ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தங்கமகள் சாந்தியை வரவேற்க சாங்கி விமான நிலையத்தில் வியாழக்கிழமையன்று கிட்டத்தட்ட 70 பேர் கூடினர்
கைகளில் நோட்டுப் புத்தகம், பேனா, பூ, பூமாலைகள், வரவேற்பு அட்டைகள் அவரவர் கைத்தொலைபேசி என சாந்தியின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க காத்திருந்தனர். தங்கள் அபிமான விளையாட்டு வீராங்கனையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வமுடன் அவர்கள் காத்திருந்தனர்.
இதில் சிங்கப்பூர் வந்திறங்கும் பயணிகள் முதல் சாந்தி பெரேரா பற்றி அறியாதவர்கள் வரை சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில் குழுமியிருந்த புகைப்படக்காரர்களுடன் கலந்து நின்ற வரவேற்பாளர்களைக் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் ஆர்வமிகுதியால் யாருக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள் என்று கேட்க, ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவருக்காக என அவர்களுக்கு பதில் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து முகமெல்லாம் மகிழ்ச்சியில் மலர, குடும்பத்தினர், நண்பர்கள், அதிகாரிகள், ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துக் குரல்களுக்கு இடையே விமான நிலைய வரவேற்புக் கூடத்திற்கு சாந்தி வந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்துக்காக 49 ஆண்டுகள் காத்திருந்த சிங்கப்பூருக்கு சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்ற போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திங்கட்கிழமை வெற்றி வாகை சூடி தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார் சாந்தி பெரேரா.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாந்தி, “இங்கு குழுமியிருக்கும் அனைவரும் பரபரப்புடன் இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது, இவர்களுடன் எனது குடும்ப உறுப்பினர்களும் வரவேற்க வந்துள்ளனர். இது ஒரு இனிய, கண்ணுக்கு குளிர்ச்சியான வரவேற்பு.”
“முதலில் நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன். இந்த மாதம் முழுவதும் ஓய்வுதான். பின்னர் எஞ்சிய இவ்வாண்டு முழுவதும் பொதுவான ஆயத்தப் பயிற்சி. எனது புதிய ஓட்டப் பந்தய பருவத்தை அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்குவேன்,“ என்று கூறினார்.