இலக்கு நோக்கி நடைபோடும் ஆர்சனல்

இலக்கு நோக்கி நடைபோடும் ஆர்சனல்

2 mins read
11a5ec85-bb6f-4d8e-8955-5fd9c39c0536
-

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்தைவிட்டு வெளியே இருப்பது ஆர்சனலுக்கு இது தொடர்ச்சியாக இரண்டாவது பருவம். அதனால், இந்தப் பருவ இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்குள் முடித்து மீண்டும் சாம்பியன்ஸ் லீக்கில் இடம்பிடிப்பதே தங்களின் முதல் இலக்கு எனக் கூறி வருகிறார் ஆர்சனலின் புதிய நிர்வாகி உனாய் எமெரி. அந்த வகையில், இப்பருவத் தில் அக்குழுவின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அடுத்த பருவத் தில் சாம்பியன்ஸ் லீக்கிற்குள் நுழைந்துவிடும் என்றே தெரிகிறது.

போர்ன்மத் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. இதன்மூலம் நான்காமிடத்தில் உள்ள செல்சி யைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாகப் பெற்று அடுத்த இடத்தில் இருக்கிறது ஆர்சனல். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 17 ஆட்டங்களாக தோல்வியே காணாத குழுவாக ஆர்சனல் திகழ்ந்து வருகிறது. போர்ன்மத் வீரர் ஜெஃபர்சன் லெர்மா அடித்த சொந்த கோல் மூலம் ஆர்சனல் முன்னிலை பெற்றது.

ஆனாலும், முற்பாதியின் கடைசித் தருணத்தில் ஜோ‌ஷுவா கிங் அடித்த கோல் மூலம் ஆட்டம் சமனுக்கு வந்தது. இருப்பினும், 67வது நிமிடத்தில் பியர் எமெரிக் ஒபமெயாங் கோலடித்து ஆர்சன லின் வெற்றியை உறுதிசெய்தார். நடப்பு இபிஎல் பருவத்தில் அவர் அடித்த எட்டாவது கோல் இது. ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதும் தங்களது இலக்கை அடைய இது போதாது என்பதை அறிந்துள்ளோம் என்கிறார் எமெரி. இதனிடையே, நேற்று நடந்த ஆட்டமொன்றில் ஹடர்ஸ்ஃபீல்ட் டவுன் குழு 2-0 என்ற கோல் கணக்கில் உல்வ்ஸ் குழுவைத் தோற்கடித்தது.

வெற்றி கோலை அடித்த ஒபமெயாங் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்