காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான இஷானுல்லா ஜனத் கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பங்கேற்க முடியாது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் (ஐசிசி) ஊழல் தடுப்பு விதிகளை மீறியதால் இஷானுல்லாவிற்கு ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
காபூல் பிரிமியர் லீக்கின் இரண்டாம் பருவத்தின்போது, ஆட்ட முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயிப்பது உள்ளிட்ட விதிகளை அவர் மீறியதாகச் சொல்லப்பட்டது.
ஊழல் நடவடிக்கைகளில் தனக்குத் தொடர்பிருந்ததையும் தன்மீதான குற்றச்சாட்டுகளையும் ஜனத் ஒப்புக்கொண்டார்.
26 வயதான இஷானுல்லா இதுவரை மூன்று டெஸ்ட், 16 ஒருநாள், ஒரு டி20 என ஆப்கானுக்காக 20 முறை அனைத்துலகப் போட்டிகளில் களமிறங்கி, நான்கு அரைசதங்களையும் அடித்துள்ளார்.
இதனிடையே, ஆட்ட முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் மூன்று வீரர்கள்மீது சந்தேகப்படுவதாகவும் அவர்கள்மீதான விசாரணை தொடர்வதாகவும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

