தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அந்தத் தொடரே எனக்குப் பாடம் கற்றுத் தந்தது: அஸ்வின்

2 mins read
நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க ஆயத்தம்
9a9c349c-387b-4f85-b86a-8370a3b69625
மார்ச் 7ஆம் தேதி வியாழக்கிழமை தமது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். - படம்: ஏஎஃப்பி

தர்மசாலா: இங்கிலாந்து அணிக்கெதிராக 2012ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோற்றுப்போனதே தமது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனைத் தொடர் என்று இந்திய அணியின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தொடர் உதவியதாக அஸ்வின் குறிப்பிட்டார்.

அந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோற்றது. 1984-85ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்து அணி, இந்தியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இதுவே முதன்முறை.

இந்நிலையில், வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 7) இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது.

இது அஸ்வினுக்கு நூறாவது டெஸ்ட் போட்டி.

இந்த மைல்கல் குறித்துப் பேசிய அஸ்வின், “இது மிகப் பெரிய தருணம். இந்த மைல்கல்லை எட்டியதைவிட, எனது கிரிக்கெட் பயணமே மிகச் சிறப்பானது. போட்டிக்குத் தயாராவதில் எதுவும் மாறவில்லை. அந்தப் போட்டியில் நாங்கள் வெல்ல வேண்டும்,” என்றார் அஸ்வின்.

கடந்த 2018-19 பருவத்தில் பர்மிங்ஹமில் நடந்த போட்டியில் வெளிப்படுத்தியதே தமது ஆகச் சிறந்த செயல்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அலஸ்டர் குக், ஜோ ரூட் உள்ளிட்ட எழுவரின் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார். ஆயினும், அப்போட்டியில் இந்தியா 31 ஓட்டங்களில் வெற்றியை இழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ளேவிற்குப் பிறகு 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை அண்மையில் படைத்தார் அஸ்வின். அவர் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

குறிப்புச் சொற்கள்