சிங்கப்பூரின் 59வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அனைத்து ரயில் தடங்களிலும் ஐந்து ரயில்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட ரயில்கள் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வடகிழக்கு, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட், டௌன்டவுன் ரயில் தடங்களில் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை விடப்படும்.
இந்த அலங்கரிப்பில் ஆறு தேசிய அடையாளச் சின்னங்கள் இடம்பெறும்.
அவை யாவன:
தேசிய தின அடையாளச் சின்னமாக கம்பீரமான மெர்லயன் உருவம்;
சிங்கம், பணிவன்புக்கு அடையாளமாகவும் சிங்கப்பூர் பணிவன்பு இயக்கத்தின் அடையாளமாகவும் விளங்கும்;
‘ஷேரிட்டி’ என்று தொண்டூழியம் மூலம் பகிர்ந்தளிப்பதற்கு அடையாளமாக விளங்கும், சமூக அறப்பணி அமைப்பான ‘கம்யூனிட்டி செஸ்ட்’
நிலா, சிங்கப்பூரின் விளையாட்டுகளுக்கு அடையாளமாக;
தொடர்புடைய செய்திகள்
கேப்டன் ‘கிரீன்’, தேசிய சுற்றுப்புற வாரியம் மற்றும் சிங்கப்பூரை சுத்தமாகவும் பசுமைப் பரப்பாகவும் வைத்திருப்பதற்கு அடையாளமாக;
இவற்றுடன், ‘பெக்கி பன்னி’, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் வாழ்நாள் முழுவதும் குடும்பங்கள் என்ற இயக்கத்தின் அடையாளமாக;
தேசிய தினக் கருப்பொருளுடன் கூடிய அலங்காரங்களில் மேற்குறிப்பிட்ட ஆறு தேசிய அடையாளச் சின்னங்களும் இடம்பெறும்.
சிங்கப்பூர் தனது 59வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தேசிய தினக் கருப்பொருளுடன் கூடிய அலங்காரங்களின் அறிமுகம் திங்கட்கிழமை (ஜூலை 8ஆம் தேதி) வட்ட ரயில் பாதையின் ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. அந்த ரயில் வண்டியின் தரையில், சன்னல்களில், ரயில் சுவர்களின் தேசிய தின கருப்பொருளுடனான ஒட்டுவில்லைகள் காணப்பட்டன.
ரயில் வண்டியின் தரையில் சிங்கப்பூரின் தேசிய நிறங்களான சிவப்பு, வெள்ளை வடிவில் ஒட்டு வில்லைகளும் ரயில் சுவர்களில் மேற்கூறிய ஆறு அடையாளச் சின்ன ஒட்டுவில்லைகளும் காணப்பட்டன. இவை யாவும் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருளான ‘ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் ஒரு நாட்டு மக்களாக’ என்பதை எதிரொலிக்கும்.
மேலும், தேசிய தினச் சுவரோவியமாக தோ பாயோவில் உள்ள கடல்நாக விளையாட்டு திடல் ஏழு ரயில் நிலையங்களை அலங்கரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏழு ரயில் நிலையங்கள்: கிழக்கு-மேற்கு தடத்தில் உள்ள பிடோக், புவன விஸ்தா, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் தடத்தில் உள்ள உட்லண்ட்ஸ், அப்பர் தாம்சன், டௌன்டவுன் தடத்தில் உள்ள எக்ஸ்போ, வடகிழக்கு தடத்தில் உள்ள பொங்கோல், டோபி காட் ஆகிய நிலையங்கள் ஆகும்.
இந்தத் திட்டம் நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய தின 2024 ஏற்பாட்டுக் குழு, ரயில் வண்டி நடத்துநர்களான எஸ்பிஎஸ் டிரான்சிட் மற்றும் எஸ்எம்ஆர்டி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.