லண்டன்: கடந்த வாரம் தொடங்கிய 2024-25 இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முதல் ஆட்டத்திலேயே டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவினர் சொதப்பியது அதன் நிர்வாகி ஆஞ்ச் போஸ்டகாக்லோவை எரிச்சலடையச் செய்துள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலை லெஸ்டர் சிட்டி - ஸ்பர்ஸ் குழுக்கள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
லெஸ்டர் குழுவின் கிங் பவர் விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டத்தின் முற்பாதியிலேயே கோலடித்து ஸ்பர்சுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் பெட்ரோ போரோ.
ஆயினும், 57ஆவது நிமிடத்தில் லெஸ்டர் குழுவின் அனுபவ ஆட்டக்காரரான 37 வயது ஜேமி வார்டி தலையால் முட்டி அடித்த கோலால் ஆட்டம் சமனுக்கு வந்தது.
முற்பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் ஸ்பர்ஸ் குழுவால் வெற்றிபெற முடியாதது தமக்கு வியப்பளிப்பதாகக் கூறினார் போஸ்டகாக்லோ.
“ஏமாற்றம் தரும் இரவு. முற்பாதியில் நாங்கள் அருமையாக ஆடி, ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனாலும், கோல்களை அடிக்கத் தவறிவிட்டோம். லெஸ்டர் கோலடித்ததும் ரசிகர்கள் அளித்த ஆதரவு, அக்குழுவினரை மேலும் முனைப்புடன் விளையாடும்படி ஊக்குவித்தது. நாங்கள் எங்களது கட்டுக்கோப்பை இழந்துவிட்டோம்,” என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.
அடுத்ததாக வரும் சனிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு, எவர்ட்டனுடன் பொருதவிருக்கிறது.
போஸ்டகாக்லோ வழிநடத்தலின்கீழ் ஸ்பர்ஸ் குழு கடந்த பருவத்தை ஐந்தாமிடத்துடன் முடித்தது குறிப்பிடத்தக்கது.

