இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட்

இங்கிலாந்து அணியில் 35 வயது சுழற்பந்து வீச்சாளர்

1 mins read
e5becace-2125-4db8-a1c0-e31b31cb9b71
லியம் டாசன். - படம்: எக்ஸ்

மான்செஸ்டர்: காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் சோயப் பஷீருக்குப் பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 35 வயதான லியம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிராக லண்டன் லார்ட்ஸ் திடலில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது 22 வயது பஷீருக்கு விரலில் காயமேற்பட்டது. அதனைப் பொருட்படுத்தாது பந்துவீசி, இந்திய அணியின் கடைசி விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.

அப்போட்டியில் இந்திய அணி போராடி 22 ஓட்ட வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில், இம்மாதம் 23ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் பஷீருக்குப் பதிலாக டாசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசியாக அவர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதுவரை மொத்தமே மூன்று டெஸ்ட் போட்டிகளில்தான் அவர் விளையாடியிருக்கிறார்.

இந்நிலையில், ஹேம்ப்ஷியர் கவுன்டி அணிக்காகப் பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் தேசிய அணியில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவருடன் வேகப் பந்துவீச்சாளர் கஸ் ஆட்கின்சனும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் ஆட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹேரி புரூக், பிரைடன் கார்ஸ், ஸாக் குரோலி, லியம் டாசன், பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.

குறிப்புச் சொற்கள்