கிங்ஸ்டவுன்: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறி சாதித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானும் பங்ளாதேசும் மோதின. ஆட்டத்தை வெல்லும் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால் இரு அணிகளும் கடுமையாகப் போராடின.
வாக்குவாதம், மழை, நேர வீணடிப்பு, காயம் என ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் அனல் பறந்தது.
முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்கள் எடுத்தது. குர்பாஸ் 43 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடிகாட்டிய அணித்தலைவர் ரஷித் கான் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
இலக்கை விரட்ட பங்களாதேஷ் களமிறங்கிய போது சிறிது நேரம் மழை குறுக்கிட்டது.
ஆட்டத்தை 12 ஓவர்களில் முடித்தால் பங்ளாதேஷ் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் அந்த அணியின் பந்தடிப்பாளர்கள் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியைநோக்கி நகர்ந்தது.
ஆட்டத்தில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் பங்ளாதேஷ் அணி 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
லின்டன் தாஸ் பொறுப்பாக விளையாடி 54 ஓட்டங்கள் எடுத்தார், ஆனால் மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இறுதியில் பங்ளாதேஷ் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தொடர்புடைய செய்திகள்
சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருக்கு பக்கபலமாக இருந்த நவீன் உல் ஹாக் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர். ஆட்டநாயகன் விருது நவீனுக்கு வழங்கப்பட்டது.
ஜூன் 27ஆம் தேதி நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதும்.