சிட்னி: அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை விளாச, மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வைத் தோற்கடித்தது. இதன்மூலம் தொடரும் 1=1 எனச் சமநிலையில் முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி நான்கு ஓட்டங்களில் வெற் றியைப் பறிகொடுக்க, இரண்டாவது ஆட்டம் மழையால் ரத்தானது. இதையடுத்து, நேற்று நடந்த மூன்றாவது, கடைசி போட்டியில் இந்திய அணி வென்றாக வேண் டிய கட்டாயத்தில் இருந்தது.
அதே நேரத்தில், தொடர்ச்சியாக ஏழு டி20 தொடர்களில் வென்று சாதித்த இந்திய அணியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக அபாயகர மான வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலியா. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த அந்த அணிக்கு நல்ல தொடக்கம் தந்தது ஆரோன் ஃபிஞ்ச் (28) = டார்சி ஷார்ட் (33) இணை. அதன்பிறகு நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதும் அலெக்ஸ் கேரி 27 ஓட்டங்களையும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ஓட்டங்களையும் விளாசினர். இதனால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தொடக்க இணையான ரோகித் சர்மாவும் (23) ஷிகர் தவானும் (41) அதிவேக தொடக்கத்தைத் தந்தனர். இரு வரும் சேர்ந்து முதல் விக்கெட் டுக்கு 5.3 ஓவர்களில் 67 ஓட் டங்களைக் குவித்தனர். அடுத்து ராகுல் (14), பன்ட் (0) என இரு விக்கெட்டுகளைப் பறி கொடுத்தபோதும் இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுப்பாக ஆடி வரும் தினேஷ் கார்த்திக்குடன் (22*) சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் கோஹ்லி. டி20 போட்டிகளில் இலக்கை விரட்டியபோது கோஹ்லி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த 14 முறையும் இந்தியாவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகனாக நான்கு விக் கெட்டுகளை வீழ்த்திய குருணால் பாண்டியாவும் தொடர் நாயகனாக தவானும் தேர்வு பெற்றனர்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 19வது அரை சதத்தை அடித்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

