கோலாலம்பூர்: இவ்வாண்டுக்கான பஹ்ரேன் எஃப்1 பந்தயம் மலேசியாவில் இவ்வார இறுதியில் நடைபெறுகிறது.
‘ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரேன் கிராண்ட் பிரி’ என்றழைக்கப்படும் அந்தப் பந்தயம் ஆர்டிஎம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) அறிவித்தார். இந்த நேரடி ஒளிபரப்பு, செப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடலில் நடக்கும் உலகத் தரம்வாய்ந்த பந்தயத்தை மலேசியர்கள் அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“மலேசியர்களுக்கு நற்செய்தி! அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரேன் கிரோண்ட் பிரியை ஆர்டிஎம் மலேசியாவில் நேரடியாக ஒளிபரப்பும்.
“செப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடலில் நடக்கும் உலகத் தரம்வாய்ந்த பந்தயத்தின் உற்சாகத்தை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மக்கள் அனுபவிக்க இந்த நேரடி ஒளிபரப்பு வாய்ப்பளிக்கும் என நான் நம்புகிறேன்,” என்று திரு அன்வார் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
செப்பாங் அனைத்துலகப் பந்தயத் திடல், ஓர் ஒப்பந்தத்தின்கீழ் இந்தப் பந்தயத்தைத் தற்காலிகமாக நடத்துவதற்கான இடமாக விளங்குகிறது. அந்த ஏற்பாட்டின் மூலம் இவ்வாண்டுக்கான பஹ்ரேன் கிராண்ட் பிரியை நடத்த முடிகிறது.
மேற்கு ஆசியாவில் காணப்படும் பதற்றநிலையால் முன்னதாக நடக்கவிருந்த பஹ்ரேன் கிராண்ட் பிரி தள்ளிப்போனது.
