணம் ஒதுக்கிவிட்டு மீதப் பணத்தில் கட்டணம் செலுத்தி உணவைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தரமான உணவுக்கு அதிகக் கட்டணம் செலுத்த, ஊழியர்களின் சம்பளம் உயர வேண்டும். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் முதலாளிகளுக்கும் சவால்கள் ஏற்படும்.

“சிங்கப்பூரில் இருக்கும் அனைத்துத் தங்குவிடுதிகளிலும் சமைப்பதற்கான வசதிகளை அரசாங்கம் செய்துத் தர வேண்டும்,” என்று கூறுகிறார் ‘அலயன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்கஸ் அவுட்ரீச்’ எனும் சமூக சேவை நிறுவனத்தில் தலைமை இயக்குநர் திரு சேமுவல் கிஃபிட் ஸ்டீபன்.

ஆரோக்கியம் பாதிப்பு

செனோகோ தனியார் தங்குவிடுதியில் ஏறத்தாழ 300 ஊழியர்கள் வசிக்கின்றனர். அவற்றில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் தனியார் உணவு விநியோக நிறுவனங்களிடமிருந்து மூன்று வேளை உணவை வாங்கிக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் 33 வயதாகும் செல்வராசு செந்தில். செந்தில் கடந்த நான்காண்டுகளாக சிங்கப்பூரில் சாலைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். காலையில் தொடங்கி பிற்பகலில் முடியும் அவரின் வேலை, சில சமயம் இரவு வரைகூட நீடிக்கும்.

சுட்டெரிக்கும் சூழலில் வேலை பார்க்கும் அவர், பெரும்பாலான நேரங்களில் தண்ணீரை மட்டும் குடித்துவிடுவார், அல்லது மலிவான உணவை வாங்கிக்கொள்வார். அவர் விநியோகிக்கப்படும் உணவுக்காக மாதம் $120 கட்டணமும் செலுத்துகிறார். ஆனால், அவருக்குக் கிடைப்பது தரமான உணவு அல்ல.

வேகாத சாதம், குழம்பில் தூசு, ஆணி, நட்டு, பூச்சிகள், சிகரெட்டுகள், பூரான் போன்றவை உணவில் கிடப்பதுண்டு. புகார் செய்தும் மாற்றம் இல்லை.

உணவில் இருந்த புழு. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்
உணவில் கிடந்த புழு. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்
உணவில் கிடந்த புழு. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்

‘எதுவும் சொல்லாமல் காலத்தை ஓட்ட வேண்டியதுதான்’ என்பதே செந்திலின் தற்போதைய மனநிலை. அவரைப் போல் மௌனம் காத்து குமுறும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர்.

உணவுத் தரம் மோசமாக இருப்பதால் சிலர் வெறும் வயிற்றுடன் வேலைக்குச் செல்வதும் உண்டு என்று வெம்பியவாறு கூறினார் செந்தில்.

ஊழியர்களுக்குச் செரிமானப் பிரச்சினை இதனால் ஏற்படலாம் என்று கூறிய செந்தில், சிங்கப்பூருக்கு வந்த பின்புதான் தனக்கு வயிற்றுவலியும் வயிற்றுப்புண்ணும் ஏற்பட்டதாகச் சொன்னார்.

வீண் செலவு

தமிழகத்தின் காரைக்குடியிலிருந்து எட்டு மாதங்களுக்கு முன்பு வந்த தங்கவேலு சுரேந்தர், $600 மாதச் சம்பளம் பெறுகிறார்.

பெஞ்சுரு தங்குவிடுதியில் இருக்கும் இவர், தளவாடங்கள் துறையில் பளுதூக்கியை இயக்குபவராக உள்ளார். சமைக்க நேரமில்லை என்று கூறிய இவர், $140 கட்டணம் செலுத்தித் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு மாதத்தில் மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்கிறார்.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் காலை உணவைச் சாப்பிடாமல் வீசி விடுவார்.

சுவையற்ற, காரமான மதிய உணவை அவர் சாப்பிட வேண்டியுள்ளது. குழம்பில் அதிக மசாலா தூள் வாடை இருப்பதாகவும் சில முறை மதிய உணவு கெட்டுவிட்டதாகவும் குறிப்பிட்ட சுரேந்தர், தனக்குப் பலமுறை வயிற்றுவலி வந்துள்ளதாகச் சொன்னார்.

வழக்கமாக ஊழியர்கள் சாப்பிடும் உணவு. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்

சம்பளத்தைக் கொண்டு வீட்டுக் கடனை அடைக்கத் திணறும் சுரேந்தர் போன்றவர்கள், வேறுவழியின்றி கிடைப்பதை வாயில் போட்டுக்கொள்கின்றனர்.

விலை உயர்த்தினாலும் பரவாயில்லை

சிங்கப்பூருக்கு 2011ஆம் ஆண்டு வேலைக்காக வந்தவர் சண்முகவேல் கார்த்திகேயன், 34. கட்டுமானத் துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் இவர், மாதச் சம்பளமாக $1800 ஈட்டுகிறார். ஒவ்வொரு மாதமும் உணவுக்கென இவர் $130 ஒதுக்குகிறார்.

சுங்கை காடுட் தங்குவிடுதியில் வசிக்கும் இவர், தனக்கு விநியோகிக்கப்படும் உணவைப் பற்றி புலம்பாதே நாளே இல்லை. காலையில் 7.30 மணிக்குத் தனது நாளைத் தொடங்கும் இவர், இட்லி, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுவகைகளைச் சாப்பிட்டு வருகிறார்.

முந்தைய நாள் இரவு தயாரிக்கப்பட்ட உணவை, காலை அல்லது மதியம் உண்ணும்போது அது காய்ந்து, இறுகிப் போய் மெல்வதற்கே சிரமமாக இருப்பதாகச் சொன்னார்.

மிருதுவாக இருக்கவேண்டிய சாதம், இறுகிப் போய் உள்ளது. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்
மிருதுவாக இருக்கவேண்டிய சாதம், இறுகிப் போய் உள்ளது. படம்: பேட்டி அளித்த வெளிநாட்டு ஊழியர்

மதியம் 12 மணிக்கு உண்ணும் கார்த்திகேயன், “சாதம் வேகாமல் இருப்பதால் எங்களுக்குக் கல்லை உடைத்துச் சாப்பிடுவது போல் இருக்கும்,” என்றார்.

கல் போல் இருக்கும் வேகாத சாதத்துடன் சாப்பிடும் குழம்பும் காய்கறிகளும் காரமாக இருப்பதுடன் சீக்கிரம் கெட்டுவிடுவதாகவும் கார்த்திகேயன் சொன்னார்.

உணவும் போதாது என்று கூறும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்களின் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படுவதை உணர்கின்றனர்.

கார்த்திகேயன் போன்ற ஊழியர்கள் தங்கள் தங்குவிடுதி அறைக்குத் திரும்ப இரவு 11 மணிகூட ஆவதால் மலிவான விலையில் தின்பண்டங்கள் வாங்கிக்கொள்வதும் உண்டு.

உணவுக்குக் கட்டணத்தை உயர்த்தினாலும் பரவாயில்லை. ஆனால், தரமான உணவு வேண்டும் என்று கலக்கத்துடன் கேட்டுக்கொண்டார் கார்த்திகேயன்.

கடை உணவே மேல்

முன்பு பெஞ்சுரு தங்குவிடுதியில் இருந்தபோது பன்னீர்செல்வன் நாகராஜு, 35, அங்கிருந்த சமையல் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், அவர் துவாஸ் சவுத் பொலிவார்ட் தங்குவிடுதிக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் மாறியதும் சமைக்கும் வசதிகள் இல்லாமல் போயின.

கடற்பட்டறையில் பணியாற்றும் நாகராஜ், மாதத்திற்கு $144 கட்டணம் செலுத்தித் தங்குவிடுதியில் இருக்கும் சிற்றுண்டி சாலையில் தயாரிக்கப்படும் உணவைப் பெற்றுக்கொள்கிறார்.

ஆனால், அவர் பெரும்பாலும் சாப்பிடுவது கடைகளில்தான்.

“தனியார் உணவு விநியோக நிறுவனங்கள் தயாரிக்கும் உணவைச் சாப்பிடுவதைவிட, கடைகளில் கூடுதல் பணம் கொடுத்துத் தரமான உணவைச் சாப்பிட்டுவிடலாம்,” என்கிறார் நாகராஜ்.

நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு சிறிய பொட்டலங்களில் வருவதால், அவை கடுமையான வேலைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதாது என்றும் சுட்டினார் நாகராஜ்.

இரவு உணவை ஊழியர்கள் வேலை முடிந்து சாப்பிடுவதற்குள் முட்டை, இறைச்சி உணவுவகைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கூறினார்.

செலவு அதிகமானாலும் தன் உடல்நலம் கருதி கடையில் உணவு வாங்கிச் சாப்பிடுகிறார் நாகராஜ்.

குறை இல்லை

சிங்கப்பூரில் கடந்த 11 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் 35 வயது ராஜேந்திரன் ராஜேஷ், துவாஸ் சவுத் லேன் தங்குவிடுதியில் இருக்கிறார். அவர் தங்குமிடத்தில் சமைக்கும் வசதிகளும் அதற்கான அனுமதியும் இல்லை. இதனால், அவர் தனியார் உணவு விநியோக நிறுவனங்களிடமிருந்துதான் மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு மாதத்திற்கு அவர் $120 கட்டணம் செலுத்துகிறார். இந்த விலை நியாயமானது என்ற அவர், பக்கத்தில் எந்த கடைகளும் இல்லாததால், இந்தத் தெரிவு இல்லையென்றால் அவரைப் போன்ற ஊழியர்கள் சாப்பிடுவதற்கு மிகக் கடினம் என்றார்.

காலை 7.15 மணிக்குள் காலை உணவு தங்குவிடுதிக்கு வந்துவிடும் என்றார் அவர்.

அத்துடன், காலை உணவுடன் ஒரே நேரத்தில் மதிய உணவும் வந்துவிடுவதால் மதிய உணவைச் சரியான நேரத்தில் சாப்பிட முடிகிறது என்று சொன்னார்.

தன்னைப் போன்றவர்கள் மாதம் செலுத்தும் குறைந்த கட்டணத்துக்கு உணவு தொடர்பில் அதிக எதிர்பார்ப்புகளை வைக்காது இருப்பதே சரி என்றார்.

தனியார் உணவு நிறுவனங்களின் சவால்கள்

விலைக்கு ஏற்ற தரம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு வழங்கும் ‘ஐஸ்வர்யா கேட்டரிங்’ நிறுவனத்தை பரமேஸ்வரர் ஷண்முகத்தேவர், 56, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்திலிருந்து அனுதினமும் கிட்டத்தட்ட 7000 உணவுப் பொட்டலங்கள் தங்குவிடுதிகளுக்கு மூன்று வேளை விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பரமேஸ்வரர் ஷண்முகத்தேவர். படம்: பே. கார்த்திகேயன்

ஒவ்வொரு மாதமும் உணவு விநியோகத்துக்கு $130 கட்டணம் விதிக்கும் இவர், “இந்த விலைக்கு என்னால் ஒரு குறிப்பிட்ட தரத்திற்குத்தான் உணவு தயாரிக்க முடியும்,” என்று சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம் பெரும்பாலும் குறைவாக உள்ளதால் தன்னால் இயன்றவரை குறைவான கட்டணம் விதிக்கும் இவர், பலவிதமான உணவு வகைகளை அன்றாடம் விநியோகிக்கிறார்.

பிராட்டா, சப்பாத்தி, பொங்கல், அசைவ வகைகள், மீ கோரேங், நாசி லெமாக், சாம்பார் சாதம் போன்றவற்றை இவரது நிறுவனம் விநியோகிக்கிறது.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சமையல்காரர்களையும் சீனாவிலிருந்து வந்த ஊழியர்களையும் சேர்த்து மொத்தம் 80 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிவதால் பரமேஸ்வரர் அவர்களின் சம்பளத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

“நம்மால் ஒவ்வொருவரின் சுவைக்கேற்றவாறு சமைத்துத் தர முடியாது. சிலர் காரம் அதிகம் விரும்புவார்கள், ஒரு சிலர் வேறு சுவையை விரும்புவார்கள். நாங்கள் அனைவரும் சாப்பிடும் வகையில் தான் உணவுகளைத் தயாரிக்க முடியும்,” என்றார்.

தரம் முக்கியம்

ஒன்பது ஆண்டுகளாக தனியார் உணவு நிறுவனங்களுக்குப் பொருள்களை விநியோகிக்கும் சேவையை நடத்தி வந்த 44 வயதாகும் பரமசிவம் ரமேஷ், இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து ‘தஞ்சை கேட்டரிங்’ எனும் தனியார் உணவு விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார்.

பரமசிவம் ரமேஷ். படம்: டினேஷ் குமார்

காக்கி புக்கெட் தொழிற்பேட்டையில் ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து உணவு சமைப்பதற்கு ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளார். மொத்தம் 30 தங்குவிடுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2100 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இவரது நிறுவனத்தில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை இவரது நிறுவனத்தில் உணவு சமைக்கப்படும். பெரும்பாலான ஊழியர்கள் காலை ஏழு மணிக்கே எழுந்து வேலைக்குச் செல்வதால் அவர்களுக்குக் காலை உணவும் மதிய உணவும் அவரவரது தங்குவிடுதிக்கு காலை ஐந்து மணிக்கு வந்துவிடும்.

இரவு சிற்றுண்டி பகல் நான்கு மணியளவில் தயாரிக்கப்படும். ஆனால், உணவு தயாரித்துப் பல மணி நேரம் கழித்துத்தான் ஊழியர்கள் சாப்பிட வேண்டிய சூழல்.

“ஊழியர்கள் எங்களுக்கு மாதம் $120 கட்டணம் செலுத்துகிறார்கள். அன்றாடம் சமையலறையைச் சுத்தம் செய்தல், உணவுத் தயாரிப்பின்போது ஊழியர்கள் கையுறைகளையும் முடி வலைகளையும் அணிந்துகொள்ளுதல் ஆகியவற்றை நான் வலியுறுத்தியுள்ளேன்,” என்றார்.

ஆனாலும், ஊழியர்கள் சிலர் காரம் போதவில்லை, உணவால் உடல்நலன் பாதிக்கப்பட்டது என்று குறைகூறுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார் ரமேஷ்.

அதிக ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிப்பதால் அவர்கள் குறித்த நேரத்தில் மாதக் கட்டணம் செலுத்துவதைக் கண்காணிக்கத் தான் தடுமாறுவதாக ரமேஷ் கூறினார்.

“அடுத்த மாதம் பணம் கொடுத்துவிடுகிறோம்,” என்று சிலர் கூறுவது தன் தொழிலை மேலும் கடினமாக்குவதாக ரமேஷ் பகிர்ந்தார்.

கூடுதல் உதவி வேண்டும்

வெளிநாட்டு ஊழியர்கள் சாப்பிடும் உணவின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் திண்ணமாக உள்ளனர், சச்சி கேட்டரிங் நிறுவன உரிமையாளர்கள். சிங்கப்பூர் உணவு அமைப்பு, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றின் வழிகாட்டிகளுக்கு ஏற்றவாறு நிறுவனத்தில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்படுவதாக இணை உரிமையாளர் ஆறுமுகம் சச்சிதானந்தன் கூறினார்.

ஆறுமுகம் சச்சிதானந்தன். படம்: டினேஷ் குமார்

காலை ஐந்து மணிக்குத் தொடங்கி, 6.30 மணியளவில் ஊழியர்களின் காலை உணவு தங்குவிடுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுபோல, மதிய உணவு காலை 9.30 மணியளவில் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு 11 மணியளவில் விடுதிகளுக்கு அனுப்பப்படும்.

இரவுணவும் பிற்பகலில் தயாரிக்கப்டுகின்றன.

“ஒரு குறிப்பிட்ட மணிக்குள் ஊழியர்கள் உணவை சாப்பிட வேண்டுமென்ற ஒட்டுவில்லைகளை உணவுப் பொட்டலத்தில் ஒட்டிவிடுவோம். கடினமாக உழைப்பதால் முடிந்தளவில் அவர்களுக்காக நாங்கள் இறைச்சி வகைகளையும் சேர்த்துவிடுவோம்,” என்றார் சச்சிதானந்தன்.

“அத்துடன், வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவு. அதனால், மாதம் $120 கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். எங்களுக்கு லாபம் ஈட்ட முடியாமல் போனாலும் சேவை ஆற்றவே நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார் சச்சிதானந்தன்.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 40 பேர் இந்நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். சச்சிதானந்தனோடு இணைந்து நிறுவனத்தை நடத்தி வரும் மற்றொருவரான ராஜேந்திரன் பாலமுருகன், 49, “நாங்கள் தினமும் 14 தங்குவிடுதிகளில் உள்ள சுமார் 3500 வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கிறோம். எங்களுக்கு இது பெரிய சவால். தானியக்கக் கருவிகளைக் கொண்டு உணவு தயாரிக்கிறோம். எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவி செய்யலாம்,” என்று கேட்டுக்கொண்டார் அவர்.

அரசாங்க ஆதரவு

தனியார் உணவு நிறுவனங்கள் விநியோகிக்கும் உணவு, வெப்பம் தணியாத வகையில் பொட்டலமிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், உணவை உட்கொள்ள வேண்டிய தேதி, நேரம் குறித்த விவரங்கள் பொட்டலங்களில் முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகள் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்கள் உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து வருவதைத் தங்குவிடுதிகளை நடத்துபவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

அத்துடன், உணவுப் பொட்டலங்களை ஊழியர்கள் எடுக்கும் வரை கெடாமல் இருக்கும் வகையில் உணவுச் சேமிப்பகம், அல்லது உணவுப் பொட்டலங்களை எடுத்துக்கொள்வதற்கான முனைகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சு சோதனை மேற்கொண்டு விதிமுறைகளை நிறுவனங்கள் மீறுவது தெரிய வந்தால் சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

உணவு தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், மனிதவள அமைச்சின் ‘ஃபாஸ்ட்’ குழுவை நாடலாம். அல்லது, அவர்கள் ‘FWMOMCare’ என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் புகார் அளிக்கலாம்.

ஒருநாள் போதுமா...

அனுதினமும் இலவச காலை உணவையும் மதிய உணவையும் வழங்கி வருகிறது லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள ‘கிருஷ்ணா’ஸ் ஃபிரீ மீல்ஸ்’. அமைப்பின் பொருளாளர் லதா கோவிந்தசாமி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

“எங்களை அதிகம் நாடி வருவது வெளிநாட்டு ஊழியர்கள்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வரும் அவர்கள், வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுட சுட உணவைச் சாப்பிடுவது போதாது. முன்பைவிட இப்போது வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக எங்களை நாடி வருகிறார்கள். ஒரு வாரயிறுதியில் மட்டும் ஏறத்தாழ 1200 பேர் வருகிறார்கள்,” என்றார் அவர்.

சாப்பிடும் நாளுக்கு முந்தைய தினம் உணவு தயாரிக்கப்படுவதால் மறுநாள் அந்த உணவைச் சாப்பிட அவர்கள் சிரமப்படுவதை நினைத்தால் மிகவும் கவலையாக இருப்பதாகவும் இவர் போன்ற ஆதரவு நல்கும் நல்லுள்ளங்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!