மியூனிக்: பிரான்சின் பிஎஸ்ஜி காற்பந்துக் குழு, தனது வரலாற்றில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) கிண்ணத்தை வென்றுள்ளது.
போட்டியின் இறுதியாட்டத்தில் இத்தாலியின் இன்டர் மிலானை 5-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்து கிண்ணத்தை வென்றது பிஎஸ்ஜி. லயனல் மெஸ்ஸி, நேமார், கிலியோன் எம்பாப்பே போன்ற நட்சத்திர வீரர்களுடன் செய்ய முடியாததை இளம் ‘சுட்டிக் குழந்தை’ வீரர்களுடன் பிஎஸ்ஜி சாதித்துவிட்டது.
ஆட்டத்தில் டெசிரே டுவே பிஎஸ்ஜிக்கு இரண்டு கோல்கள் போட்டார். அஷ்ராஃப் ஹக்கிமி, குவிச்சா க்வாராட்ஷ்கேலியா, செனி மயுலு ஆகியோர் மற்ற கோல்களைப் போட்டனர்.
இப்பருவம் பிரெஞ்சு லீக் விருது, பிரெஞ்சு கிண்ணம் ஆகியவற்றையும் பிஎஸ்ஜி கைப்பற்றியது. ஐரோப்பியக் காற்பந்து வரலாற்றில் குறிப்பிட்ட சில குழுக்கள் மட்டுமே ஒரே பருவத்தில் லீக் விருது, உள்ளூர் கிண்ணப் போட்டி, யுசிஎல் ஆகிய மூன்றிலும் வாகை சூடியிருக்கின்றன.
மேலும், யுசிஎல்லின் 70 ஆண்டுகால வரலாற்றில் இறுதியாட்டத்தில் எந்தக் குழுவும் இத்தனை கோல் வித்தியாசத்தில் வென்றதில்லை.
அதோடு, இதற்கு முன்பு ஒரு பிரெஞ்சு குழு மட்டுமே யுசிஎல் கிண்ணத்தை வென்றிருந்தது. 1993ஆம் ஆண்டு பிரான்சின் மார்செ வாகை சூடியது.
பிஎஸ்ஜி பயிற்றுவிப்பாளர் லூயி என்ரிக்கேக்கு இது இரண்டாவது யுசிஎல் வெற்றியாகும்.
முன்னதாக அவர் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது ஸ்பெயினின் பார்சிலானோ விருதைக் கைப்பற்றியது.