லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் மிகச் சிறந்த தொடக்கத்தைத் தந்துள்ள லிவர்பூல் காற்பந்துக் குழு, தம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து வருவதாக அதன் நிர்வாகி ஆர்னி ஸ்லாட் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) ஆர்சனலுக்கு எதிரான கடினமான ஆட்டத்துக்கு லிவர்பூல் தயாராகி வரும் வேளையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். .
இந்தப் பருவம் லிவர்பூல் விளையாடியுள்ள எட்டில் ஏழு ஆட்டங்களில் வென்றுள்ளது. அதுபோக, மூன்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களிலும் அக்குழு வாகை சூடியுள்ளது.
இப்போது, ஆர்சனல் உடனான ஆட்டத்தில் வென்று ஏழு புள்ளிகள் வித்தியாசத்தில் லீக்கில் முன்னிலை வகிக்க ஸ்லாட் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
ஆர்சனல் குழுவில் முக்கிய ஆட்டக்காரர்கள் இடம்பெறாவிட்டாலும், அதற்கு எதிராகக் கடினமான ஆட்டத்தை தாம் எதிர்பார்ப்பதாக ஸ்லாட் கூறினார்.
சிறந்த ஆட்டத்திறன் கொண்ட சில வீரர்கள் காயம் காரணமாக லிவர்பூல் உடனான ஆட்டத்தில் களமிறங்க முடியாவிட்டாலும், சவாலைச் சமாளிக்க தம் குழுவில் போதுமான தரம் இருப்பதாக ஆர்சனல் நிர்வாகி மிக்கேல் ஆர்டேட்டா கூறினார்.