உரிமையை விற்றார் சச்சின்

உரிமையை விற்றார் சச்சின்

1 mins read

புதுடெல்லி: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. இந்த நிலையில், ஐஎஸ்எல் அணிகளுள் ஒன்றான கேரளா பிளாஸ்டர்சில் தமக்கிருந்த உரிமையை விற்றுவிட்டார் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர். இதன் தொடர்பில் நேற்று அறிக்கை வெளியிட்ட சச்சின், "ஐஎஸ்எல் தொடர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதற்குப் பின்னும் அணியைக் கொண்டு செல்ல கேரளா அணி அடித்தளம் அமைத்து வருகிறது.

இந்த நேரத்தில், அணியில் எனது பங்கையும் நான் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அணியிலிருந்து விலகுவது என முடிவெடுத்துள்ளேன்," எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கேரளா அணி நல்ல நிலையில் இருக்கிறது என்றும் அதன் வெற்றிப் பயணம் தொடரும் என நம்புகிறேன் என்றும் தனது இதயத்தின் ஒரு பகுதி எப்போதும் அந்த அணிக்காக துடித்துக்கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அணியின் மற்ற உரிமையாளர்களில் நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன் ஆகியோரும் அடங்குவர்.