புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இவ்வாரம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதற்கான அணிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில் பந்தடிப்பாளர்கள் ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா இருவருக்கும் இடமளிக்கப்படாததை அடுத்து, அணித்தேர்வு குறித்து குறைகூறல்கள் எழுந்தன.
குறிப்பாக, ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை காட்டமாக விமர்சித்திருந்தார் புகழ்பெற்ற வருணனையாளரான ஹர்ஷா போக்ளே.
“இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ருதுராஜ். அவர் விளையாடிய கடைசி நான்கு, ஐந்து போட்டிகளைப் பார்த்தாலே அது புரியும். அவர் இல்லாத அணியைத் தேர்வுசெய்தால், அதனை ஏதோ வேறு கோளிலிருந்து வந்த இந்திய அணியாகத்தான் பார்க்க முடியும்,” என்று ஹர்ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரும் புதிய தலைமைப் பயிற்றுநர் கௌதம் காம்பீரும் திங்கட்கிழமை (ஜூலை 22) கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ருதுராஜ், அபிஷேக் இருவரையும் இருவகைப் போட்டிகளிலும் விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சனை ஒருநாள் போட்டித் தொடருக்கும் தேர்வுசெய்யாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த அகர்கர், “இடம் கிடைக்காத ஒவ்வொரு வீரரும் சிரமமாக உணர்வர். 15 பேரை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கான சவால். சரியான சமநிலை கொண்ட அணியைத் தேர்வுசெய்ய முயலும்போது சிலருக்கு இடம் கிடைக்காமல் போகலாம். அண்மைக் காலமாக சிலர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடி இருக்கலாம். ஆனால், அவர்களுக்கான இடங்களில் வேறு யாரைத் தேர்வுசெய்துள்ளோம் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் வாய்ப்பு பெற தகுதியானவர்கள் இல்லையா? அப்படி இல்லையெனில், அதுபற்றிப் பேசலாம்,” என்றார்.
இலங்கை தொடரில் இடம்பெறாத சிலருக்கு, ஸிம்பாப்வே தொடரில் வாய்ப்பளித்ததாகக் குறிப்பிட்ட அகர்கர், “அது நல்லதுதான். இப்போதைய அணியில் சிலர் நன்றாகச் செயல்படாமல் போனால் அல்லது காயமடைந்தாலும் நம்மிடம் போதிய திறனாளர்கள் உள்ளனர்,” என்றும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா - இலங்கை இடையிலான டி20 போட்டிகள் ஜூலை 27, 28, 30ஆம் தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7ஆம் தேதிகளிலும் நடக்கவுள்ளன.

