ராய்ப்பூர்: இந்தியாவின் ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாம் டி20 போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வெற்றிபெற்றுள்ளது.
முதலில் பந்தடித்த நியூசிலாந்து, ஆறு விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்களை எடுத்தது. தொடக்கத்தில் நியூசிலாந்து ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினாலும் பின்னர் விக்கெட்டுகளை இழந்ததால் ஓட்டமெடுக்கும் வேகம் தடைபட்டது.
அணித்தலைவர் மிஷெல் சான்ட்னர் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரச்சின் ரவீந்திரா, சிறப்பாக ஆடி 26 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் அருமையாகப் பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
209 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பம் சோதனையாக அமைந்தது. ஆறு ஓட்டங்கள் எடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் உடனே அபிஷேக் ஷர்மாவும் ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷனுடன் இணை சேர்ந்த இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், ஆரம்பத்தில் நிதானமாக ஆடினார். மறுபக்கம் இஷான் கிஷன் நியூசிலாந்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இருவரும் சேர்ந்து மூன்றாம் விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களைக் குவித்தனர். 32 பந்துகளில் 72 ஓட்டங்களை விளாசிய நிலையில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் இறுதிவரை 37 பந்துகளில் 82 ஓட்டங்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் சேர்ந்து ஷிவம் டுபேயும் 18 பந்துகளில் 36 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 28 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியா இலக்கை எட்டிப்பிடித்தது.
ஆட்ட நாயகன் விருதை இஷான் கிஷன் பெற்றார்.

