வெற்றியை சுவைத்த ஆர்சனல், செல்சி

வெற்றியை சுவைத்த ஆர்சனல், செல்சி

1 mins read

பாரிஸ்: யூரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனலும் செல்சியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆட்டங்கள் நேற்று அதிகாலை நடைபெற்றன. உக்ரைனின் வோர்க்ஸ்லா போல்டாவாவை ஆர்சனல் 4-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆர்சனலின் நட்சத்திர வீரர் பியேர் எமெரிக் அபமாயேங் இரண்டு கோல்களைப் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை ஒரே ஒரு கோல் மட்டும் போட்டிருக்கும் அபமாயேங் நேற்றைய ஆட்டத்தில் சக்கைப்போடு போட்டார். ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் அவர் கோல் போட்டு எதிரணியைக் கதிகலங்க வைத்தார். பிற்பாதி ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளில் ஆர்சனலின் டேனி வெல்பேக் தலையால் முட்டிய பந்து வலையைப் பதம் பார்த்தது. அதனைத் தொடர்ந்து, அபமாயேங் கோல் போட்டார். ஆர்சனலின் நான்காவது கோலை மெசுட் ஒசில் போட்டதை அடுத்து ஆர்சனலின் கவனம் சிதற ஆரம்பித்தது.