தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அபி‌ஷேக்-கில் அதிரடி: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

2 mins read
b9e337b8-3bcb-41e7-bfb4-c950d8747559
இந்தியாவின் அபி‌ஷேக் ‌ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் அனைத்துலக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற டி20 ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் நான்கு போட்டியில் ஒரு பந்தை விளாசும் காட்சி. - படம்: ஏஎஃப்பி

துபாய்: இந்தியா, ஆசியக் கிண்ண டி20 போட்டிகளில் பாகிஸ்தான் மீதான அதன் ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

சூப்பர் நான்கு சுற்றில் இரு தரப்பும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மோதிய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. ஆட்டம், துபாயில் உள்ள துபாய் அனைத்துலக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பூவா தலையாவில் வென்ற இந்தியா, பந்துவீச முடிவெடுத்தது. பாகிஸ்தான், ஐந்து விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் சஹிப்ஸடா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ஓட்டங்களை எடுத்தார். அவர் இரண்டு முறை வாய்ப்புக் கொடுத்தார்.

அவற்றையும் சேர்த்து மொத்தம் நான்கு முறை பந்துகளைப் பிடிக்கத் தவறினர் இந்திய வீரர்கள். அபி‌ஷேக் ‌ஷர்மா இரு முறையும் குல்தீப் யாதவ், ‌ஷுப்மன் கில் ஆளுக்கு ஒரு முறையும் பாகிஸ்தான் மட்டையாளர்கள் அடித்த பந்தைப் பிடிக்கத் தவறினர். ‌

ஷிவம் டுபே அற்புதமாகப் பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவும் ஹர்திக் பாண்டியாவும் ஆளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு ஏமாற்றம் அளித்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய அபி‌ஷேக் ‌ஷர்மாவும் ‌ஷுப்மன் கில்லும் வெற்றி இலக்கை எட்டும் பணியை எளிதாக்கினார்கள்.

அபி‌ஷேக் ‌ஷர்மா அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்தார். அவர் ஐந்து சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடித்தார்.

கில் 28 பந்துகளில் எட்டு பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களை எடுத்தார். இருவரும் சேர்ந்து 105 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் சொற்ப ஓட்டங்களில் திரும்பினார்.

30 ஆட்டங்கள் எடுத்த திலக் வர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் ஏழு பந்துகள் எஞ்சிய நிலையில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

இதற்கு முன்னர் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தைப் போலவே இம்முறையும் இரு தரப்பும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.  

குறிப்புச் சொற்கள்