இங்கிலீஷ் பிரிமியர் லீக்: மாற்றத்திற்கு ஏக்கம்

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: மாற்றத்திற்கு ஏக்கம்

3 mins read

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்து அணி கடந்த சில நாட்களில் எதிர்கொண்ட சவால்களை சுமார் ஈராண்டுகளுக்கு முன் சந்தித்திருந்தால் நிர்வாகி ஒலே குனா சொல்ஷியா நிச்சயமாக உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார். ஆனால் இப்போதைக்காவது அவர் பதவியில் இருப்பார் என்பது போல் தெரிவதே காற்பந்து உலகில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். வரும் நாட்களிலும் சொல்ஷியா வேலையை இழக்க எல்லா வாய்ப்பும் உள்ளது.

இருந்தாலும், யுனைடெட்டின் நிர்வாகக் குழு நிதானமாக இயங்குகிறது. சற்று கர்வம் கொண்டிருக்கக்கூடிய சில விளையாட்டாளர்களின் பேச்சை மட்டும் கேட்டு செயல்பட்டால் முன்னேறுவது சிரமம் என்பது தெரிந்திருக்கலாம். கொடுக்கப்பட்ட மறு வாய்ப்பை சொல்ஷியாவும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.

ஸ்பெயினில் பார்சிலோனா அணியிலும் அதன் பயிற்றுவிப்பாளர் ரோனல்ட் கூமனுக்கு கிட்டத்தட்ட இதே நிலைமைதான். ஆட்டத்தின் முடிவுகள் எதிர்பார்த்த வண்ணம் வராவிட்டாலும் பொறுமையாக இருக்கவேண்டும் என்று அவ்வணியின் நிர்வாகக் குழுவிற்குப் புரிந்திருக்கிறது. காரணம், நினைத்தபடி அடிக்கடி அதிகப் பணம் கொடுத்து நிர்வாகியை மாற்ற அணியிடம் போதுமான நிதி இல்லை. கைகள் கட்டப்பட்டுள்ளதால் 'எகத்தாளம்' குறைந்துள்ளது.

சரி, இங்கிலீஷ் பிரிமியர் லீக்கைப் பற்றி மட்டும் பேசுவோம். இதுவரை லிவர்பூல் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, செல்சி எவ்விதக் குறையுமின்றி மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறது. மான்செஸ்டர் சிட்டியின் விளையாட்டில் ஏதோ குறை இருப்பது போல் இருந்தாலும் ஆட்டங்களை வெல்வதில் அதன் நிர்வாகி பெப் குவார்டியோலா கில்லாடி. மற்ற அணிகள் சிட்டியைப் பார்த்து பயப்படுவதை நிறுத்தினால் இந்நிலை மாறலாம். இந்த மூன்று அணிகளும் லீக் பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன.

-

நான்காம் இடத்தில் இருப்பது சென்ற பருவத்தில் ஆறாம் இடத்தைப் பிடித்து பலரின் பாராட்டுகளைச் சம்பாதித்த வெஸ்ட் ஹேம் யுனைடெட். "இப்பருவத்திலும் நாங்கள் எளிதில் விட்டுக்கொடுக்கப்போவதில்லை," என்ற மனப்போக்குடன் இதுவரை செயல்பட்டு வந்துள்ளார் அணியின் நிர்வாகி டேவிட் மோயெஸ். மான்செஸ்டர் யுனைடெட்டில் ஏற்பட்ட அவமானத்தை முற்றிலும் துடைக்கும் மனவுறுதியுடன் இயங்குகிறார் போல் தெரிகிறது.

மற்றபடி மான்செஸ்டர் யுனைடெட் ஏழாம் இடத்தில், பருவத்தைப் படுமோசமாகத் தொடங்கி பாராட்டும் வகையில் மீண்டெழுந்த ஆர்சனல் பத்தாம் இடத்தில், அசத்தலாகத் தொடங்கி களையிழந்துபோன டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஆறாம் இடத்தில். எவர்ட்டன், லெஸ்டர் சிட்டி, ப்ரென்ட்ஃபர்ட், வாட்ஃபர்ட், வுல்வஹேம்ப்டன் வாண்டரர்ஸ் ஆகிய அணிகள் இனி தொடர்ந்து எப்படி விளையாடும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்ததால் சென்ற பருவத்தில் விளையாட்டரங்குகளுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அரங்குகள் அமைதியாக இருந்ததால் சில அணிகள் எதிர்பாரா விதமாக பருவத்தைச் சிறப்பாகத் தொடங்கின, மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் ஆகியவை சோபிக்கத் தவறின. டிசம்பர் மாதத்திற்குப் பிறகு எல்லா அணிகளும் தடுமாறின, வெற்றி மீது வெற்றி வந்து மான்செஸ்டர் சிட்டியைச் சேர்ந்தன. காரணம், கொவிட்-19 சூழலால் பருவம் தொடங்குவதற்கு முன் விளையாட்டாளர்களுக்குப் போதுமான ஓய்வு இல்லை, அதைச் சமாளிக்க சிட்டியிடம் மட்டும்தான் பண பலமும் ஆள்பலமும் இருந்தன. பிற அணிகளை ஊதித் தள்ளியது சிட்டி. அப்படியிருந்தும் அணி செலவழித்த பணத்தையும் அதனிடம் இருக்கும் நட்சத்திரப் பட்டாளத்தையும் கருத்தில்கொள்ளும்போது சிட்டி அபாரமாக ஆடியது எனச் சொல்ல முடியுமா? இதற்கான பதில் சர்ச்சையை எழுப்பக்கூடும்.

கிட்டத்தட்ட ஒரு பருவம் முழுவதும் அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் உற்சாகம் இழந்த வீரர்கள் இப்போது ரசிகர்களின் முன்னிலையில் புத்துயிர் பெற்று ஆடுவதைக் காண முடிகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது அவ்வளவு புலப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒவ்வோர் ஆட்டத்தையும் கூர்ந்து கவனித்தால் இது தெரிகிறது. எப்போதும் போல் செல்சி, சிட்டி இரண்டும்தானே அசத்திவருகின்றன எனச் சிலர் நினைக்கலாம். கடிவாளத்தை அகற்றிவிட்டு லிவர்பூல், வெஸ்ட் ஹேம், லெஸ்டர், ப்ரென்ட்ஃபர்ட், வுல்ஸ் ஆகியவற்றையும் திரும்பிப் பார்ப்போமே.

சென்ற பருவம் பல அதிர்ச்சிகளை வழங்கப்போவதுபோல் பாசாங்கு செய்தது, இறுதியில் நடந்ததோ வேறு. பார்த்து பார்த்து அலுத்துப்போன அதே அணிகள்தான் இப்பருவத்திலும் சிறந்து விளங்கும் என்பது போல் இப்போது தெரியலாம். 38வது ஆட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கலாம். இதுவரை ஒன்பது ஆட்டங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. டிசம்பர், ஜனவரி மாதங்களில் சில எதிர்பாரா திருப்பங்களைக் கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்