தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானுடன் டி20 கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் விலகல்

2 mins read
5764861d-7a14-4927-a370-8296281633c5
பக்திக்கா மாநிலத்தின் உர்குன் வட்டாரத்தில் பாகிஸ்தானிய தாக்குதல்களுக்குப் பலியானோரின் இறுதிச் சடங்கு. - படம்: ஏஎஃப்பி

காபூல்: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள மூன்று அணிகள் பங்குபெறும் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகிக்கொண்டுள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டாளர்கள் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், தொடரிலிருந்து விலகிக்கொண்டுள்ளது. அந்த மூவரும், பக்டிக்கா மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.

வரும் நவம்பர் மாதம் 17லிருந்து 29ஆம் தேதி வரை பாகிஸ்தானின் லாகூர், ரவால்பிண்டி நகரங்களில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கவிருந்தன.

கொல்லப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மூவரும் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் விளையாட பக்திக்கா மாநிலத் தலைநகர் ‌ஷரனா நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. பிறகு உர்குன் வட்டாரத்தில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பியபோது அவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் என்று வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டது.

“இதை, ஆப்கானிஸ்தான் விளையாட்டுச் சமூகம், அதன் விளையாட்டாளர்கள், கிரிக்கெட் குடும்பம் ஆகிய தரப்புகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பார்க்கிறது,” என்று வாரியம் அறிக்கையில் வருத்தம் தெரிவித்தது.

“இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பதில் நடவடிக்கையாகவும் மாண்டோருக்கு மரியாதை செலுத்தவும் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டுள்ள மூன்று அணிகள் கலந்துகொள்ளும் டி20 அனைத்துலகத் தொடரிலிருந்து விலகிக்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது,” என்று வாரியம் தெரிவித்தது.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தங்களுக்கிடையே நடப்பில் இருந்த 48 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கூடுதல் காலத்துக்கு நீட்டித்துள்ளதாக தகவல் தெரிந்தவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்