கிங்ஸ்டன்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை ஆப்கானிஸ்தான் சந்திக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு டிரினிடாட்டில் நடக்கிறது.
டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் முதல்முறையாக அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
இத்தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ் என அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்காவுக்கும் கடுமையான போட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணி இத்தொடரில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் அந்த அணிக்குப் பலம் சேர்க்கின்றனர்.
இருப்பினும், பந்தடிப்பாளர்கள் போதிய அளவில் ஓட்டங்கள் குவிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணியின் பலம் பந்துவீச்சு என்பதால் தென்னாப்பிரிக்காவிற்கு இது சவாலான ஆட்டமாக இருக்கும்.
இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லாத தென்னாப்பிரிக்கா இம்முறை வெற்றிக்கு மிக அருகில் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.