தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பரபரப்பான ஆட்டம்: இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி

2 mins read
84b6a525-c2c1-4828-a850-04dc7cfaf73b
ஆப்கானிஸ்தான் வீரரை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

பெங்களூரு: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, விறுவிறுப்பிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

இரண்டாவது ‘சூப்பர் ஓவர்’ வரையிலும் சென்ற அப்போட்டியில் இந்தியா வாகை சூடியது.

அனைத்துலக டி20 போட்டி ஒன்று, இரண்டாவது சூப்பர் ஓவர்வரை சென்றது இதுவே முதன்முறை.

இதனையடுத்து, மூன்று போட்டிகள் தொடரையும் அது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி, 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. விராத் கோஹ்லியும் சஞ்சு சாம்சனும் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஆயினும், ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த அணித்தலைவர் ரோகித் சர்மாவும் ரிங்கு சிங்கும் மேலும் விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். அத்துடன், கடைசி ஐந்து ஓவர்களில் அவ்விருவரும் சேர்ந்து 103 ஓட்டங்களை விளாசினர். கடைசி ஓவரில் ஐந்து சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைக் குவித்தது.

ரோகித் 121 ஓட்டங்களையும் ரிங்கு 69 ஓட்டங்களையும் எடுத்தனர். இதன்மூலம் அனைத்துலக டி20 போட்டிகளில் அதிக சதங்கள் (ஐந்து) அடித்தவர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார்.

கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்கம் அருமையாக இருந்தது. ரஹ்மானுல்லா குர்பாசும் அணித்தலைவர் இப்ராகிம் ஸத்ரானும் ஆளுக்கு 50 ஓட்டங்களை எடுத்தனர்.

அதன்பின் குல்பதீன் நயிப் (55*), முகம்மது நபி (34) இருவரும் அதிரடியாகப் பந்தடித்தனர். கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் சேர்க்கப்பட, ஆப்கானிஸ்தானும் 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களை எடுத்தது.

இதனால் ஆட்டம் சமநிலைக்கு வர, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.

முதல் சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 16 ஓட்டங்களை எடுத்ததால், ஆட்டம் இரண்டாவது சூப்பர் ஓவருக்குச் சென்றது.

அதில் முதலில் பந்தடித்த இந்திய அணி 11 ஓட்டங்களை எடுத்தது. 12 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், மூன்று பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, ஓர் ஓட்டத்தை மட்டும் எடுத்துத் தோற்றது.

ஆட்ட நாயகன் விருதை ரோகித்தும் தொடர் நாயகன் விருதை சிவம் துபேவும் வென்றனர்.

குறிப்புச் சொற்கள்