லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஆர்சனல் குழு வலுவான நிலையில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (ஸ்பர்ஸ்) குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது.
இதன் மூலம் லீக் பட்டியலில் ஆர்சனல் மீண்டும் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ச்சியான சமநிலைகளைப் பதிவு செய்ததால் ஆர்சனலுக்குச் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் அது சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆர்சனலுக்காக எபெரெச்சி இசே மற்றும் விக்டர் கியோகெரெஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களை போட்டனர்.
1978ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 5-0 வெற்றிக்குப் பிறகு, ஸ்பர்சின் விளையாட்டரங்கில் ஆர்சனல் பெற்ற மிகப் பெரிய லீக் வெற்றி இதுவாகும்.
28 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஆர்சனல் 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 21) நியூகாசல் யுனைடெட்டை வீழ்த்தி அழுத்தம் கொடுத்த மான்செஸ்டர் சிட்டி, 56 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்சனலைவிட அது ஓர் ஆட்டம் குறைவாக விளையாடி உள்ளது.
பட்டத்திற்கான போட்டியில் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் இல்லாவிட்டாலும், முதல் நான்கு இடங்களுக்குள் அது வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இரண்டாம் நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ள நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் கோல் போட்டு 1-0 எனும் கோல் கணக்கில் அது வெற்றி பெற்றது.
மற்றோர் ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸ் 1-0 எனும் கோல் கணக்கில் உல்வ்ஸ் குழுவைத் தோற்கடித்தது.
ஃபுல்ஹம் 3-1 எனும் கோல் கணக்கில் சண்டர்லேண்ட் குழுவை வீழ்த்தியது.

