சிட்னி: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம், ஆஷஸ் தொடரை அவ்வணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரின் நான்காவது போட்டியை இங்கிலாந்து வென்றிருந்தது.
சிட்னியில் நடந்த ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 384 ஓட்டங்களையும் ஆஸ்திரேலியா 567 ஓட்டங்களையும் குவித்தன.
இரண்டாவது இன்னிங்சில் ஜேக்கப் பெத்தேல் 154 ஓட்டங்களை விளாச, இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து, வெற்றிக்குத் தேவையான 160 ஓட்டங்களை 31.2 ஓவர்களிலேயே எடுத்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா.
முதல் இன்னிங்சில் 163 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 29 ஓட்டங்களையும் எடுத்த ஆஸ்திரேலியத் தொடக்கப் பந்தடிப்பாளர் டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார். ஐந்து போட்டிகளிலும் சேர்த்து 31 விக்கெட்டுகளைச் சாய்த்த ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடர்நாயகனாகத் தேர்வுபெற்றார்.
ஆஷஸ் தொடரில் தோற்றபோதும் இங்கிலாந்து அணித்தலைவராகத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார் 34 வயதான பென் ஸ்டோக்ஸ். அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் பிரண்டன் மெக்கல்லத்திற்குத் தம் ஆதரவைத் தெரிவித்த ஸ்டோக்ஸ், அதே நேரத்தில் தமது அணியின் அணுகுமுறை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதை ஒத்துக்கொண்டார்.
இங்கிலாந்து அணி மோசமாக விளையாடியபோதும், சிட்னி விளையாட்டரங்கில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியைக் காண 211,032 ரசிகர்கள் திரண்டனர். இதற்குமுன் அங்கு நடந்த ஒரு போட்டியை இத்தனை பேர் கண்டுகளித்ததில்லை.

