சவூதி அரேபியாவில் வியாழக்கிழமை (ஜனவரி 19) நடைபெற்ற நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி இருவருக்கும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டின் இறுதிச்சுற்றில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, பிரான்சை பெனால்டி வாய்ப்புகளில் வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அதேவேளையில், மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி, உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் மொரோக்கோவிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
சவூதி காற்பந்துக் குழுவான அல் நாசர் ஆண்டுக்கு US$214 மில்லியனுக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் இந்த ஒப்பந்தம் 2025 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் நேரடியாக மோதிக்கொள்ளும் நட்புமுறை ஆட்டம் சவூதி தலைநகர் ரியாத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
அல் நாசர் குழுவுக்கு ஒப்பந்தமான ரொனால்டோ, ரியாத் லெவன் அணிக்காகவும் மெஸ்ஸி, பாரிஸ் செயிண்ட் ஜெமேன் குழுவுக்காகவும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்குவதற்குமுன் திடலுக்கு வந்த அமிதாப் பச்சன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த ஆட்டத்துக்கான 'விஐபி' நுழைவுச்சீட்டை ஏலத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1 மில்லியன் சவூதி ரியாலில் இருந்து (US$266,000) ஏலம் தொடங்கியது. ஏலத்தில் 'விஐபி' நுழைவுச்சீட்டை பெறுபவர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவை சந்திக்கவும் வெற்றிபெறும் அணியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
ஏலம் 10 மில்லியன் ரியாலை தாண்டியது. தொழிலதிபரான முஷ்ரப் அல் கம்தி, US$2.66 மில்லியன் (10 மில்லியன் ரியால்) கொடுத்து 'விஐபி' நுழைவுச்சீட்டை வாங்கினார்.
ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தது. இறுதியில் ஆட்டம் 5-4 எனும் கோல் கணக்கில் பாரிஸ் செயிண்ட் ஜெமேனுக்குச் சாதகமாக முடிந்தது. ஆட்டத்தில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் கோல் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

