தொடரைக் கைப்பற்றுவதில் முழு கவனம்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் முழுக் கவனத்துடன் தமது அணியினர் இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா (படம்) நம்பிக்கை தெரிவித்து உள்ளார். "எங்கள் முன் இருக்கும் ஆகப் பெரிய பணி தொடரை வெல்வதுதான். அது குறித்தே எல்லாரது கவனமும் இருக்கிறது," என்று இஷாந்த் கூறினார். தனிப்பட்ட சாதனைகள் குறித்து எவரும் சிந்திக்கவே இல்லை எனக் குறிப்பிட்ட இஷாந்த், ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லவேண்டும் என்பதுதான் தங்களது ஒரே இலக்கு என்றும் சொன்னார்.

சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொண்டு, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார் இவர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் அடுத்த மாதம் 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் இருக்கும் இந்திய அணி, அடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மோதும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்குகிறது.