ஆறாண்டுகளுக்குப்பின் அர்ஜென்டினா முதலிடம்

ஆறாண்டுகளுக்குப்பின் அர்ஜென்டினா முதலிடம்

1 mins read
3be8f5f9-39bc-489d-b3b0-9eecb4f7a58c
சென்ற மாதம் 23ஆம் தேதி பியூனஸ் அய்ரசில் நடந்த பனாமாவிற்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தின்போது, உலகக் கிண்ணங்களை உயர்த்தி, தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிய அர்ஜென்டினா அணியினர். படம்: ராய்ட்டர்ஸ் -

அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பின் (ஃபிஃபா) காற்பந்துத் தரவரிசைப் பட்டியலில் அர்ஜென்டினா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம் பிடித்துள்ளது.

இதற்குமுன் கடைசியாக அந்த அணி 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலிடத்தில் இருந்தது.

லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடந்த டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மகுடம் சூடியது.

அண்மையில் நடந்த நட்புமுறை ஆட்டங்களில் அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் பனாமாவையும் 7-0 என்ற கோல் கணக்கில் கியூரசாவையும் வென்றது.

பட்டியலின் முதலிடத்தில் இருந்த பிரேசில் மூன்றாமிடத்திற்கு இறங்கியது. சென்ற மாதம் நடந்த நட்புமுறை ஆட்டத்தில் அவ்வணி 0-2 என்ற கோல் கணக்கில் மொரோக்கோவிடம் வீழ்ந்தது.

பிரான்ஸ் அணி இரண்டாமிடத்திற்கு முன்னேறியது. பெல்ஜியம், இங்கிலாந்து, நெதர்லாந்து, குரோவேஷியா, இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய அணிகள் முறையே நான்காமிடத்தில் இருந்து இறங்குவரிசையில் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் பத்தாமிடத்தில் இருக்கிறது.

இந்தியா 101வது இடத்திலும் மலேசியா 138வது இடத்திலும் சிங்கப்பூர் 158வது இடத்திலும் உள்ளன. இதற்குமுன் இந்தியா 106வது இடத்திலும் மலேசியா145வது இடத்திலும் சிங்கப்பூர் 160வது இடத்திலும் இருந்தன.