வாழ்வா சாவா ஆட்டத்தில் பிஎஸ்ஜி

வாழ்வா சாவா ஆட்டத்தில் பிஎஸ்ஜி

2 mins read
c6e6bfcd-be2f-4fca-944f-f517163d2fed
-

பாரிஸ்: முதல்நிலை பிரெஞ்சுக் காற்பந்து லீக்கான 'லீக் 1'ல் முன்னிலையை விட்டுக்கொடுக்காமல் இருந்து வந்தாலும் பாரிஸ் செயின்ட் ஜெர்மான் (பிஎஸ்ஜி) குழுவால் ஐரோப்பிய அளவில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 2011-12 பருவத்தில் இருந்து தொடர்ச்சியாக 'நாக் அவுட்' சுற்றில் நுழைந்துள்ள அந்தக் குழு இந்தப் பருவத்தில் பிரிவுச் சுற்றுடன் வெளியேறும் அபாயம் நிலவுகிறது. சொந்த அரங்கில் நாளை நடக்கவிருக்கும் முக்கிய ஆட்டத்தில் லிவர்பூலுடன் அக்குழு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்று, மற்றொரு 'சி' பிரிவு ஆட்டத்தில் நேப்போலி குழு, ரெட் ஸ்டார் பெல்கிரேடு குழுவை வீழ்த்தும் பட்சத்தில் பிஎஸ்ஜி குழு சாம்பியன்ஸ் லீக்கிலிருந்து மூட்டை கட்ட நேரிடும்.

சாம்பியன்ஸ் லீக்கிலும் சாதிக்கவேண்டும் எனும் நோக்கில்தான் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரை 222 மில்லியன் யூரோ விலை கொடுத்து வாங்கியுள்ளது அக்குழு. டூலோஸ் குழுவிற்கு எதிராக கடந்த வாரம் நடந்த லீக் 1 ஆட்டத்தில் நெய்மாருடன் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் கிலியன் எம்பாப்பேயும் களமிறங்கவில்லை. காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையா விடினும் லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் அவ்விருவரும் களமிறக்கப்படுவர் என எதிர் பார்க்கப்படுகிறது. எடின்சன் கவானியும் அவர்களுடன் இணையும் பட்சத்தில் லிவர்பூலின் தற்காப்பு வரிசை கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும். லிவர்பூல் குழுவைப் பொறுத்த வரை, இந்த ஆட்டத்தில் வென்றால் அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகி விடும்.

இப்பருவத்தின் தொடக்கத்தில் கோலடிக்கத் தடுமாறி வந்த முகம்மது சாலா மீண்டும் தமது கோல் வேட்டையைத் தொடங்கி இருப்பது லிவர்பூலுக்குப் பெரும் பலம். அவருடன் ஃபிர்மினோ, சாடியோ மானே ஆகியோரும் நல்ல ஆட்டத்திறனுடன் இருப்பதால் தியாகோ சில்வா, மார்க்குவினோஸ் ஆகியோர் அடங்கிய பிஎஸ்ஜி யின் தற்காப்பு வரிசையும் தடுமாறக்கூடும். "மிக மிகக் கடினமான 'சி' குழுவில் இடம் பெற்றுள்ள நிலையில் இந்த ஆட்டமே எங்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது," என்றார் பிஎஸ்ஜி நிர்வாகி தாமஸ் டகல்.

நான்கு புள்ளிகளுடன் 'பி' பிரிவில் மூன்றாம் இடத்தில் உள்ள டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வென்றால்தான் அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில், இன்டர் மிலான் குழுவுடன் நாளை பொருதவுள்ளது.