நூலிழையில் தப்பிய தென்னாப்பிரிக்காஅலறவிட்ட ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்:

நூலிழையில் தப்பிய தென்னாப்பிரிக்காஅலறவிட்ட ஆப்கானிஸ்தான்

2 mins read
029d03f8-cfe3-49e6-b40b-7bf9f4943b74
அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் ர‌ஷிட் கான் அவுட்டானதைக் கொண்டாடும் தென்னாப்பிரிக்க வீரர்கள். - படம்: ஏஎஃப்பி

அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா, நூலிழையில் ஆப்கானிஸ்தானை வெற்றிகண்டது.

ஆட்டம், இரண்டு சூப்பர் ஓவர் வரை சென்று, கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுசென்றது.

முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்கா, 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை எடுத்தது. குவின்டன் டி காக் 59 ஓட்டங்களையும் ரையன் ரிக்கிள்டன் 61 ஓட்டங்களையும் அதிவேகத்தில் சேர்த்தனர். ஆப்கானிஸ்தானின் அஸ்மட்டுல்லா ஒமார்ஸாய் மூன்று விக்கெட்டுகளையும் ர‌‌ஷிட் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பந்தடித்த ஆப்கானிஸ்தான், 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசிப் பந்தடிப்பாளரான ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ரன் அவுட்டானார்.

சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான், விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா, முதல் ஐந்து பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஃபஸல்ஹக் வீசிய இறுதிப் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர் அடித்து, ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

பின்னர் இரண்டாம் சூப்பர் ஓவரில், தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அது விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தபோது அந்த அணி எந்த ஓட்டமும் எடுத்திருக்கவில்லை. அடுத்து வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ், தென்னாப்பிரிக்காவின் கே‌ஷவ் மஹராஜ் வீசிய மூன்று பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தை மஹராஜ் வைடாகப் போட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு இறுதிப் பந்தில் ஐந்து ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, நான்கு எடுத்தால் சமநிலை என்ற சூழல். மஹராஜ் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றார் குர்பாஸ். ஆனால் அவர் அடித்த பந்தை மில்லர் பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

தென்னாப்பிரிக்கா நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. இறுதிவரை போராடிய ஆப்கானிஸ்தானிய வீரர்கள், நொடிகளில் மாறிய நிலவரத்தை நினைத்து வேதனையில் ஆழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்