ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

2 mins read
692d0652-bad9-41ed-a1b5-df48d15e3b8f
4 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷித் கான். - படம்: ஊடகம்

கயானா: டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டம் சனிக்கிழமை காலை கயானாவில் நடந்தது.

அதில் பலம்வாய்ந்த நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. பூவா தலையாவில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித்தது.

20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் குவித்தனர்.

இப்ராஹிம் ஸத்ரான், 44 ரன்களில் ஆட்டமிழந்தார். 56 பந்துகளில் 80 ஓட்டங்கள் எடுத்தார் குர்பாஸ்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபின் ஆலன் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே, டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து, 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மறுமுனையில் அணித்தலைவர் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

சிறப்பாக ஓட்டங்கள் குவித்த ரஹ்மானுல்லா குர்பாசுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

எப்போதும் களகாப்பில் அசத்தலாக செயல்படும் நியூசிலாந்து இந்த ஆட்டத்தில் மிக மோசமாக செயல்பட்டது.

அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்