ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா சதமடித்தார்.
இந்திய அணியில் பந்தடிப்பாளர் சர்ஃபராஸ் கான், விக்கெட் காப்பாளர் துருவ் ஜுரேல் என இரு புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (10), ஷுப்மன் கில் (0), ரஜத் பட்டிதார் (5) என தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா.
இந்நிலையில், ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
அருமையாக விளையாடிய ரோகித் சதமடித்தார். இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 11வது சதம். அவர் 131 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு ரோகித்தும் ஜடேஜாவும் இணைந்து 203 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
அதன்பின் களம் கண்ட சர்ஃபராஸ் மளமளவென ஓட்டங்களைக் குவித்தார். அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் கடந்த அவர், துரதிர்ஷ்டவசமாக 62 ஓட்டங்களில் ‘ரன் அவுட்’ ஆகி வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய ஜடேஜாவும் சதமடித்தார். இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் நான்காவது சதம்.
தொடர்புடைய செய்திகள்
முதல் நாள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஜடேஜா 110 ஓட்டங்களுடனும் குல்தீப் யாதம் ஓர் ஒட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றன.