இவ்வாண்டின் உடற்குறையுள்ளோர்க்கான ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த 20 வீரர்கள் ஒன்பது விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
விளையாட்டுகள் வரும் அக்டோபர் மாதம் ஜப்பானின் அய்ச்சி மாநிலத்திலும் நகோயா நகரிலும் நடைபெறுகின்றன. வில்லம்பு, திடல்தடப் போட்டிகள், பூப்பந்து, நீச்சல், துப்பாக்கிச்சுடுதல், மேசைப்பந்து, சாலை சைக்கிளோட்டம், பொக்கியா ஆகிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீரர்கள் பங்கேற்பர்.
அந்த 20 வீரர்களில் எட்டுப் பேர் முதன்முறையாக உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்பர் என்று சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர் விளையாட்டுகள் மன்றம் (என்என்பிசி) சனிக்கிழமை (செப்டம்பர் 12) அறிவித்தது. ஏற்கெனவே விளையாட்டுகளில் பங்கேற்று இப்போது வேறு விளையாட்டில் களமிறங்குவோரும் அவர்களில் அடங்குவர்.
எடுத்துக்காட்டாக, உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற தெரேசா கோ இம்முறை துப்பாக்கிச்சுடுதலில் போட்டியிடுகிறார்.
சிங்கப்பூர் விளையாட்டாளர்களை அறிவிக்கும் சடங்கு கரையோரப் பூந்தோட்டங்களில் சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடந்தது. அப்போது டீம் சிங்கப்பூர் குழுவின் தலைவர் லோ சீ லியென்னிடம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் சிங்கப்பூர் தேசியக் கொடியை வழங்கினார்.
எஸ்என்பிசி இணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் திரு லோ, 2022 உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் பங்கேற்ற டீம் சிங்கப்பூர்க் குழுவின் தலைவராக இருந்தார்.

