ரியோ டி ஜெனிரோ: வரும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியே தான் விளையாடும் கடைசி உலகக் கிண்ணம் என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் தெரிவித்துள்ளார்.
அதனால், அத்தொடரில் விளையாடும் பிரேசில் அணியில் இடம்பெற தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்யப்போவதாக அவர் கூறியுள்ளார்.
‘சிஎன்என்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
நெய்மார் அனைத்துலகக் காற்பந்துப் போட்டியில் விளையாடி ஓராண்டிற்கும் மேலாகிவிட்டது.
கடந்த 2023 அக்டோபரில் உருகுவே உடனான போட்டியில் பிரேசில் தோற்றுப்போனது. அந்த ஆட்டத்தின்போது முழங்காலில் காயமுற்றார் நெய்மார். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் கடந்த 12 மாதங்களாக விளையாட முடியாமல் போனது.
சவூதி அரேபிய லீக்கில் அல் ஹிலால் குழுவிற்காக விளையாடி வரும் நெய்மார், கடந்த 2024 அக்டோபர், நவம்பரில் இருமுறை களமிறங்கினார். ஆனாலும், அதன்பின் ஏற்பட்ட தசைநார்ப் பிடிப்பு காரணமாக இன்னும் அவரால் விளையாட முடியவில்லை.
பார்சிலோனா குழுவில் நெய்மாருடன் இணைந்து விளையாடிய லயனல் மெஸ்ஸியும் (அர்ஜென்டினா) லூயிஸ் சுவாரெசும் (உருகுவே) தற்போது அமெரிக்கக் காற்பந்து லீக்கில் இன்டர் மயாமி குழுவிற்காக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுடன் மீண்டும் இணைந்து விளையாடும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்கிறார் நெய்மார்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்கள் என் தோழர்கள். எங்களுக்குள் பேசிக்கொள்வோம். மீண்டும் இந்த மூவர் கூட்டணி அமைவது களிநயமாகவே இருக்கும்,” என்று அவர் சொன்னார்.
“இப்போது சவூதியில் உள்ளேன். ஆனால், யாருக்குத் தெரியும்? காற்பந்து முழுக்க முழுக்க வியப்புகள் நிறைந்தது,” என்கிறார் நெய்மார்.
இதனிடையே, நெய்மார் விரும்பினாலும் பிரேசில் அணி உலகக் கிண்ண இறுதிச்சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
தென்னமெரிக்க கண்டத்திற்கான தகுதிச்சுற்றைப் பொறுத்தமட்டில், இதுவரை 12 சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பிரேசில் தற்போது எட்டாம் இடத்திலுள்ளது. இன்னும் ஆறு சுற்று ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், பிரேசில் முதல் ஆறு அணிகளில் ஒன்றாக முடித்தால் மட்டுமே உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற முடியும்.