சுசுகி கிண்ண காற்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிங்கப்பூர்க் குழு நேற்று இரவு நடை பெற்ற ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி யது. தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் ராஜமங்கள விளையாட்டரங்கில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்திடம் 3-0 கோல் கணக்கில் சிங்கப்பூர் குழு வெற்றியைப் பறிகொடுத்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் சிங்கப்பூரின் இர்ஃபான் ஃபாண்டியின் சொந்த கோலால் தாய்லாந்து முன்னிலை பெற்றது. 23வது நிமிடத்தில் தாய்லாந்தின் சுபாச்சாய் ஜெய்டேட் அடித்த கோலால் 2-0 என தாய்லாந்து மேலும் முன்னேறியது.
அதன் மூன்றாவது கோலை எடிசாக் கிரைசோம் புகுத்தினார். கோலடிக்க சிங்கப்பூர் எடுத்த முயற்சி கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இந்த தோல்வியால் சிங்கப்பூருக்கு இருந்த இன்னொரு வாய்ப்பும் பறிபோனது. தாய்லாந்துடன் சிங்கப்பூர் சம நிலை கண்டு, வேறோர் ஆட்டத்தில் பிலிப்பீன்சை இநதோனீசியா வீழ்த்தினாலும் சிங்கப்பூர் அரை இறுதிக்குத் தகுதிபெறும் என்பதே அந்த வாய்ப்பு. இந்தத் தொடரின் 'பி' பிரிவில் இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், திமோர் லெஸ்டே ஆகிய குழுக்களுடன் சிங்கப்பூர் இடம்பெற்றுள் ளது.
இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தோனீசியா, திமோர் லெஸ்டே ஆகியவற்றுடனான மோதலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர், பிலிப்பீன்சிடம் தோற்றது. அதனால் நேற்றைய போட்டி சிங்கப்பூருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது. "தாய்லாந்துக்கு அதன் சொந்த மண்ணில் அதிர்ச்சி அளிப்போம்," என்று சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஃபாண்டி அகமது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் மூன்றாவது கோலைப் புகுத்திய எடிசாக் கிரைசோமிடமிருந்து பந்தைப் பறிக்க முயலும் சிங்கப்பூரின் ஸுல்ஃபாமி அரிஃபின். படம்: ஏஎஃப்பி

