சிட்னி: இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (ஜனவரி 4) 15 விக்கெட்டுகள் விழுந்தன.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ஒன்பது ஓட்டங்களை எடுத்திருந்தது.
இரண்டாம் நாளின் தொடக்கத்திலிருந்தே அவ்வணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சரிவைச் சந்தித்தது.
இறுதியில் அவ்வணி 181 ஓட்டங்களுக்குத் தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது.
இந்திய அணித் தரப்பில் முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும் அணித்தலைவர் ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அடுத்து, தனது இரண்டாம் இன்னிங்சை அதிரடியாகத் தொடங்கியது இந்தியா. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே நான்கு பவுண்டரிகளை விளாசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஆனாலும், முதல் இன்னிங்சைப் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி நிலைத்து ஆடவில்லை. ரிஷப் பன்ட் மட்டும் அதிரடியாகப் பந்தடித்து, 33 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரவீந்திர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் களத்தில் உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பும்ரா கேள்விக்குறி
ரோகித் சர்மா விலகிய நிலையில், இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜஸ்பிரீத் பும்ரா, இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்குப்பின் ஒரே ஓவருடன் களத்தைவிட்டு வெளியேறினார்.
அணி மருத்துவருடனும் பாதுகாவல் அதிகாரியுடனும் அவர் உடை மாற்றும் அறையைவிட்டு வெளியே சென்றதாக ‘ஈஎஸ்பின் கிரிக்இன்ஃபோ’ செய்தி தெரிவித்தது. அவர் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
இதனால், அவர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அவர் இல்லாத நேரத்தில் விராத் கோஹ்லி இந்திய அணியை வழிநடத்தியதைக் காண முடிந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் இதுவரை 152.1 ஓவர்களை வீசி, 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.